கடைசியில்
அவமானங்களுக்கு நான் "ஐஸ்கிரீம்" என்று பெயர் சூட்டிவிட்டேன். இவ்வளவு பெரிய மோசடியை அவை சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை. ஆத்திரம் தலைக்கேற பெருந்திடலில் ஒன்று கூடி "நாங்கள் அவமானங்கள்!" "நாங்கள் அவமானங்கள்! " என்று காட்டுக் கத்தலாய் கத்துகின்றன நமட்டுச் சிரிப்பை ஒளித்தபடி “ஐஸ்க்ரீம்களே! “ஐஸ்கிரீம்களே! என்று கூவி அழைத்தேன். |
இ ந்தமுறை மருத்துவர் கண்டிப்பாகவே சொல்லிவிட்டார்… “நீங்கள் கண்டதையும் போட்டுக் குழப்பிக் கொள்ளக் கூடாது” எனக்கு ஓரளவு புரிகிறது தேநீர் மட்டுமே இருக்கும் தேநீரைச் சொல்கிறார் ‘கடி' க்கு வேறொன்றும் கூடாதென்கிறார் சலனமற்ற குளத்தைத்தான் சொல்கிறார் எனில், எனது நான்கு கழுதைகளையும் எங்கு வைத்துக் குளிப்பாட்ட? எனக்கு நன்றாகவே புரிகிறது சாமான்ய நிலையிலிருந்து என்னை சாமாதி நிலைக்குத் தூக்குகிறார் மறைஞானத்தை மாத்திரையாக்கப் பார்க்கும் இந்த நாச்சிமுத்து ஒரு வேளை ‘ லாவோட்சு' வின் வம்சாவழியோ என்னவோ? “இப்போதுதானே சொன்னேன்…” என்றொரு குரல் உலுக்க விழித்தேன் பாருங்கள், அதுகூட அவர் அதட்டியதில்லை நான் அதட்டியதுதான்.

Comments