Skip to main content

இரண்டு உறுதிகள்



“ஒன்பது மணிக்கு சடோன்னு

தண்ணி ஏத்தறவங்க  ஏத்திக்கோங்க..”


வீதியில் கூவிய படி செல்கிறாள் பரிமளா


மூன்று குழந்தைகளுடன் மல்லுக்கட்டும்

தனிக் கல்யாணி

மில்லுக்குக்  கிளம்பும் பரபரப்பிற்கிடையே

மோட்டர் ஸ்விட்ச்சின் மீது பாய்கிறாள்


பரிமளாவிற்கும்

கல்யாணிக்கும் தீராத பகை

மனத்தாங்கல் அல்ல , கை கலப்பு

அதுவும்  நாலு முக்கில் வைத்து 


பரிமளாவிற்கு கல்யாணியுடன்

ராசி ஆக வேண்டும் என்று

ஒரு அவசியமுமில்லை

சாகிற வரைக்கும் சங்காத்தம் கிடையாது

இது உறுதி.


மொத்த வீதிக்குமான கூவலே எனினும்

அதைக் 

கல்யாணி வீட்டு முன்தான் கூவினாள்

இதுவும் உறுதி.


Comments

Anonymous said…
காலையிலேயே மனம் நெகிழும் ஒரு மிகச்சிறந்த கவிதையை தந்தமைக்கு நன்றிகள். பகைமை பாராட்டினாலும் பரிமளாவோடு பாராட்ட வேண்டும். இந்த மிகச்சிறந்த கவிதை இந்த உங்களையும் பாராட்ட வேண்டும்

Popular posts from this blog

நடக்கக் கூடாதவை நடப்பதில்லை

பெருந்திரள் கூட்டத்தில் தன் பிள்ளையின்  சுண்டுவிரலை நைசாகக் கழற்றிவிட்டுவிட்டு விறுவிறு  வென நடந்து மறைந்துவிடும் அன்னையர் சிலர் உண்டு அவர்களை நாம் அறிவோம் அந்தக் குழந்தையின் விழிகள் பிதுங்கி வாய் கோணுவதை ஒளிந்திருந்து நோக்கும் அன்னை ஒருத்தியும்  உண்டு    சொன்னால் நீங்கள் நம்ப மாட்டீர்! நம்ப விரும்ப மாட்டீர்!

கோயில் கோயிலுக்குள் நுழையும் வேடிக்கை

உ ன்னோடு கோயிலுக்குச் செல்வதில் இனிமை உண்டு மங்களம் உண்டு ஆயினும்  அது விசித்திரமானது நிரம்பிய பாத்திரத்தில்  மேலும் ஊற்றுவது போன்றது சொல்லி  முடித்ததையே திரும்பச் சொல்வது போன்றது காதல் அடி விழுந்து தொழுமாறு  வேறொரு காதல்  இல்லை ஏற்கனவே தெய்வம் சென்று சேர இன்னொரு தெய்வம் இல்லை. காதலோடு  கோயிலுக்குள் நுழைகையில் எல்லா தெய்வங்களும் மொம்மைகளாகி விடுகின்றன மொம்மைகளின் முன்னே இறைஞ்சி நிற்கும் அவசியமில்லை முறையீடு வைக்க ஒன்றுமேயில்லை. காதலாகிக் கசிந்த பின்னே கண்ணீரும் மல்குமோ சம்பந்தா?