சங்கப்பாடல்களின் வயது இரண்டாயிரத்து சொச்சம். அபூர்வ சொற்சித்திரங்களோடும் ஆழ்ந்த படிமங்களோடும் வார்க்கப்பட்ட விழுமிய ஆபரணம். கவித்துவத்தால் செதுக்கப்பட்ட அந்த தேரை வடம் பிடித்து நவீனகாலம் வரை கொண்டு வந்து சேர்த்திருப்பது ஒரு வகையில் நமக்கு வாய்த்த பேறு. மரபை உடைத்து நா.பிச்சமூர்த்தியின் 'பெட்டிக்கடை நாராயணன்’ கவிதை நவீனகவிதைக்கு அச்சாரமானது. எழுபதுகளில் அதன் உக்கிரம் வலுப்பெற்றது. நவீன கவிதைகள் வெவ்வேறு பரிமாணங்களில் கச்சிதமான உத்திகளோடு புதிய தரிசனங்களை இன்று அசலாக பெற்றிருக்கின்றன. அழகியல் மற்றும் எதிர் அழகியல் தன்மைகளோடு சுண்டக்காய்ச்சிய கவிதைகளை எழுதிவரும் கவிகளுள் கவிஞர் இசை முக்கியமானவர். கடந்தகாலத்தில் பகடி ஆட்டத்தை நிகழ்த்தியவர் இந்த முறை அதிலிருந்து சற்று விலகி தன்னை குவியாடியாக்கி அக தரிசனங்களில் மெளனித்துக் கிடக்கிறார். காலந்தோரும் தன் ஆத்மாவை கூர் செய்து கொண்டே இருப்பவன்தான் உன்னதக் கலைஞனாக உருமாற்றமும் கொள்கிறான். நவீன கவிதைகள் படிமம், உவமை மற்றும் உருவகத்தால் திளைத்தவை. இசையின் கவிதைகள் காட்சி படிமத்தால் விரிபவை. பெரும்பான்மைய...