குலாவியபடியே என்னைக் கடந்து செல்கிறார்கள் இரு தோழியர். தோள்களை உரசிக் கொண்டு க்ளூக், க்ளூக் என்று சிரித்துக் கொண்டு மெல்ல மெல்ல நடந்து செல்கிறார்கள். பார்க்காமல் இருக்க இயலாத காட்சி அது எழ வேண்டிய தருணத்தில் சரியாக எழுந்த வயலின் கீற்று போல் அவர் ஆட்காட்டி விரலிரண்டும் ஒரு சேர எழுந்து தொட்டுக் கோர்க்கின்றன. " பார்த்தாயா" என்பது போல் எழுந்து கொண்டிருக்கிறது உதயத்தின் புத்தொளி அவர்கள் அப்படியே நடந்து நடந்து தூரத்தில் மறைகிறார்கள். நெருங்கி வருகிறது ஒரு இனிய துயர் |
என் ஊருக்குப் பின்னே ஒரு மலை இருக்கிறது. வாழ்வின் அர்த்தம் தேடிக் கிளம்புபவர்கள் இந்த மலை மீது ஏறுவது வழக்கம் சில ஊழிகள்தான் கடந்திருக்கின்றன அதற்குள் அவ்வளவு அவசரம் வாழ்வைக் கண்டு பிடிக்க இப்படிக் கிளம்புபவர்கள் பொதுவாக திரும்பி வருவதில்லை கண்டார்களா என்பதற்கும் பதில் இல்லை அடிவாரத்தில் ஓர் ஆட்டிடையன் இருக்கிறான் எவ்வளவோ பார்த்துவிட்டான் இது போல் அவனுக்குத் தெரியும் வாழ்வின் அர்த்தம் ஆடென. நன்றி : உயிர்மை : ஆகஸ்ட் - 18
Comments