Skip to main content

எல்லாம் முடிந்து விட்டது வாணிஸ்ரீ !

             




எல்லாம் முடிந்துவிட்டது வாணிஸ்ரீ !

கொண்டை சுற்றுவதில் வல்லவரான கடவுள்
ராணி ஸ்ரீயையும், நீலிஸ்ரீயையும்
உன்னோடே கலந்துகட்டி
என் முன்னே அனுப்பினார்
அதில் எந்தக் கொண்டை உன் கொண்டை
என்றறிவதில் 
பரிதாபமாகத் தோற்றுவிட்டேன் ...
எல்லாம் முடிந்துவிட்டது வாணிஸ்ரீ !


எவ்வளவு குடித்தாலும் 
ஒழுங்காக வீடு  சேர்ந்து விடுவேன்
லுங்கிவிலகி நான் ரோட்டோரம் கிடந்தது 
ஒரே ஒரு நாள்தான் ...
சரியாக, மிகச்சரியாக
அன்று தான் உன் வீட்டில்  தேங்காய்ச் சட்னி
தீர்ந்துவிட்ட  பொட்டுக்கடலையை வாங்கி வர
நீ அண்ணாச்சி கடைக்கு வந்தாய்...
ஏன் வாணி உன் வீட்டில் அன்று தக்காளி சட்னியாக
இருந்திருக்க கூடாது ?
எல்லாம் முடிந்து விட்டது வாணிஸ்ரீ !


அப்படி தக்காளிசட்னியாகவோ, கத்தரிக்காய் குழம்பாகவோ மட்டும்
இருந்திருந்தால்
இன்னேரம் நமது வசந்தத்து மாளிகையில்
இரண்டு “தேன்கள் ” ஓடியாடாதோ வாணிஸ்ரீ ?
எல்லாம் முடிந்து விட்டது வாணிஸ்ரீ !


கொஞ்சம் குடித்தால்தான்
அந்த அறையின் கதவுகள் திறக்கின்றன
அங்குதான் அந்த வீணை இருக்கிறது
அங்குதான் நீயும் இருக்கிறாய்
நீ வாசிக்கக்  கூட வேண்டாம் வாணிஸ்ரீ
வெறுமனே அது உன் தொடையில் இருந்தால் போதும் ...
இதையெல்லாம் கண் ஆரக் காணாமல்
கேவலம் ஈரலைப் போற்றி வாழ்வேனோ வாணிஸ்ரீ !


ஒரு முறை கூடத்  தொட்டுப் பார்த்திடாத
அதனாலேயே
ஆயுள் முழுக்க தொட்டுதொட்டுப் பார்க்கும்
உன் காந்தள் மெல்விரல் கைகளால்
தினம்  ஒரு குவளை வழங்கு ...
எல்லாம் முடிந்து விட்டது வாணிஸ்ரீ !

நேற்று பல் மருத்துவரை கண்டு வந்தேன்
கடைப்பல்லை முற்றாக பூச்சி அரித்து விட்டதாம்...
இனி அடைக்கவே முடியாதென்றும்
பிடுங்கியே தீர வேண்டும் என்றும் சொல்லி விட்டார்
எல்லாம் முடிந்து விட்டது வாணிஸ்ரீ !

ஒரு தொண்டுக்கிழம்
“ நான் தான் ஆனந்த் ...”
என்று முன் வந்து நின்றால்
ஊரார் எதில் நகுவார் வாணிஸ்ரீ ?

எல்லாம் முடிந்து விட்டது வாணிஸ்ரீ !


                        






















Comments

அப்பாடா... இதோடவாவது முடிச்சிட்டீங்களே ஆனந்த்.
அப்பாடா... இதோடவாவது முடிச்சிட்டீங்களே ஆனந்த்.

Popular posts from this blog

சமீபகால பிரச்சனைகளில் ஒன்று

  ஆ மாம், அப்படித்தான் கேவலன்தான் பரதேசி தெருத் தெருவாக  அலைவது போலே முகநூல் முழுக்கத் திரிவேன். குப்பை மேட்டின் முன் குந்தி அதைக் கிளறிக் கிளறி   ஆராய்ந்து கொண்டிருக்குமே  ஒரு பைத்தியம்  அது  கூட நான்தான். சந்தேகம் எழும்  ஆண்களின் கணக்குகளைத்  திறந்து ஒன்றுவிடாமல்  துப்பறிவேன் என்னைத் தவிர  எனக்கு எல்லார் மேலும் சந்தேகம் உயிர் நண்பர்கள் ஆபத்தானவர்கள்  ஆகவே முதலில் அவர்களிடமிருந்தே துவங்குவேன் அங்கு நீ இட்ட இதயக்குறி ஒன்று சடசடவென  எரிந்து கொண்டிருக்கும் . அப்போது நான் என் நெஞ்சிற்குச் சொல்லுவேன்.. “ஒன்றுமில்லை. துளியூண்டு சிவப்பு மை குட்டு, அவ்வளவு தான்". அதுவும் திருப்பி எனக்கு அதையே சொல்லும் “நடுங்காதே.. துளியூண்டு சிவப்பு மை குட்டு , அவ்வளவே".

மயிலுக்குத் துடிப்பவன் மனைவிக்குச் சுடுபவன்

கபிலர் கவித்துவத்திரட்டின் அடுத்த கட்டுரை அகழ் இதழில் வெளியாகியுள்ளது. இந்தக் கட்டுரையுடன் கபிலரின் புறப்பாடல்கள் நிறைவடைகின்றன. இனி முழுக்கவும் அகப்பாடல்கள்தான். .. மயிலுக்குக் குளிரும் எனும்படிக்கு இரக்கம் கொண்டவனால் , மனைவிக்குக் கொதிக்கும் என்பதை அறியமுடியவில்லையா? அது அப்படித்தான். விசேஷமான ஒன்றில் ஆகச்சிறந்தவராய் விளங்கும் ஒருவர் , சாதாரண ஒன்றில் தடுமாறிச் சரிவதை நாம் காலகாலமாக பார்த்து வருகிறோம். மயிலுக்கு இரங்கி, மனைவிக்கு இரங்கா மாண்பை எந்தச் சோதனைக் கூடத்தில் இட்டு பரிசோதிப்பது? எவ்வளவு ஆய்ந்தாலும் அதில் குழப்பமான முடிவுகளே வரக்கூடும். மேலும் காமம், எதிலும் துளையிட்டுவிடும் ஒரு ராட்சத இயந்திரம்... முழுவதும் வாசிப்பதற்கான இணைப்பு கீழே  உள்ளது https://akazhonline.com/?p=12302

சோதிப்பிரகாசம்

இந்தப் பேனாவை அந்த டேபிளின் மீது வை" என்று சொல்லி நீட்டினாள். அவன் அதை வாங்கினான். அவள் நீட்டிக் கொண்டே இருந்தாள் அவன் வாங்கிக் கொண்டே இருந்தான். அவள்  விடவில்லை. அவன் விடுவிக்கவுமில்லை. அங்கு ஒன்றுமே நடக்கவில்லை. அங்கு அவ்வளவு நடந்து கொண்டிருந்தது. அங்கு காலம் ஸ்தம்பித்துவிட்டது. அங்கு காலம் பரபரப்பில் இருந்தது. இப்போதும் அந்த ஒன்றுமற்ற ஒன்றை துலக்கித் துலக்கி  விளக்கேற்றி மகிழ்கிறது நரைமுற்றிய அந்தத் தம்பதி.