நீ ஒன்றை விரும்பினாய் மனிதன் மின்னலை விரும்புவதைப் போல நீ ஒன்றை ஆழமாக மோகித்து விட்டாய் அதுவோ தூர தூரத்தில் உச்சியின் உச்சியில் வீற்றிருக்கிறது. அம்மா நிலவைக் காட்டி சோறூட்டுவதில் ஒரு போதனை உள்ளது துயரம் என்னவெனில் அதை நாம் கற்பதில்லை ஆசை அழிக்க முடியாத ஒரு மலர் அது பிறக்கிறது அழிவதென்னவோ நீ அழிகையில்தான். நீ ஒன்றில் பித்தாகிவிடுகிறாய் அதுவோ ஆகப் பெரியது ஆகவே நீ அதற்குப் பதிலாக அது போல் ஒன்றை காதலிக்கத் துவங்குகிறாய் உன் பெரியது சிறிதளவே உள்ள சிறியது நீ அதனுடன் சிரிக்கப் பழகுகிறாய் இளையராஜவைத்தான் காதலிக்கிறோம் என்பதறியாமல் ராஜாவைப் போல் பாடும் பையன்களை சிநேகித்த அக்காக்கள் கூடவே ரஹ்மானைக் காதலிப்பதற்குப் பதிலாக சடை வளர்த்த பையன் பால் மையல் பூத்து மணமுடித்த தோழியர்கள் யாவரும் நலம்தானே இப்போது? |
இ ந்தமுறை மருத்துவர் கண்டிப்பாகவே சொல்லிவிட்டார்… “நீங்கள் கண்டதையும் போட்டுக் குழப்பிக் கொள்ளக் கூடாது” எனக்கு ஓரளவு புரிகிறது தேநீர் மட்டுமே இருக்கும் தேநீரைச் சொல்கிறார் ‘கடி' க்கு வேறொன்றும் கூடாதென்கிறார் சலனமற்ற குளத்தைத்தான் சொல்கிறார் எனில், எனது நான்கு கழுதைகளையும் எங்கு வைத்துக் குளிப்பாட்ட? எனக்கு நன்றாகவே புரிகிறது சாமான்ய நிலையிலிருந்து என்னை சாமாதி நிலைக்குத் தூக்குகிறார் மறைஞானத்தை மாத்திரையாக்கப் பார்க்கும் இந்த நாச்சிமுத்து ஒரு வேளை ‘ லாவோட்சு' வின் வம்சாவழியோ என்னவோ? “இப்போதுதானே சொன்னேன்…” என்றொரு குரல் உலுக்க விழித்தேன் பாருங்கள், அதுகூட அவர் அதட்டியதில்லை நான் அதட்டியதுதான்.

Comments
இதுதான் இசை டச் .