Skip to main content

Posts

Showing posts from 2014

சுந்தரமூர்த்தியை மகிழ்ச்சி பிடித்துக்கொண்டது

இன்று அதிகாலையில் சுந்தரமூர்த்தியை திடீரென மகிழ்ச்சி பிடித்துக் கொண்டது . வீட்டிலிருந்து பணிமனைக்கு காற்றுவெளியினில் பயணம் போகிறார் . கியரையும் , ப்ரேக்கையும் கடவுள் கவனித்துக் கொண்டார் . வானம்  “ மெல்ல தூறவா ? “ என்று கேட்டது . அவர் “ இம் ” கொட்ட , அப்படியே ஆனது . “ ராஜா “ அவர் நாவில் வந்தமர்ந்தார் . தோளினை ச் சுற்றிக்கட்டிய அவ்வளைக்கரம் ஒரு நட்சத்திர நடிகையுடையது . சந்தோஷமென்றால் சந்தோஷம் அவ்வளவு சந்தோஷம் … அலுவலகம்   தாண்டியும் போகிறார் . வே றெ ங்கோ போகிறார் . அவர் சந்தோஷமாக இருப்பது அவருக்கே தெரியவில்லை . ஆகவே அவ்வாறிருந்தார் . மற்றபடி , அதற்கொரு காரணம் கேட்டால் அவரெங்கு போவார் எம்மானே ?                                                         நன்றி : கொம்பு மூன்றாவது இதழ்

பரோட்டா மாஸ்டரின் கானம்

           கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.. 2014, டிசம்பர் 3, இரவு சுமார் எட்டு மணி இருக்கும் " மூக்கின் மேலே  மூக்குத்தி போலே  மச்சம் உள்ளதே.... " அதுவா ?  என்று நீங்கள் கேட்க, கோயமுத்தூர் முனியாண்டி விலாஸில் அடுப்பில் கிடந்து கருகும் திருமங்கலத்து பரோட்டா மாஸ்டரொருவன் அதுவா.. ? அதுவா... ? அதுவா... ? என்று திருப்பிக் கேட்டான் அப்போது உங்களுக்கு சிலிர்த்துக்கொண்டதா எஸ்பிபி     ஸார் ?                                                                                                                                                நன்றி : ஆனந்தவிகடன்

இந்தியா டுடே - பேட்டி

        நான் கலையின் நல்லது கெட்டதுகளோடு வாழ விரும்புகிறேன் . 1. கவிஞர்களே கவிதைக்கு வாசகர்களாக இருப்பதுபோல் தெரிகிறதே ? ஏன் கவிதைகள் இந்த வட்டத்தைத் தாண்டிச் செல்லவில்லை ?   வாசகர்கள்தான் எழுத்தாளர்களாக மாறுகிறார்கள் . எல்லா எழுத்துக்கும் இது பொருந்தும் . கவிதை வாசகன் தானும் கவிஞன் ஆகிவிட அவசர அவசரமாக ஆசைகொள்வது அதன் எளிய உடலைப் பார்த்து.. அரிய உயிரைப் பார்த்து . .. இவ்வளவு எளிய உடலில் அவ்வளவு அரியஉயிர் வந்து அமர்ந்திருக்கும் கோலத்தைக் கண்டு...அந்த பரவசத்தை தாளமாட்டாமல் . .. ஆனால் அத்திருக்கோலம் கூட்டுவது அவ்வளவு சுலபமல்ல என்பதை அவன் எழுதவரும் போது கண்டுகொள்கிறான் . 2. ஒரு பாடகராகவும் இருப்பது உங்கள் கவிதைக்கு எந்த வகையில் வலு சேர்த்திருக்கிறது ? பாடகன் என்றெல்லாம் சொல்லிக்கொள்ள முடியுமா என்று தெரியவில்லை . இசையில் ஆர்வமுடைய அநேகருக்கும் தானும் ஒரு பாடகன்தான் என்கிற நினைப்புண்டு . அந்த நினைப்பு எனக்கு கொஞ்சம் அதிகம் அவ்வளவு தான் . மற்றபடி என் தலையாடும் அளவிற்கு குரல் ஆடுவதில்லை