வரவர எனக்குத் திகில் படங்கள் மிகவும் பிடிக்கின்றன. ரிமோட்டை அழுத்தி அழுத்தி ஒன்று விடாமல் தேடுகிறேன் பேய்கள் என்னைக் கேட்டுக் கொண்டுதான் திரையரங்கம் வருகின்றன. காய்ந்த சருகுகள் எவ்வளவு பிரமாதமாக நடிக்கின்றன யாருமற்ற திசை நோக்கி விட்டு விட்டுக் குலைக்கும் கருப்பு நாய் கும்மிருட்டை கிழித்துக் கொண்டு அடிக்கும் சின்ன வெளிச்சம் சூப்பர்….. திகிலின் கதவைத் திறந்து கொண்டு திகிலுக்குள் வருகிறேன் காய்ந்த சருகோ கருப்பு நாயோ இல்லாத உலகின் திகில் அஞ்சி அஞ்சி குலை நடுங்கும் திகில் நடுநடுங்கித் தலைகுனியும் திகில் |
இ ந்தமுறை மருத்துவர் கண்டிப்பாகவே சொல்லிவிட்டார்… “நீங்கள் கண்டதையும் போட்டுக் குழப்பிக் கொள்ளக் கூடாது” எனக்கு ஓரளவு புரிகிறது தேநீர் மட்டுமே இருக்கும் தேநீரைச் சொல்கிறார் ‘கடி' க்கு வேறொன்றும் கூடாதென்கிறார் சலனமற்ற குளத்தைத்தான் சொல்கிறார் எனில், எனது நான்கு கழுதைகளையும் எங்கு வைத்துக் குளிப்பாட்ட? எனக்கு நன்றாகவே புரிகிறது சாமான்ய நிலையிலிருந்து என்னை சாமாதி நிலைக்குத் தூக்குகிறார் மறைஞானத்தை மாத்திரையாக்கப் பார்க்கும் இந்த நாச்சிமுத்து ஒரு வேளை ‘ லாவோட்சு' வின் வம்சாவழியோ என்னவோ? “இப்போதுதானே சொன்னேன்…” என்றொரு குரல் உலுக்க விழித்தேன் பாருங்கள், அதுகூட அவர் அதட்டியதில்லை நான் அதட்டியதுதான்.

Comments