Skip to main content

ரஜினி ரசிகையின் காதலன்



ன் காதலி ஒரு ரஜினி ரசிகை 

என்பதை

திடீரென

அறிய நேர்ந்தது.


சுப்ரமணிய பாரதியின்

வரி ஒன்று

தலை மேல் வந்து விழுந்தது.


சிகரெட்டை வானத்திற்கு வீசி

துல்லியமாக

அதைத் துப்பாக்கி புல்லட்டால் 

பற்ற வைத்து

மிகச் சரியாக

வாயில் விழ வைக்கும் 

காட்சி ஒன்று 

ஓடி வந்து முன்னால் நின்றது.

ஐந்து முறை 

" உஸ்" சொல்லியும்

 அசையாமல் அது  அங்கேயே 

நிற்கிறது.


ஆனால்

ஆறு மாதங்கள் முன்பு 

ஒரு திரை விமர்சகரிடம் பேசிக் கொண்டிருந்த போது 

"கமலஹாசனோ

மோகன்லாலோ அல்ல

ரஜினிகாந்தான் சிறந்த நடிகர்.

அதிரடிக்காக சொல்ல வில்லை. 

ஆராய்ச்சியின் முடிவுதான்.." 

என்று சொன்னார்.

அவசரப்பட்டு 

அவர் எண்ணை வேறு அழித்துவிட்டேன்.

திரும்ப அழைத்துப் பேச வேண்டும்.

" மாயா லோகம்" இதழில்

 மாதாமாதம் கட்டுரை எழுதும் ஒருவர்

பொய் சொல்ல வாய்ப்பில்லையல்லவா?


தவிர

ஓடுகிற ஜீப்பை

ஒற்றைக் காலால் கட்டி நிறுத்துவது

யோக முறைகளில் ஒன்றால்

சாத்தியம்தான் என்பதை

நான் வாசிக்க வந்த புதிதில்

வாசித்துள்ளேன்.


'எப்படி' என்பதை

' எப்டி' என்று உச்சரிக்கையில்

 அங்கு ஒரு புது அழகு

பூத்து நிற்பதை

நானும் சில முறை உணர்ந்துள்ளேன்.


வலது கையால்

இடது கண்ணை மூடிவிட்டு 

மீதிக் கண்ணால் 

கொஞ்ச நேரம் ஆழந்து நோக்கினால்

அந்தச் சின்னக் கண்ணில்

ஒரு காந்தத் துண்டு 

ஆடுவதை

கட்டாயம் நீங்கள் காண முடியும்.


அனைவரும்

ஆம் என்போர் தானே

நண்பர்களே!


Comments

Popular posts from this blog

அன்புடையீர்!

  "நா ன் உன்மீது கோபமாக உள்ளேன்" என்றொரு செய்தி வந்தது. நானும் கூட  என் மீது நெடுநெடுங்காலமாக கோபமாகவே உள்ளேன். என்னை என்னால் ஒன்றுமே செய்ய முடியவில்லை அதுவேதான் அன்புடையீர் உமக்கும்

மலைச்சாரலில் மையல் யானைகள்

கபிலர் கவித்துவத்திரட்டில் ' குறிஞ்சிப் பாட்டு' குறித்து எழுதியுள்ள கட்டுரை  அகழ் இணைய இதழில் வெளியாகியுள்ளது. காதல் மெல்ல அணுக வேண்டிய ஒன்றல்லவா? பஸ் போய் விட்டதா? மணி என்ன? மழை வருமா? வெய்யில் அதிகம்? விஜய் அட்டகாசம்? டொனால்ட் டிரம்ப் படு மோசம்? இன்னும் இப்படி சம்பந்தமில்லாமல் பேசிப் பேசிப் கடைசியில் உங்க பேர் என்ன? என்கிற கேள்விக்கு வருவதுதானே காதல் ? இன்றைய இளைஞர் கூட்டம் இதற்கு ’ நூல் விடுதல்’ என்று நாமகரணம் சூட்டி உள்ளது. நூல் அறுந்து விட்டதென்றால் அவன் பாச்சா பலிக்கவில்லை என்று பொருள். இந்த ’நூல்விடுதல்’ தொல்காப்பியத்திலும் உண்டு. கட்டுரையை முழுமையாக வாசிப்பதற்கான இணைப்பு கீழே  உள்ளது. https://akazhonline.com/?p=12685

இசை கவிதைகள் - அகழ்

  இரண்டு மாணவிகள் ஒ ரு குறிப்பிட்ட பாடத்தைச்  சுட்டி அதைப்  படித்துவிட்டாயா என்று கேட்கிறாள் ஒருத்தி “அய்யே… அந்தப் பாடம் நல்லாவேயில்ல” என்கிறாள் இன்னொருத்தி கேள்வி கல்லூரியின் மூன்றாவது மாடியிலிருந்து எழுகிறது பதில்   ஆரம்பப்  பள்ளியிலிருந்து வருகிறது *** காய்ச்சல் வீணை நா ன் அனத்திக் கொண்டிருக்கிறேன் இப்படி விடாமல் அனத்தும் அளவு அவ்வளவு பலஹீனம் இப்போது இல்லை. ஆயினும் நான் அனத்திக்கொண்டிருக்கிறேன். அனத்தி அனத்தி அனத்தி அனத்தி காய்ச்சல் வீணையில் ஒரு பாடல் இழையோடிவிட்டது நான் பாடிக் கொண்டிருக்கிறேன் *** அந்தோ! அந்தத் தம்பி தா ன் இல்லாவிட்டால் இந்த உலகிற்கு ஒன்றும் ஆகிவிடாது என்பது அவனுக்கு நன்றாகவே தெரியும் அறிந்ததேயானாலும் தான் இல்லாமல் ஆகி ஒன்றுமே ஆகிவிடாத உலகை நேற்றிரவு அவன் கண் கொண்டு கண்டான் அறிந்ததெல்லாம் காண்பமென்றல் அவ்வளவு ஈஸியோ தம்பி? *** மலர்க்கூட்டம் பூ ப்பூவாய் பூத்திருக்கும் பெரிய மரத்தின் கீழே தன் சைக்கிளை நிறுத்திவிட்டு விளையாடச் செல்கிறாள் சிறுமி இத நிழலில் நின்றிருக்கும் சைக்கிளைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன் காற்றாடும் கிளைகளுக்கடியில்...