Skip to main content

Posts

Showing posts from February, 2012

ஏக்கத்தின் தேன்

நள்ளிரவில் விழித்துக்கொண்டு பாலுக்கழுகிறது என் குழந்தை. ஒரு வாய் சோறதற்குப் போதவில்லை அள்ளிஅள்ளிக் கொட்ட எனக்குத் துப்பில்லை. கிறீச்சிடா வண்ணம் கதவு திறப்பதில் அது சமத்தெனினும் கொஞ்சம் கிறீச்சிட்டுத் தான் விடுகிறது. அப்போது நான் கண்மூடிக் கிடப்பது போல் கிடப்பேன். தெரியும், அது மண் தின்னப்போகிறது. போகட்டும். கையிரண்டில் அள்ளி வாய் முழுக்கத் தின்னட்டும். சதா ஏக்கத்தின் தேனூறும் அதன் கட்டை விரல் சுண்டச் சூம்பி விட்டது சீக்கரத்தில் மறைந்து விடும். கண்நுதல் நெருப்பில் தப்பிப்பிழைத்த ஒரு துளியிலிருந்து பிறந்து வளரும் குழந்தையிது, சிவனேன்னு கிடப்பதில்லை ஒரு பொழுதும்

தம்பி

ஒவ்வொரு அதிகாலையிலும் அவசர அவசரமாக பல்துலக்கி முடிக்கையில் ஒரு நினைப்பு இன்று எவளோ ஒருத்தியின் இதழ்கடித்து தின்போமென. தம்பி இன்னும் கொஞ்சம் பேஸ்டை பிதுக்கி இன்னும் கொஞ்சம் துலக்குகிறான்.

நில்லுங்கள்

அந்தப் பக்கம் போகவேண்டாம் அங்கு தான் அம்பிகாபதி அமர்ந்து லாட்டரி சீட்டுகளை உரசிக் கொண்டிருக்கிறான். நூறு சீட்டிற்கு ஒரு சீட்டில் கடைசி எண்ணில் கோடிகள் தவறிவிடும் அவனுக்கு. அப்போது ஒரு சிரி சிரிப்பான். அந்த சிரிப்பில் சிக்கி செத்தவர் அனேகம். அந்தப் பக்கம் போகவேண்டாம்.