புதன்கிழமைதோறும் என் ஊருக்கு தடுப்பூசி போடவரும் நர்ஸக்கா அம்மாவுக்குச் சிநேகிதம். நாள்முழுதும் உபயோகித்த ஊசிகளின் முனைகளை ஓய்ந்த மாலையில் என் வீட்டுவாசலில் அமர்ந்து வெட்டுவாள். அந்த எலிப்பொறி போன்றதொரு இயந்திரத்தை கண்கொட்டாது பார்த்து நிற்பேன். அவள் ஒவ்வொரு முறை நறுக்கும்போதும் அதிலிருந்து மயிலொன்று அகவும். புதன்கிழமைதோறும் வீட்டுமுற்றத்தில் மயில்கூட்டம். பலநாட்கள் இரகசியம் காத்த மயில்கதையை ஒரு நாள் சொல்லியேவிட்டேன் அவளிடம். அதைக்கேட்டு அழகாக சிரித்தபடியே என் தலைசிலுப்பிச் சொன்னாள்... "ஏதோ ஒரு சின்னக் கோளாறு.. எண்ணெய்விட்டால் சரியாயிடும்..." அக்கா... அக்கா எண்ணெய்விட்டால் மயில் பறந்து போய்விடாதா? |
இ ந்தமுறை மருத்துவர் கண்டிப்பாகவே சொல்லிவிட்டார்… “நீங்கள் கண்டதையும் போட்டுக் குழப்பிக் கொள்ளக் கூடாது” எனக்கு ஓரளவு புரிகிறது தேநீர் மட்டுமே இருக்கும் தேநீரைச் சொல்கிறார் ‘கடி' க்கு வேறொன்றும் கூடாதென்கிறார் சலனமற்ற குளத்தைத்தான் சொல்கிறார் எனில், எனது நான்கு கழுதைகளையும் எங்கு வைத்துக் குளிப்பாட்ட? எனக்கு நன்றாகவே புரிகிறது சாமான்ய நிலையிலிருந்து என்னை சாமாதி நிலைக்குத் தூக்குகிறார் மறைஞானத்தை மாத்திரையாக்கப் பார்க்கும் இந்த நாச்சிமுத்து ஒரு வேளை ‘ லாவோட்சு' வின் வம்சாவழியோ என்னவோ? “இப்போதுதானே சொன்னேன்…” என்றொரு குரல் உலுக்க விழித்தேன் பாருங்கள், அதுகூட அவர் அதட்டியதில்லை நான் அதட்டியதுதான்.

Comments