Skip to main content

Posts

குட்டிச் செம்பொன்

சுவரைத் தாண்டாத தாழ்ந்த குரலில் உருக்கொள்கிறது ஒரு சச்சரவு அந்த வீட்டின் அம்மாவும் அப்பாவும் மாறி மாறி ஏசிக்கொள்கிறார்கள் வஞ்சினம் சொல்கிறார்கள் அப்பா காலைத் தூக்கிக்கொண்டு அம்மாவை உதைக்க போகிறார் அம்மா ஒரு சொல்லை பழுக்ககாய்ச்சி அப்பாவின் நெஞ்சில் வைத்து தேய்கிறார் அம்மா நெஞ்செங்கும் அழ, அப்பா கண்களுக்குள் அழுகிறார் அப்பா கனவு கண்டிருந்த பொன்னான வாழ்விற்குள் அம்மா மூத்திரம் மொண்டு வைக்கிறாள் அம்மா கனவு கண்டிருந்த பொன்னான வாழ்வை அப்பா எண்ணெய்ச் சவுக்கால் ஓங்கி ஓங்கி அடிக்கிறார் நமக்கு தெரியும் இரண்டு வயதே நிரம்பிய ஒரு குழந்தைக்கு என்ன தெரியுமென்று நான் பேசுவதெதுவும் அதற்கு புரியாது அதனால் பேசவும் முடியாது இரண்டு முகங்களையும் மாறி மாறி பார்க்கும் அது ஐந்தாம் வீட்டின் சுவரை முட்டிக்கொண்டு அழுகிறது பொன்னான வாழ்வில் பூத்த குட்டிச் செம்பொன் அநியாயத்திற்கு வளர்ந்து விட்டது

முட்டக்கோழியின் அதிகாரம்

இன்று அதிகாலைத் தூக்கத்துள் வந்து விழுந்தது ஒரு தொலைபேசி அழைப்பு. எழுந்து வாசலுக்கு வந்தேன். அங்கு ஒரு பெரிய முட்டக்கோழி நின்று கொண்டிருந்தது. அதற்கு அப்புறம் உலகமே தெரியவில்லை. சிலசமயம் அது அப்படியும் இப்படியுமாய் அசைந்தாடுவது நிச்சயம் ஒரு கேலிநடனம். எப்போது வேண்டுமானாலும் யார் வீட்டு வாசலிலும் உருண்டு வந்து நிற்கலாம் ஒரு முட்டக்கோழி. என் தாத்தா கடவுளை செருப்பால் அடித்திருக்கிறார். எனவே நான் கடவுளின் அதிகாரத்திற்க்கு பயப்படுவதில்லை. ஆனால் தாவாக்கொட்டையில் மயிர்வளர்க்கும் எத்தனையோ பேர் தோன்றி என்னென்னவோ சொன்னபோதிலும் முட்டக்கோழியின் அதிகாரத்தை உடைத்தெரிய முடியவில்லை. நான் முட்டக்கோழிக்கு அஞ்சுகிறேன் அதைப் பணிந்து வணங்குகிறேன் முட்டக்கோழியே! என்னை விட்டு விடு

என் முதல் சிறுகதை

இளமஞ்சள் நதி தன் பத்தொன்பதாவது வயதில் அப்பாவிடம் இருந்து முதல் அரையை வாங்கிக்கொண்டு கொஞ்சமும் பதற்றமற்று நின்று கொண்டிருந்தான் பிரபு. அப்பாவிடம்அவனுக்கு எப்போதும் பயமிருந்ததில்லை. தோளிற்கு மேல் வளர்ந்த பிறகல்லகாலிற்கு கீழ் நிற்கும் போதே தோழனாகி விட்டவன் அவன். தன் முடிவில்உறுதியாகவே இருப்பதாகவும், குடும்ப மானம் போய் விடுமென்றால் குடும்பத்திலிருந்து போய் விடுவதாகவும் சொன்னான். கூப்பாடு போட வாய்திறந்த சரஸ்வதியை “ஊரக் கூட்டதடி கழுத முண்ட” என்று காலைத் தூக்கிக்கொண்டு உதைக்கப் போனார் கணேசன். அவள் சேலைத் தலைப்பால் வாயைப் பொத்திக்கொண்டு விசும்பி விசும்பி அழுதாள். பிரபு பீரோவைத் திறந்து தன் ஆடைகளை எடுக்கத் துவங்கினான். “தூக்கத்திலிருந்த மனைவி கழுத்தை நெறித்துக் கொலை; கணவருக்கு போலீஸ் வலை வீச்சு” ... உறக்கம் வராது உலாத்தும் எல்லா ராத்திரிகளிலும் கணேசனுக்கு இந்த செய்தி நினைவில்வரும். போலீஸ் மட்டும் வலைவீசாமல் இருக்குமானால் ஒருவேளை இந்நேரம் அது நடந்து முடிந்திருக்கலாம்.அந்தராத்திரிகளில் அவர் சிகரெட்டுகளை கொன்றுபோட்டு மிதித்தார்.கணேசனுக்கும் சரஸ்வதிக்கும் திருமணத்திற்கு முன்பே ஒ...

அந்தப் பசி நன்கு வறுக்கப்பட்ட கோழி இறைச்சியைப் போல் இருக்கிறது

கையில் ஒரு அலுமினியத் தட்டில்லை உடைகளில் கிழிசலேதுமில்லை ஆனாலும் அந்தக் கண்கள் .. அது நிச்சயம் ஒரு பிச்சைக்காரனுக்குரியவை அவன் உணவு தேக்கு மரக்கதவுகளாலும் சுற்றி நிற்கும் காம்பவுண்டு சுவர்களாலும் இரண்டு கொழுத்த நாய்களாலும் தாளிட்டுக் கொண்டு ஒரு மாளிகைக்குள் வாழ்கிறது. அந்த வீதியில் எத்தனையோ வீடுகள் திறந்திருக்கும் போதிலும் பன்னெடுங்காலமாக அவன் அந்த இரும்பு கிராதிக்கு கீழே தான் நின்றுகொண்டிருக்கிறான். காம்பவுண்டு சுவரை எகிறிக் குதித்து, நாய்களை கொன்று வீசி விட்டு தேக்குமரக்கதவுகளை உதைத்து உதைத்து திறக்கும் நாயக பாவத்தில் அவன் புனையும் பாடல்கள் அவனைப் போலவே இரும்பு கேட்டுக்கு கீழே கிடக்கின்றன. அவன் அப்பாடல்களை தின்று வாழ்கிறான் அல்லது அந்தப் பசியை. அது நன்கு வறுக்கபட்ட கோழி இறைச்சியைப் போல் இருக்கிறது. அது வாழட்டும் காணவே காணாத அந்தப் பிச்சை அதுவும் வாழட்டும் அந்த நாய்கள் அவை வாழ்வாங்கு வாழட்டும்.

பால்ய பருவமென்பது..

உங்கள் பால்யத்தைக் கேட்டால், நீங்கள் கூடைச்சேருள் அமர்ந்து சிரிக்கும் ஒரு குழந்தையையோ விறைத்த ட்ரவுசரும்,விறைத்த முகமுமாய் சீருடையில் நிற்கும் ஒரு பள்ளிச்சிறுவனையோ காட்டுகிறீர்கள். ஒருவன் தன் கல்லூரி ஆல்பத்தைக் காட்டுகிறான். அதில் அவன் பல் முப்பத்திரண்டும் தெரிகிறது. நான் நேற்று காலை எடுத்த என் புகைப்படத்தைக் காட்டுவேன். பால்யத்தின் வாகனத்திலேறி பால்யத்தின் கனவுகளோடு தொலைதூர மலைவெளிக்கு போகிறது ஒரு காதல். அது கட்டிக்கொள்ள எண்ணற்ற கொண்டை ஊசி வளைவுகளை சமைத்து வைத்தீரே, வாகனத்தில் நிரப்பப்பட்டிருக்கும் பால்யத்தின் காற்றை அது வீடு திரும்பும் வரையிலேனும் பிடுங்கி விடாதிருப்பீரா ஆண்டவரே.. நம் இனிப்பினிப்பான கற்பனைகள் ஒரு முடிவுக்கு வரும் தறுவாயில் கூடைச்சேர்கள் காலொடிந்து சரிகின்றன. நம் குழந்தைமையின் அமர்ந்தகோலம் நடுநடுங்கியாடி தொப்பென்று கீழே விழுகிறது

சமயவேல் கவிதை

அழகென்னும் அபாயம் ஒரு நெடுஞ்சாலைப் பயணத்தில் ஊர்தி எந்திரம் நிறுத்தி சாலையோரம் கொஞ்சம் நடந்து ஓங்கி வீசுகிற காற்றில் நிரம்பியபடி சிறுமரக் கூட்டமொன்றை நெருங்குகின்றேன் நுணா மரப் புதரொன்றில் ஒரு சிறு பறவை இறகுகள் அடர் சிவப்பு கழுத்து மயில் நீலம் உருண்டை வயிறு சாம்பல் நிறம் கொண்டை மஞ்சள் நிறம் கண்கள் என்ன நிறம்? கால்கள் பசுமஞ்சள் நிறம் விரல்கள் அரக்கு நிறம் நிற்கிற மரமோ மர நிறம் அந்த இத்தினியூண்டு பறவை கொண்டையை ஆட்டி ஒரு வினோதக் கூவலை எழுப்பியபோது என் பெரு நகர ஆத்மாவின் தலை வெட்டுண்டு உருண்டது மரணத்தின் விளிம்பை ஒரு நடனக் கூடமாக்கியது என் உடல் கூவல் முடித்து பறவை விருட்டென்று பறந்தோடியதும் உயிர் மீட்டு ஓர் குழந்தையாக நின்றேன்

தற்கொலைக் கவிதையின் முலை

நாம் ஓடிப்போய் ஒரு தற்கொலைக் கவிதைக்குள் ஒளிந்து கொள்கிறோம். துரத்திவந்த தற்கொலை எங்குபோனான் என்று தெரியாமல் குழம்புகிறது. கவிதை தற்கொலையின் ஜென்மசத்ரு. மனிதனுக்கு அரவமும் அரவத்திற்கு மனிதனுமாக கடவுள் கவிதையையும் தற்கொலையையும் படைப்பித்தார். கால்களை தப்ப விட்டு விட்டு நிலத்தை ஓங்கி ஓங்கி கொத்துகிறது தற்கொலை. ஒரு தற்கொலை கவிதையின் முலை கச்சணியாதது உலகெங்கும் வாழும் பித்தன்கள் கடித்து கடித்து பாலுண்பது தற்கொலை கவிதையின் முலை ஒரு பருவுடல் தாளாதது மனுஷி எவளிலும் வளரவே வளராதது மாமுலை போற்றுதும் ! மாமுலை போற்றுதும் !