இந்தத் தனியறைக்குள் கொஞ்சம் கோப்பையை நிரப்பி ஆண்ட்ராய்டு போனோடு ச்யர்ஸ் சொல்கையில் செத்து மிதக்கிறது நம் மது. நமது ஏகாந்தங்கள் களியாட்டங்கள் தாறுமாறான பாடல்கள் கண்ணீரில் ஊறிய சோபா செட்கள் திடீர் திருப்பங்களில் நிகழும் அடிதடிகள் எல்லாவற்றையும் எவனோ ஒருவன் துவரப் பெருக்கி பூமிக்கு வெளியே தள்ளிவிட்டான். நமது அறையிலிருந்து கோபித்துக் கொண்டு கிளம்பும் ஒருவனைப் போல மகிழ்ச்சி ஆவேசமாக படியிறங்கிப் போவதைப் பார்! இப்போதே புரிகிறது போதை உனது கோப்பையிலிருந்துதான் எனது தலைக்கு ஏறியிருக்கிறது. உண்மையில் நாம் மதுவை காய்ச்சித்தான் குடித்திருக்கிறோம் நண்பா! (மிஷ்கினுக்கும், சாம்ராஜிற்கும்) |
இ ந்தமுறை மருத்துவர் கண்டிப்பாகவே சொல்லிவிட்டார்… “நீங்கள் கண்டதையும் போட்டுக் குழப்பிக் கொள்ளக் கூடாது” எனக்கு ஓரளவு புரிகிறது தேநீர் மட்டுமே இருக்கும் தேநீரைச் சொல்கிறார் ‘கடி' க்கு வேறொன்றும் கூடாதென்கிறார் சலனமற்ற குளத்தைத்தான் சொல்கிறார் எனில், எனது நான்கு கழுதைகளையும் எங்கு வைத்துக் குளிப்பாட்ட? எனக்கு நன்றாகவே புரிகிறது சாமான்ய நிலையிலிருந்து என்னை சாமாதி நிலைக்குத் தூக்குகிறார் மறைஞானத்தை மாத்திரையாக்கப் பார்க்கும் இந்த நாச்சிமுத்து ஒரு வேளை ‘ லாவோட்சு' வின் வம்சாவழியோ என்னவோ? “இப்போதுதானே சொன்னேன்…” என்றொரு குரல் உலுக்க விழித்தேன் பாருங்கள், அதுகூட அவர் அதட்டியதில்லை நான் அதட்டியதுதான்.

Comments