Skip to main content

Posts

பாலசுப்ரமணியம் கவிதை

இந்த இரவில் விழித்திருந்து இரவின் கண்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன் முத்தமிட்ட இதழ்கள் ஒற்றை மர உதிரும் மஞ்சள் நிற இலைகள் மயக்கமூட்டும் மதுக்குடுவையின் மூடிகள் காணவே காண முடியாத தூரக் கிணறுகளின் ஆழ மீன்கள் மற்றும் என் நண்பர்கள் தங்கள் மனைவிகளோடு உறங்கிக் கொண்டிருப்பதையும் பார்க்கிறேன் இந்த மழைக்காலத்தில் வெய்யில் எவ்வளவு விருப்பமானதோ அப்படித்தான் எனக்கும் இரவின் கண்களைப் பார்ப்பதும் ஆனாலும் பெரியதொரு குற்றச்சாட்டோடு அப்போதுதான் நான் கண்ணீர் நிரம்பிய மெத்தைகளில் புரண்டு படுக்கிறேன்.

மன்னவன் வந்தானடி தோழி !

சென்ற மாத்தின் ஒரு நள்ளிரவில் நாச்சிமுத்து கொலைகாரனானார். நம்மை போல் தான் அவரும். கொலைசெய்வது பற்றியெல்லாம் நினைத்து கூட பார்த்தவரில்லை. ஆனால் நம்மைபோலில்லை நாச்சிமுத்து அவர் ஒரு கொலை செய்தார். “ நடிப்பிசை கதைக்கடலான” அவரைக் கொண்டு போய் சிறையின் கும்மிருட்டுள் வீசினார்கள். அங்கு பத்மினியின்றி அவர் தனிமையில் வாடினார். திருட்டுத்தனமாக பாட்டு கேட்ட குற்றத்திற்காக இரண்டு முறை பிடரியில் உதை வாங்கினார். மெய்மறந்து பாடிய சத்தத்தில் முன்பல் போனது. அனேக இரவுகளில் அவர் அழுதுகொண்டிருந்தார். இன்று அதிகாலை கடன் கழிக்க கழிவறை சென்ற நாச்சிமுத்துவுக்கு வெளியே வருகையில் ஒரு அம்சமான மீசை இருந்தது. மார்பெங்கும் இரத்தினங்கள் ஜொலித்துக் கொண்டிருந்தன. தலையில் ராஜகீரிடம்... அப்போது யாரோ இருவர் கொம்பூதி முழக்கினர். பொற்சரிகை பூண்ட அரையாடை துவள அவர் நடந்து வருகையில் பிண்ணனியில் ஒலித்தன ஜதியும் பாட்டும். தன் சிம்மாசனம் ஏறி அமர்ந்த மன்னவன் வரும் வழியெங்கும் கைகூப்பி எழுந்து நின்ற மரங்களை கை அமர்த்தி அமரச் சொன்னார். அவை அமர்ந்து கொண்டன.

இராவில் கல்லுடைப்பவர்கள்

அதிகாலையில் கர்லாகட்டை சுற்றுபவர்களும் இராவில் கல்லுடைப்பவர்களும் பச்சைமுட்டைகளை விரும்பிக்குடிக்கிறார்கள். திறக்கவே திறக்காத ஒரு கல்லை மரைகழன்ற சம்பட்டி ஓங்கி அடிக்கிறது. எனினும், கல்லுடைத்தல் ஒரு அத்தியாவசியப்பணி அது புதிய‌ க‌ட்டிட‌ங்க‌ள் த‌ழைக்க‌ உத‌வுகிற‌து இராவில் க‌ல்லுடைப்ப‌வ‌ர்க‌ளுக்கென்றே ம‌த‌ன் ஒரு இரும்புவில்லை க‌டைந்து வைத்திருக்கிறான் இராவில் க‌ல்லுடைப்ப‌வ‌ர்க‌ளால் மின்விசிறிக்கு கீழே இந்த‌ வாழ்கைக்கு வியர்த்துக் கொட்டுகிற‌து. இந்த‌ மைதான‌மெங்கும் ஓடிபிடித்துக் கொண்டும் ச‌றுக்கி விளையாடிக்கொண்டும் ஊஞ்ச‌லாடிக் கொண்டுமிருக்கின்ற‌ன உழைப்பின் க‌னிக‌ள்.

வாணலிக்குள்ளிருந்து பேசுகிறேன்

எவன் குவளை நீரை தட்டிவிட்டேன் எவன் குடிசைக்கு தீ வைத்தேன் எந்த தெய்வத்தை நிந்தித்தேன் எந்த பத்தினியின் விரதத்தை கலைத்தேன் எந்த சொல்லால் எவன் நெஞ்சை சிதைத்தேன் எந்த சிறுமியை வல்லாங்கு செய்தேன் எந்த குருடனுக்கு புதைகுழிக்கு வழிசொன்னேன் எந்த சூலியின் நிறைவயிற்றைக் கிழித்தேன் எந்த தூளிக்குள் அனலள்ளிப் போட்டேன் எந்த நண்பனின் புறங்கழுத்தைக் கடித்தேன் எவன் தொடைசதைக்கு நன்றி மறந்தேன் எப்பிறப்பில் எவன் குடியறுத்ததற்கு இப்பிறப்பு.

மேயாத மான்

1) மான்கள் மிரண்டது போல் ஒரு பார்வை பார்க்கும் அதற்கு நீ மிரண்டு விட்டால் புரண்டு விட்டாய் போ! 2) மொட்டைக் கருவேலத்தின் சொப்பனத்தில் எப்போதும் ஒரு காயாத கானகம். அதில் ஏராளம் மான்கள். 3) பொழுது விடிந்தது. பொற்கோழி கூவிற்று. அம்மா வந்து அறைக்கதவை இடிக்கிறாள். ஜன்னல் கம்பிகளூடே ஓடி மறைகின்றன சில மாயமான்கள். 4 ) சாயாத கொம்பிரண்டும் முட்டிமுட்டி கொன்றிட்டால் களிமோட்சம் உனக்குத்தான் சா ! 5 ) சொல் “ மகாலிங்கம் “ ! எத்தனை மான்தான் வேண்டும் உனக்கு.

கழியூன்றித் தாண்டுதல்

மேல்சட்டையை கால்சட்டைக்குள் செருகி பெல்ட் வைத்துக் கட்டி ஒரு நாளை புத்தம் புதிதாக்கினேன். முகத்தின் கருங்காட்டை வழித்தெடுத்ததில் நெகுநெகு வென்று திறந்தது ஒரு நாள் சப்பென்றிருக்கும் நாளின் மீது கொஞ்சம் உப்பையும், மிளகாய்பொடியையும் தூவி விடுவேன். இப்போது இது ஒரு சுவையான வெள்ளரிப்பிஞ்சு ஆனால் இன்றோடு பழசாகிவிட்ட இவற்றை இன்னொரு நாளின் மீது கொட்ட முடியாது. தியேட்டரில் போஸ்டர் மாற்றுவது உற்சாக மூட்டுகிறதெனினும், இனி ஒரு மாததிற்கு அதே வெள்ளை சுமோ அதே கண்ணிவெடிக்கு சிக்கி அதே உயரத்தில் தூக்கி வீசப்பட்டு அதுபோலவே வெடித்து சிதறுமே.. கடவுளே.. பூட்ஸ் போட்டுக் கொள்கிறேன் வழக்கத்திற்கு மாறாக ரயிலில் போகிறேன் வழக்கத்திற்கு மாறாக பேருந்தில் போகிறேன் அதிகாலையில் எழுந்து நடந்து போகிறேன் ஒரு நாளில் மூன்று முறை குளிக்கிறேன் வேம்பில் பல்துலக்கி பன்னீரில் கொப்பளிக்கிறேன். எம்கேடி எத்தனை நாட்களைத் தான் வெளுத்துத் தருவார்.. வாயில் ஊறும் இது, இந்த நாளில் இருப்பத்தி மூன்றாவது கம்பர்கட்.

குட்டி குட்டியாக சில பிரமாதமான வாழ்க்கைகள்

” இந்த வாழ்வு தாறுமாறான பீட்டில் பாடப்படும் மோசமான பாடல் ” என்று சொல்வார் சின்னதங்கம் பீட்ட்ர்ஸன். அதனால் தான் அதற்குள் குட்டி குட்டியாக சில பிரமாதமான பாடல்கள். ஒரு பாடல் என்னையும் என் வாகனத்தையும் ஓட்டிச் செல்கிறது.. ஒரு நாள், அது சைக்கிள் சிறுவர்கள் கையசைத்து கடந்து செல்கிற PBS வாகனம். பெருநகர சாலையின் வெள்ளைக் கோட்டிற்கு இப்புறம் கருங்குயில்கள் பறந்து திரியும் நந்தவனம்... மறு நாள், அது பித்தம் முற்றிய ஒரு மேற்கத்தியனுடையது. ஹாரனின் ஊளையை இன்னொரு கருவியிசையாக்கிக் கொண்டு நூலிடைச்சந்துகளில் புகுந்து வளைந்து களிபீடித்தாடுவது... ஒரு பாடல் என்னையும் என் வாகனத்தையும் ஓட்டிச் செல்கிறது... நானும் ஆண்ட்ரியாவும் கடவுளாகிக் கொண்டிருக்கையில் குறுக்கிட்டதொரு பெரிய டேங்கர் லாரி மண்டை உடைந்து இரத்தம் வழிகிறது ஆனந்தம்.. பரமானந்தம்.. ( ஜான் சுந்தருக்கு..)