தூர தேசத்தில் படித்துக் கொண்டிருக்கிற மகள் வாரம் நான்கு ‘செல்பி” களை அனுப்புவாள் ஒரே முகமெனத் தோன்றினாலும் ஒரே முகமில்லை அதே முகம் போல் தெரிந்தாலும் பழைய முகமில்லை தொட்டிலில் கிடந்தவள் முதன் முதலாகக் கை நீட்டி என் மூக்கைத் தொட்டது போல ஒவ்வொரு படமும் என்னை எங்கெங்கோ தொடுகின்றன இந்த இரவில் அவள் செய்தியைத் திறந்து பார்த்த போது அங்கு அவளுக்குப் பதில் சிரித்துக் கொண்டிருக்கிறது ஒரு அந்தி பார்க்கிறேன்… பார்க்கிறேன்… பார்த்துக் கொண்டேயிருக்கிறேன் இதை அப்படி ஒரேயடியாக ‘செல்பி’யில்லை என்று சொல்லிவிட முடியாது. |
பு திய ஊரின் சிக்கலான வழித்தடத்தின் முன் குழம்பி நின்றுவிட்டது கார். ரோட்டோரம் பீடி புகைத்தபடி நின்றுகொண்டிருந்த டி.வி.எஸ் சிடம் அது உதவி கோரியது. அதற்கும் வழியை விளக்கி ஆகவில்லை. ஆகவே அதுவே வழியாகி காருக்கு முன்னே கிளம்புகிறது ஒரு சொகுசுகாரை உளுத்த டி.வி.எஸ் அழைத்துச் செல்லும் காட்சியைக் காண்கிறேன் இரண்டும் ஒன்றையொன்று அன்பே...! என்று விளித்துக் கொள்ளக் கேட்கிறேன். இரண்டிற்கும் இடையே வடம் போல் ஒன்று வடமில்லைதான் அது ஆயினும் தேரோட்டம் கண்டேன் தெய்வமே!

Comments