யானை தன் காட்டில் அசைந்து அசைந்து செல்வதைப் போலே இந்தப் பிரதான சாலையைக் கடந்து கொண்டிருக்கிறது ஒரு தூவெண் பூனை பூனை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு செல்வது தன்னிலிருந்து தனக்கு சீறிப்பாய்ந்து கொண்டிருக்கும் ஒருவன் நிலை தடுமாறி ப்ரேக் அடித்து காலூன்றி நிற்கிறான் பொதுவாக அது ஒதுங்கி ஒளிவது ஓடி மறைவது இன்றென்னவோ ரொம்பத்தான் பிலுக்கு " உங்கப்பன் போட்ட ரோடா?" என்றவன் கேட்கவில்லை. ஆனால் அதன் நடை அப்படித்தான் சொல்லியது. |
இ ந்தமுறை மருத்துவர் கண்டிப்பாகவே சொல்லிவிட்டார்… “நீங்கள் கண்டதையும் போட்டுக் குழப்பிக் கொள்ளக் கூடாது” எனக்கு ஓரளவு புரிகிறது தேநீர் மட்டுமே இருக்கும் தேநீரைச் சொல்கிறார் ‘கடி' க்கு வேறொன்றும் கூடாதென்கிறார் சலனமற்ற குளத்தைத்தான் சொல்கிறார் எனில், எனது நான்கு கழுதைகளையும் எங்கு வைத்துக் குளிப்பாட்ட? எனக்கு நன்றாகவே புரிகிறது சாமான்ய நிலையிலிருந்து என்னை சாமாதி நிலைக்குத் தூக்குகிறார் மறைஞானத்தை மாத்திரையாக்கப் பார்க்கும் இந்த நாச்சிமுத்து ஒரு வேளை ‘ லாவோட்சு' வின் வம்சாவழியோ என்னவோ? “இப்போதுதானே சொன்னேன்…” என்றொரு குரல் உலுக்க விழித்தேன் பாருங்கள், அதுகூட அவர் அதட்டியதில்லை நான் அதட்டியதுதான்.

Comments