Monday, December 29, 2014

சுந்தரமூர்த்தியை மகிழ்ச்சி பிடித்துக்கொண்டது

இன்று அதிகாலையில் சுந்தரமூர்த்தியை
திடீரென மகிழ்ச்சி பிடித்துக் கொண்டது.
வீட்டிலிருந்து பணிமனைக்கு
காற்றுவெளியினில் பயணம் போகிறார்.
கியரையும் , ப்ரேக்கையும் கடவுள் கவனித்துக் கொண்டார்.
வானம்  “ மெல்ல தூறவா ? “ என்று கேட்டது.
அவர்இம்கொட்ட , அப்படியே ஆனது.
ராஜாஅவர் நாவில் வந்தமர்ந்தார்.
தோளினைச் சுற்றிக்கட்டிய அவ்வளைக்கரம்
ஒரு நட்சத்திரநடிகையுடையது.
சந்தோஷமென்றால் சந்தோஷம்
அவ்வளவு சந்தோஷம்
அலுவலகம்  தாண்டியும் போகிறார்.
வேறெங்கோ போகிறார்.
அவர் சந்தோஷமாக இருப்பது அவருக்கே தெரியவில்லை.
ஆகவே அவ்வாறிருந்தார்.
மற்றபடி, அதற்கொரு காரணம் கேட்டால்
அவரெங்கு போவார் எம்மானே ?

                                                        நன்றி : கொம்பு மூன்றாவது இதழ்

Sunday, December 28, 2014

பரோட்டா மாஸ்டரின் கானம்

          


கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்..
2014, டிசம்பர் 3, இரவு சுமார் எட்டு மணி இருக்கும்
" மூக்கின் மேலே
 மூக்குத்தி போலே
 மச்சம் உள்ளதே.... " அதுவா ?
 என்று நீங்கள் கேட்க,
கோயமுத்தூர் முனியாண்டி விலாஸில்
அடுப்பில் கிடந்து கருகும்
திருமங்கலத்து பரோட்டா மாஸ்டரொருவன்
அதுவா.. ?
அதுவா... ?
அதுவா... ?
என்று திருப்பிக் கேட்டான்
அப்போது உங்களுக்கு சிலிர்த்துக்கொண்டதா எஸ்பிபி   ஸார் ?


                                                                
                                                                              நன்றி : ஆனந்தவிகடன்

Thursday, December 4, 2014

இந்தியா டுடே - பேட்டி

       நான் கலையின் நல்லது கெட்டதுகளோடு வாழ விரும்புகிறேன்.

1. கவிஞர்களே கவிதைக்கு வாசகர்களாக இருப்பதுபோல் தெரிகிறதே? ஏன் கவிதைகள் இந்த வட்டத்தைத் தாண்டிச் செல்லவில்லை?

 வாசகர்கள்தான் எழுத்தாளர்களாக மாறுகிறார்கள். எல்லா எழுத்துக்கும் இது பொருந்தும்.கவிதை வாசகன் தானும் கவிஞன் ஆகிவிட அவசர அவசரமாக ஆசைகொள்வது அதன் எளிய உடலைப் பார்த்து.. அரிய உயிரைப் பார்த்து... இவ்வளவு எளிய உடலில் அவ்வளவு அரியஉயிர் வந்து அமர்ந்திருக்கும் கோலத்தைக் கண்டு...அந்த பரவசத்தை தாளமாட்டாமல்... ஆனால் அத்திருக்கோலம் கூட்டுவது அவ்வளவு சுலபமல்ல என்பதை அவன் எழுதவரும் போது கண்டுகொள்கிறான்.

2.ஒரு பாடகராகவும் இருப்பது உங்கள் கவிதைக்கு எந்த வகையில் வலு சேர்த்திருக்கிறது?

பாடகன் என்றெல்லாம் சொல்லிக்கொள்ள முடியுமா என்று தெரியவில்லை. இசையில் ஆர்வமுடைய அநேகருக்கும் தானும் ஒரு பாடகன்தான் என்கிற நினைப்புண்டு. அந்த நினைப்பு எனக்கு கொஞ்சம் அதிகம் அவ்வளவு தான். மற்றபடி என் தலையாடும் அளவிற்கு குரல் ஆடுவதில்லை என்பது எனக்கே தெரியும். ஆனால் இந்நெடிய வாழ்வை நொண்டிக்கடக்க என்னிடம் இருக்கும் ஒரே வழி என்னை நானே பாடகன் என்று நம்பிக்கொள்வதுதான்.இந்த இசைப்பித்து என்  கவிதைகளுக்கு உதவுகிறதா என்று கேட்டால் ஆம்என்று தான்  சொல்லவேண்டும். அது என் கவிதையின் இசையை ஒழுங்குபடுத்துகிறது.

3. உங்கள் படைப்பு வடிவம் கவிதைதான் என்று முடிவுக்கு வந்தது எப்போது? ஏன்?

 அலைந்து திரியும் மனம்கொண்ட என் மன இயல்புக்கு உகந்த வடிவமாக கவிதைதான் இருக்கிறது.என்னளவில் கவிதைக்கு பேப்பரோ பேனாவோ அவசியமில்லை. எழுத்தாளனாக இருப்பதென்பது பாமுக் சொல்வது போல குமாஸ்தாவாக இருப்பதும்தான்.சில எழுத்தாளர்களின்குறிப்பாக அயல்நாட்டு எழுத்தாளர்கள் -  நேர்காணல்களில்  ‘எப்போது எழுதுவீர்கள்’ ? என்கிற கேள்வி தவறாமல் கேட்கப்படுகிறது. “ அதிகாலை 5:42 க்கு துவங்கி மதியம் 1:03 வரை எழுதுவேன். திரும்பவும் மாலை 4.15 க்கு உட்கார்ந்தால் இரவு 8: 10 வரை எழுதுவேன். திரும்பவும்… “ என்று அவர்கள் பதில் அளிக்கிறார்கள். இந்த சோலி நமக்கு சரிப்பட்டு வராது. கவிதை இந்த அட்டவணைகளுக்குள் அடங்காது. ஏற்கனவே 8 மணி நேரம் அலுவலகத்தில் குமாஸ்தா வேலை தானே பார்க்குறேன் ?
4. எளியு சொற்களில் கவிதை நிகழ்த்தும் மாயத்தை நீங்கள் வந்தடைந்தது எப்படி?

குழப்பமூட்டும் சொற்களால் வசீகரிக்கப்பட்டவர்கள் குழப்பமூட்டும் வரிகளை எழுதுகிறார்கள். நான் எளிமையால் வசீகரிக்கப்பட்டவன். எனவே எளிமையாக எழுத முயல்கிறேன். “ தெளிவுறே அறிந்திடுதல் ; தெளிவுதர மொழிந்திடுதல் என்பது தானே நமது மகாகவியின் வாக்கும்.

5. சமகால கவிஞர்களில் உங்களுக்குப் பிடித்த கவிஞர்கள் என்று யாரைச் சொல்வீர்கள்? அதுபோலவே உங்களுக்கு ஆதரசமான முன்னோடி கவிஞர்கள்

 ஆத்மாநாம். சுகுமாரன், மனுஷ்யபுத்திரன், மு.சுயம்புலிங்கம்ஷங்கர்ராம சுப்ரமணியன் ஆகியோரை என் ஆதர்ச முன்னோடிகள் என்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். பாரதி எல்லோருக்குமானவன். சமகால கவிஞர்கள் என்பதை எப்படி அளப்பது என்பதில் எனக்கு குழப்பம் வருகிறது. என்னோடு சேர்ந்து எழுதவந்தவர்கள் என்று எடுத்துக்கொண்டால் முகுந்த்நாகராஜன், இளங்கோ கிருஷ்ணன், தூரன்குணா ஆகியோர் என்னை பொறாமை கொள்ளவைத்த சில கவிதைகளை எழுதியவர்கள் . பொதுவிலிருந்து விலகி வேறொன்றை எழுத முயன்ற இருவேறு வகைமாதிரிகளாக லிபியும், நரனும் என் கவனத்தை ஈர்த்தவர்கள். சமீபத்தில் போகன்சங்கர் கவிதைகள் பிடித்திருக்கிறது.

6 .கவிதையை வாசித்த கணத்தில் அதை எழுதியவருடன் பொருத்திப் பார்ப்பதுகுறித்து என்ன நினைக்கிறீர்கள்? மற்ற படைப்பு வடிவங்களுக்கு பெரும்பாலும் இது நிகழ்வதில்லையே ?

கவிதை ஏதோ ஒரு இடத்தில் சுயத்துடன் தொடர்புடையதுதான். சுயத்திலிருந்துதான் நல்ல கவிதைகள் பிறக்க முடியும் என்று நம் முன்னோடிகள் நம்பினார்கள். எனக்கும் அந்த நம்பிக்கை உண்டு. ஆனால் சுயம் ஒரு கவிதையில் எங்கு எப்படி கலந்திருக்கிறது என்று கண்டறிவது கடினம். ஒரு வகையில் புனைவெழுத்திலும் சுயம் இயங்கத்தான் செய்கிறது. ஆனால் அங்கு அது சாமர்த்தியமாக ஒளிந்து கொள்கிறது.

7. தமிழ் கவிஞர்களுக்கு பழந்தமிழ் இலக்கிய பரிச்சயம் அவசியமா?

அவசியம் தான். இன்று நீ இயங்கும் மொழியில் உனக்கு முன் என்ன நடந்திருக்கு என்று அறிந்து கொள்வது அவசியம்தானே ?. பழந்தமிழ் இலக்கியங்கள் என்னளவில் சுமையல்ல. அதில் தொழிற்படும் அரசியலை கூர்ந்து நோக்கி இன்றைய அறிவின் சுத்தியால் உடைக்கலாம். உடைக்கக் கூடாது என்றில்லை. ஆனால் அவற்றை ஒட்டுமொத்தமாக புறந்தள்ளுவது மொழிக்குள் இயங்க நினைப்பவனுக்கு நிச்சயம் இழப்பேயாகும். சங்க இலக்கியத்தின் நுட்பமும், பக்தி இலக்கியத்தின் கண்ணீரும் நாம் அவசியம் காணவேண்டியவை தான்.

8. கவிதை குறித்த காத்திரமான உரையாடல்கள் சமகால கவிஞரக்ள் மத்தியில் நடக்கிறதா?

 உரையாடல்கள் நடக்கத்தான் செய்கின்றன. நிறைய விமர்சன கூட்டங்கள் நடக்கின்றன. கவிதையோடு ஆர்வமுடன் கட்டிப்புரளும் சமகால கவிஞர்கள் பலரையும் எனக்குத் தெரியும். ஆனால் ஒட்டுமொத்த கவிஞர்களின் எண்ணிக்கையோடு ஒப்பிட்டால் இவர்களின் எண்ணிக்கை குறைவுதான்.

9. படைப்பாளிக்ளாக இருப்பவர்கள் அறத்துடன் இருக்கவேண்டிய அவசமியமில்லாத சூழல் இங்கு நிலவுகிறது. இதுகுறித்து உங்கள் கருத்தென்ன?

  சத்தியமூர்த்தி இசையாகும் போது எழுதுகிறார்அந்தத் தருணத்தில் உள்ளும் புறமும் ஒத்துத்தான் எழுதுகிறார். ஆனால்  நீங்கள் இசையை பார்த்தாயா.. பார்த்தாயா ” ? என்று கேட்டு சத்தியமூர்த்தியை பிரம்பால் விளாசக்கூடாது ? பாவம் சத்திவைத்துக்கொண்டா வஞ்சகம் செய்கிறான் ? இங்குதான் எங்கோ கடைத்தெருவுக்கு போய்விட்டு வந்துவிடுகிறேன் என்று சொல்லிவிட்டு போயிருக்கிறார். எப்படியும் வந்துவிடுவார். சற்று பொறுமையாக இருங்கள்.

10 . ஒரு படைப்பாளியின் அகவாழ்விலும் புறவாழ்விலும் எந்தளவுக்கு சுதந்திரம் இருக்கிறது?
 
   புறவாழ்வு குறித்து சொல்ல வேண்டியதில்லை. அகவாழ்விலும் புறத்தின் எச்சில் வந்து விழுந்துவிடுகிறது. அந்த நாற்றத்தையும்  சேர்த்துக்கொண்டு தான்  அகவாழ்வு என்று நாம் நம்பும் ஒன்றை விடாப்பிடியாக வாழவேண்டியிருக்கிறது.


            11. கவிஞர் இசையின் ஒரு நாள் எப்படி இருக்கும்?

ஒரு கவிஞனின் ஒரு நாள் எப்படி இருக்கும் என்று கேட்க நினைத்த உங்கள் நல்லெண்ணத்திற்கு நன்றி தோழர். ஆனால் நீங்கள் இதைவிட ஈஸியான கேள்வி எதையாவது கேட்டிருக்கலாம்.


12. நீங்கள் உட்பட இன்று இயங்கிக்கொண்டிருக்கும் படைப்பாளிகள் பலரும் இடதுசாரி இயக்கங்களில் இருந்தவர்களாக இருக்கிறீர்களே?

  ஆமாம்... எனினும் நான் இடதுசாரி இயக்கங்களில் பெரிதாக களமாடியதில்லை. ஆனால் எங்கிருந்து வருகிறீர்கள் என்கிற கேள்விக்கு அப்படித்தான் பதிலளிக்க வேண்டி இருக்கிறது. “ உன் வீட்டைத் தாண்டி ஒரு உலகம்  இருக்கு தம்பி என்று அவர்கள்தான் எனக்கு முதன்முதலாக உணர்த்தியவர்கள்நான் அங்கிருந்து தான் வந்தேன் என்று சொல்லிக்கொள்வதில் எனக்கு சந்தோசமும் பெருமிதமும் உண்டு. நல்ல மனிதர்களான அவர்கள் எனக்கு கெட்ட கவிதைகளை அறிமுகம் செய்து வைத்தார்கள். ஒரு தனிமனிதனாக  அவர்களை விமர்சிக்க எனக்கு யோக்கியதை வந்துவிட்டதாக நான் இந்த ஆயுள்வரை நம்ப மாட்டேன்.  அவர்களுக்கென்று ஒரு நல்லதுகெட்டது உண்டு. ஆனால் நான் கலையின் நல்லது கெட்டதுகளோடு வாழ விரும்புகிறேன்.

    ( இந்தியா டுடே வில் வெளியாகியுள்ள பேட்டியின் முழு வடிவம்-
   தலைப்பு இந்த இடுகையில் மாற்றப்பட்டுள்ளது)
          நன்றி : இந்தியா டுடே  உரையாடல் : கவின்மலர்