Skip to main content

உணவாவது

 



தொலைதூர கிராமங்களிலிருந்து
சென்னைக்குள் வந்துவிழுந்த 
ஐந்து இளைஞர்கள்
நான்கு மாடிக்குடியிருப்பொன்றில்
கீழ்தளத்தில் தங்கியிருந்தார்கள்.
முறைவைத்துச் சமைத்து
முறைவைத்துக் கழித்து
குறைவான சிக்கல்களோடு
காலம்தள்ளி வந்தார்கள்.
எவ்வளவுதான் முறைவைத்தாலும்
குறைகள் எழுவதைத் தவிர்க்க இயலவில்லை.
ஆகவே முறையும் குறையுமாக
வாழ்ந்துவந்தார்கள்.
அதிலொருவனுக்கு 
அன்று
திடீரென ஒரு மகிழ்ச்சி உதித்துவிட்டது.
"மொட்டைமாடியில் வைத்து உண்போமா?"
எல்லோரிடமும் அது பற்றிக்கொண்டது.
படி வரிசையில்
கைமாறி மைமாறி 
மேலே செல்கின்றன பாத்திரங்கள்.
சுமை தோன்றுகையில்
நகைச்சுவையும் தோன்றிவிடுகிறது.
பாத்திரங்களோடு பாத்திரமாக
சேர்ந்துகொள்கிறது சிரிப்பு.
 உண்ணத்தயார் நிலையில் உள்ளது உணவு.
ஆனால்
ஏதோ ஒன்றை 
அவர்கள்
ஏற்கனவே பகிர்ந்து உண்டிருந்தார்கள்.
"கொலப்பசி..." என்று துரிதப்படுத்திய ஒருவன்
இப்போது
நிலவைப் பார்த்துக்கொண்டு நிற்கிறான்.


Comments

Popular posts from this blog

வாழ்த்து

  அ வன் ஒரு மேதை அல்லது அப்படியொரு நினைப்பு நிகழ் குழம்பாமல் அவன் என்ன மேதை? குறிப்பேட்டில் குனிந்திருந்தவன் தேநீர் பரிமாறிய  துப்புரவு  பணியாளிடம்  நெற்றியைச் சுருக்கியபடி கேட்டான்.. "இன்னைக்கு தேதி என்ன..?" அவள் சொன்னாள் "உறுதியாகத்தானா...உன்னை நம்பலாமா?" "சார்.. நேத்துத்தான் என் ஒரே மகளின் பிறந்த நாள்.." நிமிர்ந்து நோக்கியவன் பாட்டைப் போல ஒன்றைப் பேசினான் "எனில் , இருபத்தைந்தேதான்.. ஒரு வேளை முப்பத்தியிரண்டே  ஆனாலும் இருபத்தைந்துதான்.."

இருவர்

வெ க்கையும் சரக்கொன்றையும் ஒன்றாக வந்துவிட்டனர். வாசலில் வந்து நிற்கும் இருவரில் ஒருவரை மட்டுமா உள்ளே அழைக்க முடியும் ?

சத்தியத்தை மீட்டுதல் - சுப்பிரமணிய பாரதி கவிதைகள்

                                 2000- த்தின் துவக்கம்..  கவிதையுடன் போர் ஆடிக்கொண்டிருந்த காலம். என் முதல் கவிதைத் தொகுப்பு வெளிவந்திருந்தது.  அதை என் ஆதர்ஷ எழுத்தாளர் ஒருவருக்கு அனுப்பி இருந்தேன்.  நூலை வாசித்துவிட்டு அவர் எழுதியிருந்த பதில் கடிதத்தின் முடிவு இப்படி இருந்தது.. “ எழுத்திற்கு நான் என்றென்றைக்குமாக கைக்கொள்ளும் சூத்திரம்... தெளிவுறவே அறிந்திடுதல் : தெளிவு தர மொழிந்திடுதல் ” . இவை சுப்பிரமணிய பாரதியின் வரிகள். இந்தச் சூத்திரம் இன்று வரை என் எழுத்தை இயக்கிக் கொண்டிருப்பதாகவே உணர்கிறேன். இதுதான் மெய்யறிவு இல்லாத விஷயங்களில் வெட்டியாக வாயாடக்கூடாது என்று எச்சரித்து வைத்தது. இதுதான் கறிவெட்டும் கத்தியுடன் காத்திருந்த மொழியின் கசாப்புக் கடைக்காரர்களிடம் இருந்து என்னை தடுத்தாட்கொண்டது. எனவே இந்த சூத்திரத்திற்கும் இதன் சூத்திரதாரிக்கும் எனது வந்தனங்கள்.     பாரதியின் நிறைய கவிதைகள் தமிழர்களுக்கு மனப்பாடம். அதை சங்கீதக்காரர்கள் , சினிமாக்காரர்கள்,...