உனக்கென்ன பைத்தியமா….? அவள் கத்திக் கொண்டிருக்கிறாள் அவன் தலைகுனிந்து நிற்கிறான் பிறகவன் தன் கண்களை எடுத்து அவள் முகத்தில் விட்டான் தன் காதுகளைக் கிள்ளி அவளுக்குச் சூட்டினான் தன் நெஞ்சத்தை அவளுள் துடிக்க விட்டான் கண்கள் அவை கொழுத்த ஆசையை இரண்டு துண்டாய் உருட்டிய உருண்டைகள் செவிகள் அவை புறத்திற்கொன்றெனப் படுத்திருக்கும் இரண்டு வேட்டை நாய்கள் நெஞ்சம் அதில் கொசுத்திரள் கொடுக்கின் கும்மாளக் கூச்சல் உனக்கென்ன பைத்தியமா…? அவன் கத்திக் கொண்டிருக்கிறான் அவள் தலைகுனிந்து நிற்கிறாள். |
அ வன் ஒரு மேதை அல்லது அப்படியொரு நினைப்பு நிகழ் குழம்பாமல் அவன் என்ன மேதை? குறிப்பேட்டில் குனிந்திருந்தவன் தேநீர் பரிமாறிய துப்புரவு பணியாளிடம் நெற்றியைச் சுருக்கியபடி கேட்டான்.. "இன்னைக்கு தேதி என்ன..?" அவள் சொன்னாள் "உறுதியாகத்தானா...உன்னை நம்பலாமா?" "சார்.. நேத்துத்தான் என் ஒரே மகளின் பிறந்த நாள்.." நிமிர்ந்து நோக்கியவன் பாட்டைப் போல ஒன்றைப் பேசினான் "எனில் , இருபத்தைந்தேதான்.. ஒரு வேளை முப்பத்தியிரண்டே ஆனாலும் இருபத்தைந்துதான்.."

Comments