வ சந்த மாளிகை என்பது காதலன் காதலிக்கோ காதலி காதலனுக்கோ கட்டி எழுப்பும் கட்டிடமல்ல காதல், மண்ணில் தோன்றுவதில்லை அதன் பிறப்பே வசந்தமாளிகையில்தான் அல்லது காதல் பிறந்த மறுகணமே மாளிகை வான் அளாவ வளர்ந்துவிடுகிறது எழுப்பப்பட்ட மாளிகைகளில் எந்த மாளிகையும் தரைமட்டமாவதில்லை பூச்சுக்கள் உதிர்கின்றன ஆங்காங்கே புற்றுகள் வளர்கின்றன கோட்டான்கள் அலறுகின்றன எல்லா இடிபாடுகளுக்கிடையேயும் நினைவுறுப் பேய்கள் அங்குமிங்குமாய் தாவிக் கொண்டிருக்கின்றன வாரத்தில் ஒரு முறையேனும் நான் என் மாளிகை முன் அமர்ந்து நீண்ட சிகரெட்டைப் புகைப்பேன் ஒரு தீபாராதனை போல அந்தப் பேய்கள் வாழ்க என!
“ஒ ன்பது மணிக்கு சடோன்னு தண்ணி ஏத்தறவங்க ஏத்திக்கோங்க..” வீதியில் கூவிய படி செல்கிறாள் பரிமளா மூன்று குழந்தைகளுடன் மல்லுக்கட்டும் தனிக் கல்யாணி மில்லுக்குக் கிளம்பும் பரபரப்பிற்கிடையே மோட்டர் ஸ்விட்ச்சின் மீது பாய்கிறாள் பரிமளாவிற்கும் கல்யாணிக்கும் தீராத பகை மனத்தாங்கல் அல்ல , கை கலப்பு அதுவும் நாலு முக்கில் வைத்து பரிமளாவிற்கு கல்யாணியுடன் ராசி ஆக வேண்டும் என்று ஒரு அவசியமுமில்லை சாகிற வரைக்கும் சங்காத்தம் கிடையாது இது உறுதி. மொத்த வீதிக்குமான கூவலே எனினும் அதைக் கல்யாணி வீட்டு முன்தான் கூவினாள் இதுவும் உறுதி.