நரை கூடக் கூட குயில் கூவத்துவங்கி விடுகிறது. “குயில் ஒரு க்ளிஷே” என்று சொன்னவன் ஒரு அதிரடி ஆட்டக்காரன் அவன் தலையைக் குனிந்தபடி மைதானத்தை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கிறான் குயில் இன்றில் அமர்ந்து நேற்றைப் பாடும் ஒரு பறவை அதன் மரத்தடியில் அவன் நெடுநேரம் அமர்ந்திருக்கிறான் க்கு…கூ... க்கு…கூ... க்கு. .கூ... ஒவ்வொருவனுக்கும் நினைத்து ஏங்க ஒன்றுண்டு அல்லது நினைக்க ஒன்று வேண்டும் என்று அவன் எப்போதும் ஏங்குகிறான் முதுமையைத் தேற்ற ஒரு சின்னசோகம் அவசியம் குயில் அதன் வாத்தியம். |
இ ந்தமுறை மருத்துவர் கண்டிப்பாகவே சொல்லிவிட்டார்… “நீங்கள் கண்டதையும் போட்டுக் குழப்பிக் கொள்ளக் கூடாது” எனக்கு ஓரளவு புரிகிறது தேநீர் மட்டுமே இருக்கும் தேநீரைச் சொல்கிறார் ‘கடி' க்கு வேறொன்றும் கூடாதென்கிறார் சலனமற்ற குளத்தைத்தான் சொல்கிறார் எனில், எனது நான்கு கழுதைகளையும் எங்கு வைத்துக் குளிப்பாட்ட? எனக்கு நன்றாகவே புரிகிறது சாமான்ய நிலையிலிருந்து என்னை சாமாதி நிலைக்குத் தூக்குகிறார் மறைஞானத்தை மாத்திரையாக்கப் பார்க்கும் இந்த நாச்சிமுத்து ஒரு வேளை ‘ லாவோட்சு' வின் வம்சாவழியோ என்னவோ? “இப்போதுதானே சொன்னேன்…” என்றொரு குரல் உலுக்க விழித்தேன் பாருங்கள், அதுகூட அவர் அதட்டியதில்லை நான் அதட்டியதுதான்.

Comments