சைக்கிள் சறுக்கி தரையில் விழுந்துவிட்டாள் சின்னஞ்சிறுமி. முதல் காயம் முதல் குருதி வீறிட்டு வீறிட்டுக் கதறுகிறாள் மருத்துவத்திற்கு ஒத்துழைக்க வைக்க மூன்றுபேர் சேர்ந்து போராட வேண்டியிருந்தது. காயத்தைத் துடைத்து மருந்திட்டுக் கட்டினேன் அழுகை தேய்ந்து முனகலான போது கட்டுத் துணியைப் பார்த்து ஏனோ "கொக்கு போல் இருக்கு" என்றாள் அப்போதே அந்தக் காயம் எழுந்து பறந்து போவதைக் கண்டேன். |
இ ந்தமுறை மருத்துவர் கண்டிப்பாகவே சொல்லிவிட்டார்… “நீங்கள் கண்டதையும் போட்டுக் குழப்பிக் கொள்ளக் கூடாது” எனக்கு ஓரளவு புரிகிறது தேநீர் மட்டுமே இருக்கும் தேநீரைச் சொல்கிறார் ‘கடி' க்கு வேறொன்றும் கூடாதென்கிறார் சலனமற்ற குளத்தைத்தான் சொல்கிறார் எனில், எனது நான்கு கழுதைகளையும் எங்கு வைத்துக் குளிப்பாட்ட? எனக்கு நன்றாகவே புரிகிறது சாமான்ய நிலையிலிருந்து என்னை சாமாதி நிலைக்குத் தூக்குகிறார் மறைஞானத்தை மாத்திரையாக்கப் பார்க்கும் இந்த நாச்சிமுத்து ஒரு வேளை ‘ லாவோட்சு' வின் வம்சாவழியோ என்னவோ? “இப்போதுதானே சொன்னேன்…” என்றொரு குரல் உலுக்க விழித்தேன் பாருங்கள், அதுகூட அவர் அதட்டியதில்லை நான் அதட்டியதுதான்.

Comments