Saturday, November 11, 2017

இரண்டு வழிகள்


பொதுவழியும்
சிறப்பு வழியும்
ஒன்றாகும் இடத்தில்
என்னய்யா இரைச்சல்?
பொது வழியும் சிறப்பு வழியும்
ஒன்றாவதால்
எழும் இரைச்சல்.

     நன்றி : உயிர்மை- நவம்பர்-17

Friday, November 10, 2017

டி.வி-யைப் போடு !

                                         
                                                                                 
நிசப்தம் ஒரு நச்சரவம்
அதன் நீலம் உந்தன்  மூளையைத் தீண்டும் முன்
டி.வி-யைப் போடு!

கொட்டும் அருவியும் ஒழுகும் சுனையும்
வெக்கை அறையைச் சற்றே ஆற்றலாம்
டி.வி-யைப் போடு!

எப்போது திறந்தாலும் செய்திகள் ஓடும்.
விடிய விடிய ஜோக்குகள் வெடிக்கும்
இரண்டில் ஒன்றைப் பார்த்துச் சிரிக்கலாம்
டி.வியைப் போடு!

உயிர்நடுக்கும் கோர விபத்துகள் அடிக்கடி காட்டும்
கடவுளின் கருணையால் நீ அதிலில்லை
டி.வி-யைப் போடு!

முதலையின் வாயிலொரு வரிக்குதிரை...
உனக்கு அந்தக் குதிரையைத் தெரியாது
முதலையையும் தெரியாது
டி.வி- யைப் போடு !

காமுகியொருத்தி 
தன் பரந்த முதுகை உவந்து தருவாள்
 கையது ஒடுக்கி காலது குறுக்கி
நீ அதில் கிடக்க
டி.வி-யைப் போடு!

பக்கத்து வீட்டின் மகிழ்ச்சி வெள்ளம்
பெருக்கெடுத்து வந்துனை
அடித்துப் போகும் முன்
டி.வி-யைப் போடு!


                                                      நன்றி : உயிர்மை - நவம்பர் -2017

Thursday, October 5, 2017

இந்தவாழ்வு சாஸ்தா டீ ஸ்டாலைப் போல் சிக்கலானது

இந்த ரம்யமான அதிகாலையில்
மாமதுரத் தேநீர் வாய்த்துவிட்டது
இரண்டு மொடக்கு மொடக்கிவிட்டு
கீழே வைத்தேன்
தினத்தந்தியில் 
விருச்சிக ராசிக்கு என்ன பலனென்று
தேடிப்பார்த்துவிட்டுத் திரும்பினால்
இப்போது 
டேபிளில் இரண்டு டம்ளர்கள்
பக்கத்துச் சீட்டிலும் யாருமில்லை
சம அளவுள்ள தேநீருடன்
என்னை நோக்கிச் சிரிக்கும் இந்த இரண்டு டம்ளர்களில்

எந்த டம்ளர் எனது டம்ளர் ?                                                

                                                                      விகடன் - தீபாவளி மலர் Saturday, July 8, 2017

முக்கால் நிமிஷம்

நள்ளிரவு 2:00 மணிவாக்கில்
உன் புகைப்படத்தை
என் Dp- யாக வைத்தேன்

பெருந்திணை
அன்பின் புறநடையென்பதால்
உடனே
அஞ்சி அகற்றி விட்டேன்.

ஒரு முக்கால் நிமிஷம்
நீ என் உரிமையில் இருந்தாய்.

அதற்குள் யாரேனும் பார்த்திருப்பார்களா?
நடுசாமத்தில் யார் பார்க்கப்
போகிறார்கள்?

ஆனாலும்
யாரேனும் பார்க்கத்தானே வைத்தேன்.
ஒருவர்  கூடவா
பார்த்திருக்க மாட்டார்கள்?

நல்லவேளை
நீ குளோசப்பில் சிரிக்கவில்லை
எனவே,எந்தக் கண்ணிலும் விழுந்திருக்காது
ஒரு கண்ணிலுமா விழுந்திருக்காது?

          நன்றி: உயிர்மை- ஜூலை-2017
Friday, July 7, 2017

ஆயிரம் ஸ்தோத்ரம்

               
                       
                  


காந்திபுரம், கிராஸ்கட் ரோட்டில்
மொத்தம் 9 குறுக்குச்சந்துகள் உள்ளன
அதில் மூன்றாவது சந்தில்
கனவுகளுக்குத் தாக்குப்பிடிக்க முடியாத ஒரு மகள்
பள்ளிச்சீருடையில்
நாணிக்கோணிக் காதலித்துக் கொண்டிருக்கிறாள்
அதன் ஐந்தாவது சந்தில்
19 வயதில் இல்லறத்துள் உதைத்துத் தள்ளப்பட்ட
அவள் அன்னை
விட்டதைப் பிடிக்கும் முனைப்புடன் தீவிரமாக காதலித்துக் கொண்டிருக்கிறாள்.


முதல் சந்தில் அமர்ந்திருக்கிறார்
ஒரு அரசமரத்தடி பிள்ளையார்.
அவர்தான் அந்த ஒன்பது சந்துக்களையும்
இழுத்துப் பிடித்துக் காவல் செய்கிறார்.
வாயிலிருந்து விசிலை இறக்காமல்
ஓடியாடி பணியாற்றுகிறார்.
ஒரு கண்டிப்பான போக்குவரத்துக் காவலரைப் போல
அந்தந்த சந்திற்கான வாகனங்களை
மிகச் சரியாக
அதனதன் வழியில் விடுகிறார்.


“privacy “  என்கிற சொல்லால்
ஆசிர்வதிக்கப்பட்டிருக்கிற இருவரும்
ஒருவர் போனை ஒருவர் நோண்டுவதில்லை.
ஒருவர் அறையை இன்னொருவர்
துப்பறிவதில்லை.


நள்ளிரவில் சின்ன சத்தமும் துல்லியமாகிவிடும் என்பதால்
இரண்டு போன்களிலும்
DIAL PAD TUNE “ கள் “ mute “ – இல் இருக்கின்றன.அன்னையர் தினத்திற்கு
மகள் ஒரு கட்டிமுத்தத்தை பரிசளிக்கிறாள்.
காதலர்தினத்திற்கு
அன்னை
ஒரு பற்தடத்தை
பரிசளிக்கிறாள்.
மூன்றாவது சந்தும் ஐந்தாவது சந்தும்
அதனதன் கதியில் இயங்கிக் கொண்டிருப்பதால்
கட்டிமுத்ததிற்கோ, பற்தடத்திற்கோ
ஒரு குறையும் நேர்வதில்லை.


உமைக்கினிய மைந்தன், கணநாதன்
நம் குடியை வாழ்விப்பான்.
அவனுக்குச் சொல்வோம் ஆயிரம் ஸ்தோத்ரம்.


                     
                    நன்றி : உயிர்மை : ஜூலை -2017

Tuesday, June 6, 2017

சின்ன குலுங்கல்

உலகம்
ஒரு சின்ன  குலுங்கு குலுங்கிவிட்டு
இயல்புக்கு திருப்பி விட்டது.
சேதாரம் ஒன்றும் பெரிதாக இல்லை.
ஒரே ஒரு கண்ணாடி டம்ளர் உடைந்து விட்டது
எதில் அருந்தினால்
உன் தாகம் தணியுமோ
அந்தக் கண்ணாடி டம்ளர்.

Tuesday, May 16, 2017

லீலைவெயில் வறுத்தெடுத்ததால்
பியர் பருகும் ஆசை துளிர்த்துவிட்டது
துளிர்த்த மறுகணமே
பெருமரமாகி பேயாட்டம் போட்டது
ஒழுங்காக ஓடிக்கொண்டிருந்த
சித்தப்பாவின் இதயத்துடிப்பை பிடித்து நிறுத்தி
அரைநாள் விடுப்பு பெற்றேன்.
வெயில் நன்று, அது வாழி!
சூரியன் எரிய எரிய
என் பியர் குளிர்ந்து வருகிறது
வெம்மையைப் போற்றுவோம்; அது குளிரை இனிப்பாக்குகிறது
வெயிலைப் பாடியபடி
பியரைப் பாடியபடி
மதுவிடுதிக்கு பயணமானேன்.
திடீரென முழு  வானமும் இருட்டிவிட்டது.
என் உலகம் மொத்தமாய்த் தொங்கிவிட்டது.
மதுவிடுதியின் வாசலில் வண்டியை நிறுத்துகையில்
மூக்குநுனியில் ஒரு மழைச் சொட்டை உணர்ந்தேன்
சிப்பந்தி அருகில் வந்து
" என்ன வேண்டும் .." என்றார்.
"கொதிக்கக் கொதிக்க வெய்யில்" என்றேன்

Friday, May 12, 2017

காந்தியம்


மஞ்சள் என்று சொல்லி விட முடியாதபடிக்கு
ஒரு வித மரக்கலரில்
இடையே கொஞ்சம் பச்சை வாங்கி
சிவந்த பொன்னிறத்தில்
கிறங்கடிக்கும் வாசனையுடன்
நடுமத்தியில்
அளவானதான அழகான ஓட்டையோடு
நாவூறித் ததும்பச் செய்யும்....
உலகத்தை  வெல்வது கிடக்கட்டும்
முதலில்
இந்த உளுந்து வடையை வெல்!

                 நன்றி: ஆனந்த விகடன்

பாசஞ்சர் இரயிலில் ஓர் எலிஒரு நல்ல கவிதையின் இடையே
குறுக்கிட்டு நச்சரித்தாள்
அந்தப் பிச்சைக்காரச் சிறுமி.
இப்போதெல்லாம்
கருணையும், கண்டிப்புமான
ஒரு முகத்திற்கு பழகியிருக்கிறேன்.
அதை அவளிடம்
காட்டித் திரும்புவதற்குள்
கவிதைக்குள் விளையாடிவிட்டது
ஒரு சுண்டெலி.
இரண்டு வரிகளை
இடம் மாற்றி வைத்துவிட்டதது.
அந்தக் கவிதை புரியாமல்தான்
அதைத் தலைமேல்
தூக்கி வைத்துக் கொண்டு
ஒரு சமோசா வியாபாரியைப் போல்
பெட்டி பெட்டியாக அலைகிறேன்.

Tuesday, May 9, 2017

காணீர்! 39 வருடங்களாக
ஒழுக்கம், நன்னெறி
தார்மீகம், கண்ணியம்
வெங்காயம், மிளகாய்
கத்தரி, தக்காளி
எல்லாவற்றையும்
ஏத்திக் கட்டிக்கொண்டு 
நன்றாகத்தான்
உருண்டு  வந்தந்த  வண்டி.

இந்தக் காலையில்
ஒரு சின்னஞ்சிறு மல்லிகை
தடுக்கி
அது நடுரோட்டில்
தலைகுப்புற
விழுந்ததைப் பாரீர்!

வெங்காயமும் நன்னெறியும்
சாக்கடைக்குள் 
உருண்டோடுவதைக் காணீர்!Saturday, May 6, 2017

வார்த்தையில் வாழ்தல்


                     

    மனிதஇனத்தின் வாயிலும், எழுத்திலும் தொடர்ந்து பயின்று வரும் வரிகள் “ பொன் மொழிகள் “ ஆகி விடுகின்றன. பழமொழிகளும் இவற்றில் அடங்கும். இரண்டு எழுத்தாளர்கள் சண்டையிட்டுக் கொள்ளும் போது  இருவரின் சார்பிலும் மாறி மாறி நின்று “ வால்டேர்வழக்காடுவதைக் காண முடியும். ஜி.நாகராஜன் பொன்மொழிகளைக் கேலி செய்யும் பாவனையில் எழுதிய ஒரு பத்தியில் உள்ளதுதான்...மனிதனைப் பற்றி பொதுவாக எதுவும் சொல்லச் சொன்னால்   மனிதன் மகத்தான சல்லிப்பயல் என்றுதான் சொல்வேன் என்பது. இப்போது அது ஒரு “பொன் மொழியாகவேமாறி தீவிர புழக்கத்தில் இருக்கிறது.

  எனக்கு பொன்மொழிகளின் மீது ஈர்ப்பு உண்டு. “அதிகாரி வீட்டு கோழிமுட்டை குடியானவன் வீட்டு அம்மிக்கல்லையும் உடைத்துவிடும்என்கிற பழமொழி படித்த கணத்திலிருந்து இன்று வரை என்னைத் தொடர்கிறது. ஆயினும் பொன்மொழிகளின் குணமும், கவிதையின் குணமும் ஒன்றல்ல. எனவே இக்கட்டுரை “பொன்னால் ஆன சொற்களைபேசுகிறது. கூடவே பொன்மொழியின் இயல்பான “பலர் வாய்ப்படுதல்என்கிற தன்மையையும் கணக்கில் கொள்கிறது.

  இரண்டாயிரம் வருடங்களைத் தாண்டிய தொடர்ச்சியுள்ள நமது மொழியில் தகத்தகாயம் காட்டும் சொற்கள் ஏராளம். இந்த மூன்று பக்கத்தில் அவற்றை முழுவதும் சொல்ல இயலாது. எனவே சிலவற்றைப் பார்ப்போம்...

   “ அற்றைத் திங்கள் அவ்வெண் நிலவில்
  எந்தையும் உடையேம் எம்குன்றும் பிறர்கொளார்
  இற்றைத் திங்கள் இவ்வெண் நிலவில்
  வென்றெறி முரசின் வேந்தர் எம்
  குன்றும் கொண்டார் யாம் எந்தையு மிலமே.

   தன் தந்தையான பாரியையும், தமது நிலமான பறம்பு மலையையும் இழந்து தவிக்கும் பிரிவுத்துயரில் “பாரி மகளிர்பாடியது.. சிடுக்கற்ற எளிய ஐந்து வரிகள்.. அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில்என்கிற சொற்ச்சேர்க்கையிலேயே  ஏதோ ஒரு மாயம் இருக்கிறது போலும்? எல்லாப் பிரிவுகளுக்குமான ஏக்கத்தையும் தாங்கிக் கொண்டு இன்று வரை வாழ்வாங்கு வாழ்கிறது இக்கவிதை.

 கொடிது கொடிது வறுமை கொடிது
 அதனினும் கொடிது இளமையில் வறுமை
                          என்கிறாள் ஒளவை.

 முதல் வரியை “ பொன் மொழிஎன்றும், இரண்டாவது வரியை கவிதையின் பொன் மொழி “ என்றும் சொல்லலாம். வறுமையும், இளமையில் வறுமையும் ஒன்றல்ல என்று பிரித்துக் காட்டியதின் மூலம் எம் பாட்டி இதைக் கவிதையாக்கி விடுகிறாள்.மேல்நிலை வகுப்பில் பள்ளியிலேயே முதல் மதிப்பெண் பெற்று தேறி, ஒரு ஷூ வாங்கித் தரவில்லை என்பதற்காக கல்லூரிப் படிப்பையே பாதியில் நிறுத்திக் கொண்ட ஒருவனை எனக்குத் தெரியும்.

   திருக்குறள் பள்ளித்தலத்திலிருந்து பேருந்துகளின் முகப்பு வரை நீக்கமற நிறைந்திருக்கிறது.  வாழ்க்கையில் ? என்று கேட்காதீர்கள். “ சொல்லுதல் யார்க்கும் எளியவாம்...என்று அய்யனே சொல்லி இருக்கிறார். “ அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கைஎன்று மங்களகரமாகத்தான் நாம் வாழ்க்கையை துவங்குகிறோம்.ஆனாலும் பாருங்கள், எவ்வளவு இழுத்துப் பிடித்தும் நிற்காமல்  “வண்டி ரோட்டோர புளியமரத்தை நோக்கியே ஓயாமல் பாய்கிறது. குறளில் பொன்னால் ஆனவை அதிகம். அவை மனிதருக்குத் தக்க மாறவும் செய்யும்.

  “ அல்லல் பட்டு ஆற்றாது அழுத கண்ணீர் அன்றே
  செல்வத்தைத் தேய்க்கும் படை “

என்பதை நாம் தொடர்ந்து நம்புவோம். அதைத் தவிர நமக்கு வேறு வழியில்லை.
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
 என்பும் உரியர் பிறர்க்கு

என்கிற குறள் நமக்கு மனப்பாடம். ஆனால் அதன் அர்த்தத்தின் முன்தான் மானுடகுலம் மண்டையை சொரிந்தபடி நிற்கிறது.
 
  கம்பனின் பாடல் ஒன்று... அசோகவனத்தில் சீதையை கண்டதைப் பற்றி அனுமன் இராமனுக்குச் சொல்லும் பாடல். பட்டிமன்றங்களில் கூறு போட்டு வித்தும் இன்னும் மிச்சமிருப்பது. எத்தனை நாவில் புரண்டெழுந்தாலும் அழுக்கடையாதது ...

 கண்டனென், கற்பினுக்கு அணியை, கண்களால்
 தெண்திரை அலைகடல் இலங்கைத் தென்னகர் ;
 அண்டர் நாயக! இனித் துறத்தி ஐயமும்
 பண்டுள துயரும், என்று அனுமன் பன்னுவான்.

  உண்மையில் இப்பாடலை  முதன்முதலாக ஒரு பட்டிமன்றத்தில்தான் கேட்டேன். கண்டென் / கற்பினுக்கு அணியை / கண்களால் / என்று ஒவ்வொரு வார்த்தையும் நிரல்பட நிற்கும் கோலத்தைப் பற்றி பேச்சாளர் உருகி உருகிப் பேசினார். சீதையை என்று தொடங்கினால் அடுத்த வார்த்தை காணவில்லை என்று கூட வரலாம் அல்லவா ?அந்த ஒரு நொடி மயக்கமும், அது தரும் வேதனையும் கூட தன் தலைவனுக்குத் தகாது என்று எண்ணித்தான் “ கண்டனென்என்று துவங்குகிறானாம் அனுமன். சரி .. கண்டது சீதையை என்றும் சொல்லவில்லை... “கற்பினுக்கு அணியை “ என்கிறான். சீதையை என்று மட்டும் சொன்னால் அவள் கற்பு நிலை குறித்த ஐயம் வருமாம்.. இப்படி விளக்கிக் கொண்டே போனார்.. எனக்கு நம்பும் முன்னே அழுகை பொத்துக் கொண்டது. அழுத பிறகு சந்தேகம் கொள்ளுதல் தகாது.

கம்ப ராமாயணம் என்.சி.பி.எச் பதிப்பு இப்படி சொல்கிறது....

  ‘ கண்டனென் என்ற சொல், ‘த்ருஷ்டா ஸீதா‘ என்ற முதல் நூல் தொடரைத் தழுவியது. ஆனால், அடுத்துள்ள கற்பினுக்கு அணியை என்ற தொடர், ஸீதா என்கிற சொல்லைக் காட்டிலும் ஆழ்ந்த, சிறந்த, நுணுக்கமான பொருளை உடையதாகும் “

  “ கண்களால் “ என்கிற சொல் அமைப்பிற்கு இவ்வுரை தருகிற விளக்கம் ஏற்கவே முடியாதபடி இருக்கிறது. இப்படி இன்னும் பலப்பலவாக இப்பாடலை விரித்து விரித்து விதந்தோதுவர் கம்பனடிப் பொடிகள்.

  இன்று எங்கெங்கு காணினும் பாரதி. பாரதி சிட் பண்ட்ஸிலிருந்து பாரதி பரோட்டா ஸ்டால் வரை நான் பார்த்திருக்கிறேன். வெள்ளித்திரையிலிருந்து ஆட்டோ முதுகு வரை அவன் ஆட்சி நடக்கிறது. இன்று பாரதியின்றி ஒரு நாளைக் கூட தங்களால் கடக்க முடியாது என்பது போல் பாவனை காட்டும் தழிழ்ச்சமூகத்தால், அன்று அவனை காப்பாற்றி வைக்க இயலவில்லை. “ அன்புடையார் இன்புற்று வாழ்தல் இயல்பு என்கிற அவன் வரியையும், அவன் வாழ்வையும் சேர்த்துவைத்து யோசிக்கையில் அவ்வளவு கசக்கிறது.

. பாரதியின் புகழ்பெற்ற வரிகள் பலவும் விநாயகர் நான்மணிமாலைஎன்கிற வழிபாட்டுப் பாடலொன்றில் வருகிறது..

  “ நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்கு உழைத்தல்,
    இமைப்பொழுதும் சோராதிருத்தல் – உமைக்கு இனிய
    மைந்தன் கணநாதன் நம் குடியை வாழ்விப்பான்:
    சிந்தையே ! இம்மூன்றும் செய்.

   உப்பு, புளி, மிளகாய் போன்ற அற்பப் பிரச்சனைகளை கணநாதன் பார்த்துக் கொள்வான். நீ வீட்டை விடுத்து நாட்டைப் பற்று மனமே என்கிறான்.
 “  உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதினும் என்கிற வரியோடு சேர்த்து கச்சணிந்த கொங்கை மாதர் கண்கள் வீசு போதினும் “ என்றெழுத நெஞ்சத்தில் நேர்மையும் துணிவும் வேண்டும்.

      அவனது  இன்னொரு கவிதை ...

                 விடுதலைப் பாட்டு

மானுடர் உழாவிடினும் வித்து நடாவிடினும்
வரம்பு கட்டாவிடினும் அன்றி நீர்பாய்ச்சாவிடினும்
வானுலகு நீர்தருமேல் மண்மீது மரங்கள்
வகைவகையாய் நெற்கள்புற்கள் மலிந்திருக்கும் அன்றே?
யான் எதற்கும் அஞ்சுகிலேன், மானுடரே, நீவிர்
என் மதத்தைக் கைக்கொள்மின்: பாடுபடல் வேண்டா:
 ஊன்உடலை வருத்தாதீர்: உணவு இயற்கை கொடுக்கும்:
 உங்களுக்குத் தொழில் இங்கே அன்பு செய்தல் கண்டீர் !

   பிரமிள் என்கிற பெயரோடு சேர்த்தே உச்சரிக்கப்படுவது அவரது காவியம் “ என்கிற கவிதை. ஆனாலும் “எல்லை என்கிற கவிதை எதற்கும் குறைந்ததல்ல..

கருகித்தான் விறகு/ தீயாகும்
அதிராத தந்தி/ இசைக்குமா?
ஆனாலும்/ அதிர்கிற தந்தியில்/ தூசு குந்தாது
கொசு/ நெருப்பில் மொய்க்காது

  ஒரு காலத்தில் எனக்கு சிடுக்கானவராக இருந்த ஆத்மாநாம் இன்று எளிய கவிஞராகி விட்டார். அதாவது “ இந்தக்காலம்அவரது ஒவ்வொரு சொற்களையும் தெளிவாக விளக்கி விடுகிறது.

          ஏதாவது செய்

ஏதாவது செய்
உன் சகோதரன்
பைத்தியமாக்கப் படுகிறான்.
உன் சகோதரி
நடுத்தெருவில கற்பிழக்கிறாள்
சக்தியற்று
வேடிக்கை பார்க்கிறாய் நீ
ஏதாவது செய் ஏதாவது செய்
கண்டிக்க வேண்டாமா
அடி உதை விரட்டிச் செல்
ஊர்வலம் போ பேரணி நடத்து
ஏதாவது செய் ஏதாவது செய்
கூட்டம் கூட்டலாம்
மக்களிடம் விளக்கலாம்
அவர்கள் கலையுமுன்
வேசியின் மக்களே
எனக் கூவலாம்
ஏதாவது செய் ஏதாவது செய்
சக்தியற்று செய்யத் தவறினால்
உன் மனம் உன்னை சும்மா விடாது...
சரித்திரம் இக்கணம் இரண்டும் உன்னை
பேடி என்றும்
வீர்யமிழந்தவன் என்றும்
குத்திக் காட்டும்
இளிச்சவாயர்கள் மீது
எரிந்து விழச்செய்யும்
ஆத்திரப்படு
கோபப்படு
கையில் கிடைத்த புல்லை எடுத்து
குண்டர்கள் வயிற்றைக் கிழி
உன் சகவாசிகளின் கிறுக்குத் தனத்தில்
தின்று கொழிப்பவரை
ஏதாவது செய் ஏதாவது செய்.
                       
  பொன்னாலான மேலும் இரு கவிதைகள்..
                    
           சுண்டல்

         கொலு வைக்கும் வீடுகளில்
         ஒரு குத்துச் சுண்டல்
         அதிகம் கிடைக்கும் என்று
          தங்கச்சி பாப்பாக்களை
           தூக்க முடியாமல்
         தூக்கி வரும்
         அக்கா குழந்தைகள். 

                                   ( கலாப்ரியா)

  ஒரு காட்சியை, கடைசியில் இடம் பெறும் ஒரே ஒரு சொல்லால் கவிதையாக்கி நிலைநிறுத்தியும் விட்டது இக்கவிதை.

                      கையில் அள்ளிய நீர்

அள்ளி
கைப்பள்ளத்தில் தேக்கிய நீர்
நதிக்கு அந்நியமாச்சு
இது நிச்சலனம்
ஆகாயம் அலைபுரளும் அதில்
கை நீரைக் கவிழ்த்தேன்
போகும் நதியில் எது என் நீர்?
                             ( சுகுமாரன் )

 காலப் பெருவெள்ளத்தில் துளியாய் மிஞ்சும் தனிமனிதனின் அகங்காரத்தை நோக்கி பல்லாண்டுகளாய் பேசி வருகிறது இக்கவிதை.

மனுஷ்யபுத்திரன் கவிதை ஒன்று..
   
              குட்டி இளவரசியன் அறிதல்கள்

காலம் என்கிறீர்கள்
அகாலம் என்கிறீர்கள்
காலத்தை வெல்வதென்றும்
காலத்தைக் கடப்பதென்றும்
பயங்கரக் கதைகள் சொல்கிறீர்கள்
குட்டி இளவரசி சஹானா
“ நாளைக்கு மழை பெய்தது “
  என்கிறாள் அமைதியாக.

அமைதியாக என்ன பேச்சு பேசிவிட்டாள் !

      ஷங்கர்ராம சுப்பிரமணியனின் “ சிங்கத்துக்குப் பல் துலக்குபவன்”  பலர் வாய்ப் பட்ட“ கவிதை. சென்ற வாரம் கூட  தோல்வியுற்ற பாடகனொருவன்  மனம் கசந்து, முகம் மலர்ந்து இக்கவிதையைச் சொல்லக் கேட்டேன். நான் இக்கவிதையின் குழந்தை.     
         
          சிங்கத்துக்குப் பல் துலக்குபவன்

ஒரு வேலைக்கும் பொருத்தமற்றவர் என
உங்கள் மேல் புகார்கள் அதிகரிக்க/ அதிகரிக்க
உங்கள் அன்றாட நிலைமைகளைக் கருத்தில் கொண்டு
உங்களுக்கு ஒரு எளிய பணி வழங்கப்படுகிறது.
ஊரின் புறவழிச் சாலையில் உள்ள
மிருகக் காட்சி சாலையின் சிங்கத்துக்கு
பல்துலக்கும் வேலை அது
காவல் காப்பவனும் நீங்களும்
கூண்டில் அலையும் பட்சிகளும் மிருகங்களும்
உங்கள் மனஉலகில்
ஒரு கவித்துவத்தை எழுப்புகின்றன
அதிகாலையில் பிரத்யேக பேஸ்ட்டை பிரஷில் பிதுக்கி
உங்கள் பணியிடத்திற்கு ஆட்வத்தோடு கிளம்புகிறீர்கள்
அதிகாலை
மான்கள் உலவும் புல்வெளி
உங்கள் கவித்துவத்தை மீண்டும் சீண்டுகிறது
முதலில் கடமை
பின்பே மற்றதெல்லாம் எனச்சொல்லிக் கொள்கிறீர்கள்
கூண்டை மெதுவாய்த் திறந்து மூலையில்
விட்டேத்தியாய் படுத்திருக்கும் சிங்கத்திடம்
உங்களுக்கு பணி செய்வதற்கு நியமிக்கப்பட்டுள்ளேன்
நீங்கள் ஒத்துழைக்க வேண்டுமென்று
விவரத்தை கூறி பிரஷை காட்டுகிறீர்கள்
ஒரு கொட்டாவியை அலட்சியமாக விட்டு
வாயை இறுக்க மூடிக் கொள்கிறது சிங்கம்
ஸபரிசம் தேவைப்படலாம் என ஊகித்து
தாடையின் மேல்புறம் கையைக் கொண்டு போகிறீர்கள்
சிங்கம் உறுமத் தொடங்கியது
கையில் உள்ள பிரஷ் நடுங்க
உங்களுக்கு பிரஷ் செய்வது
என் அன்றாட வேலை
அது எனக்கு சம்பளம் தரக்கூடியது
எவ்வளவு நாற்றம் பாருங்கள்
உங்கள் பற்களின் துர்நாற்றம் அது
சிறிது நேரம் ஒத்துழையுங்கள்
மீண்டும் சிங்கம் உறுமுகின்றது
அது பசியின் உறுமலாகவும் இருக்கலாம்
நீங்கள் மூலையில் சென்று அமர்கிறீர்கள்
காலையின் நம்பிக்கையெல்லாம் வற்றிப் போக
பக்கத்து கூண்டுப் பறவைகளிடம்
வழக்கம் போல
பணி குறித்த முதல் புகாரைச் சொல்லத் தொடங்குகிறீர்கள்
எனது வேலையை ஏன் புரிந்து கொள்ள மறுக்கிறது சிங்கம்
பறவைகள் ஈ...ஈ...எனப்
புரிந்தும் புரியாமலும் இளித்தன.
கூண்டைச் சுற்றி மரங்கள்
படரத் தொடங்கும் வெயில்
வாயில் காப்போன் உங்களைப் பார்வையிட
தூரத்தில் வந்து கொண்டிருக்கிறான்.
   
    மின்னலைத் தொழுகின்றோம். அது நம்மறிவை ஒளியுறச் செய்க ! நமது விழிகளிலே மின்னல் பிறந்திடுக ! நமது நெஞ்சிலே மின்னல் விசிறிப் பாய்க ! நமது பாட்டு மின்னலுடைத்தாகுக !
                                     நன்றி : அந்திமழை - மே-2017