Skip to main content

Posts

Showing posts from January, 2020

சின்ன மாவுத்தண்டு

" நேற்று பெய்த மழையில்  இன்று முளைத்த காளான்" என்று      யாரோ யாரையோ திட்டிக் கொண்டிருந்தார்கள். முளைத்தது முளைத்ததுதானே? சின்ன மாவுத்தண்டுதான் என்றாலும் அதற்கும் கொஞ்சம் மண் வேண்டுமல்லவா? அதற்கும் கொஞ்சம் ஒளி வேண்டுமல்லவா? அதற்கும் கொஞ்சம் காற்று வேண்டுமல்லவா? மாட்டுக் குளம்பில் படும்வரை அதுவும் கொஞ்சம் வாழ வேண்டுமல்லவா?

தூது

இரண்டு நிமிடங்களுக்குப் பொறுத்துக் கொள்ள முடியும் உன் பிரிவை. ஒற்றைக் காலைப் பற்றி சரளைக் கற்களின் மேல் தரதரவென இழுத்துச் செல்கிறது உன் நினைவு. தூதுக்கு ஆள் வேண்டும். அன்னமும் மேகமும் என் அன்பறியாது. வாட்ஸ அப்பும், மேசஞ்சரும் முட்டாள் கழுதைகள். அவை வெறுமனே செய்திகளைச் சுமந்து செல்கின்றன. எனக்கு என்னையே கொண்டு செல்லும் ஒன்று வேண்டும். முழந்தாளிடுகிறேன் இன்னும் கொஞ்சம் காதல் செய் இன்னும் கொஞ்சம் கருணை கொள் இன்னும் கொஞ்சம் இரங்கு. உன்னிடம் நீயே தூதாகிச் செல்.

விடலைப் பையனின் ஞானப் பாடல்

எல்லாவற்றின் மீதும் தூசியெனப் படிந்து கிடக்கிறது ஒரு சலிப்பு. நாம் நாயைப் பழக்குவது போல் நம்மை ஏதோ ஒன்று பழக்கிக் கொண்டிருக்கிறது. இப்போது முத்தமிடுவது ஒரு பழக்கம். கழுத்தறுப்பது ஒரு பழக்கம். சிக்கன் பெப்ப்ர் ப்ரையில் சிக்கன் பெப்பர் ப்ரையும், கத்தரிக்காய்த் தொக்கில் கத்தரிக்காய்த் தொக்கும் இருக்கின்றன. கிரிக்கெட் சிக்ஸரோடு தீர்ந்து விடுகிறது. காட்டுவாசிக்கு காடு உறைந்து விடுகிறது. வானவில்லால் ஏழு வண்ணங்களைத் தாண்டக்  கூடவில்லை. வேறு வழியே  இல்லை நெஞ்சில் கிறுக்கு ஒரு கிறுக்குக் காதலை. 

கலாரூபிணி

என் அவமானங்களைக் கழுவ நூறு சமுத்திரங்கள் வேண்டும் என் புண்களை ஆற்ற நூறு மருத்துவர்கள் வேண்டும் என்னைக் கொஞ்சம் நறுமணமூட்ட  நூறு தைலப்புட்டிகள் வேண்டும் என் கண்ணீரை நிறுத்த நூறு அற்புதங்கள் வேண்டும். என் துயரங்களைக் கடைய நூறு மலையும், நூறு பாம்பும் வேண்டும். என் மண்டைப் பேய்களின் கொட்டத்தை அடக்க நூறு மாந்தீரிகர்கள் வேண்டும். என் இமைகளைத் தூக்கி கண்களில் வைக்க நூறு நூறு தெய்வங்கள் வேண்டும் இவை எதுவும் இல்லையெனில் ஒரு பொட்டு நீ வேண்டும்.

மகாவிருந்து

என் தட்டில் கிடக்கிறது ஒரேயொரு பருக்கை நீ இட்டது புத்திப்பிசகின் அழகில் கண்டால் அது ஒரு காஷ்மீரத்து ஆப்பிள் சாக்கடையோரத்தில் அமர்ந்து கொரித்துக் கொரித்து தின்று கொண்டிருக்கிறேன்.

அப்பால்

அடுப்படியில் உருட்டப்படும் காலம் தவிர்த்து ஏனைய பொழுதுகள் எப்போதும் ஜன்னலோரத்தில் அமர்ந்திருப்பாள். அந்த ஜன்னலுக்கு வெளியே தூரத்து மலையோ, சுழித்தோடும் நதியோ எதுவும் இல்லை. தேன்சிட்டோ, வண்ணத்துப்பூச்சியோ அவசியமில்லை அவளுக்கு. பேருந்தின் ஜன்னலுக்கு முண்டியடிப்பாள் இன்னமும். விருந்தினர் வீடுகளில் தயங்கியபடி கேட்பாள்.. " இந்த ஜன்னலைக் கொஞ்சம் திறந்து வைத்துக் கொள்ளலாமா?" கண்டு கொண்டே இருக்கிறாள் ஜன்னல்களுக்கு அப்பால். அப்படி எங்குதான் போக நினைத்தாய் அன்பே ? எங்குமே போகவில்லையே ஏன்?

ஆட வா !

மரத்தடிகள் பல இருந்தும் நான் பொறுக்கியெடுத்த ஞானத்திலிருந்து ஒரு வரிக்கு வந்து சேர்ந்துவிட்டேன் நண்பா.. " இந்த வாழ்வு ஒரு கிரிக்கெட் ஆட்டம்" நான் அடிக்க மாட்டேன் ஒரு சிக்ஸரோ,  ஃபோரோ. நீ கேட்ச் பிடிக்காதே !

நான் ஒரு பாஸ்வேர்டு

ஒரு பாஸ்வேர்டை கண்டுபிடித்து விட்டால் என்னைக் கண்டுபிடித்து விடலாம் 5 வருடங்களுக்குள் என்னிடம்  13 பாஸ்வேர்டுகள் சேர்ந்து விட்டன. நான்தான் உருவாக்குகிறேன் . ஆனால் அவைதான்  என்னை மேய்க்கின்றன. 13 பாஸ்வேர்டுகளையும் மூளைக்குள் ஒளித்து வைத்தேன் வழுக்கி வழுக்கி விழுந்தன. பதிமூன்றையும் ஓரிடத்தில் ஒளித்து வைத்து அதை ஒரு பாஸ்வேர்டால் ஒளித்தேன் ஒன்றைத் திருடி விட்டால் 13 யும் திறந்து விடலாம். 13 பாஸ்வேர்டையும் பறிகொடுத்து விடுவதென்பது ஒரு ஜட்டி கூட இல்லாமல் நிற்பது. எனவே பதிமூன்றையும் பதிமூன்று இடங்களில் ஒளித்தேன். அந்தப் பதிமூன்று இடங்களையும் ஓரிடத்தில்  ஒளித்து வைத்தேன். எவனோ ஒரு கில்லாடி அதையும் துப்பறிந்து தூக்கி விட்டால்? நான் எவ்வளவு பெரிய கில்லாடி ? 13 இடங்களின் முதல் எழுத்தை மூளைக்குள்தான்  ஒளித்து வைத்திருக்கிறேன் அவை குழம்பி விடக்கூடாதென்று ஒரு காகிதத்தில் ஒளித்திருக்கிறேன். அந்தக் காகிதத்தை ஒரு தனியிடத்தில் ஒளித்திருக்கிறேன். இப்போது நான் முழுவதுமாக மூடப்பட்டவன். என்னை ஆட்டவோ அசைக்கவோ இயலாது.             காலச்சுவடு : ஜனவரி -2020

சொல்லச் சொல்ல

நீ அந்த வரியைச் சொல்லச் சொல்ல என் தலையில் சடை திரண்டுவிட்டது. ஆடை நூறு வருடத்திய அழுக்காகிவிட்டது. கைக்கு வந்துவிட்டது ஒரு ஒடுங்கிய அலுமினியத் தட்டு.

சுந்தரம்

அன்று நீ கொஞ்சம் நேராக நின்றிருக்கலாம். அதுதான் எல்லாவற்றிற்கும் காரணம். சற்றே சரிந்து கைகளை மார்பில் கூட்டி சுவரோடு தோளணைந்து நின்ற உன் கோணித்த சுந்தரம் என் சத்தியத்தை கிடுகிடுவென ஆட்டிவிட்டது.

தனி

உன் கற்பனைக்கு அத்தனை சிறகுகள் எங்கிருந்தென்று தெரியாமல் சீறி வருகிறதோர் அம்பு நீ துடிதுடித்து தாழ்வெண்ணத்தில் விழுகிறாய் பறத்தலின் குதூகலத்திலிருந்து இருத்தலின் நிம்மதிக்குத் திரும்புகிறாய் தாழ்வெண்ணத்தில் விழுவது என்பது கிராமத்திற்குத் திரும்புவது.. அதனுள்ளே ஒரு ஒற்றையடிப்பாதைக்கு.. அதுவழியே ஒரு காட்டுக் கோயிலுக்கு.. அதன் மட்ட மதியத்திற்கு.. அந்த வேலி ஓணானுக்கு பரவசமும் பதட்டமும் அருகருகே இருப்பது இரண்டிற்கும் அப்பால் வெகு தொலைவில் இருக்கிறது ஒரு சின்னஞ்சிறு குடிசை. அதில் சமையல் ஆகிறது மண் சட்டியில். உலை கொதிக்கும் வரைக்கும் பக்கத்து வேம்பின் நிழலில் மல்லாந்து படுத்திருக்கிறது உன் தாழ்வெண்ணம். அதன் ஏகாந்தம் தனி.

அன்னை அளாவிய கூழ்

              காயத்ரி சித்தார்த்தின் " மகள் கீர்த்தி" நூலிற்கான முன்னுரை... ஆட்டம் போடும் வீடு பூட்டிக் கொண்டு கிளம்பினேன் எதையோ மறந்து போனதால் உடனே திரும்பினேன்; திறந்தேன் டிவியும்  ஃப்ரிட்ஜும் ஓடிப் பிடித்து விளையாடிக் கொண்டு இருந்தன அலமாரியில் உள்ள புத்தகங்களெல்லாம் அணி அணியாகப் பிரிந்து கபடி ஆடிக் கொண்டிருந்தன. சோபா-வுக்கும்  சேரு-க்கும் ஓட்டப் பந்தயம். பழைய சாக்ஸ்கூட  தன்னிச்சையா சுற்றிக் கொண்டிந்தது ஒரு நிமிஷத்துக்குள் எல்லாம் இயல்பு நிலையை அடைந்து விட்டன ‘என்ன இவ்வளவு சீக்கிரம் வந்து விட்டான்’ என்று தண்ணீர் பாட்டில் முணுமுணுத்தது. அப்புறம் அமைதியாகிவிட்டது பிறகு ஒன்றும் நிகழவில்லை. பூட்டிக்கொண்டு கிளம்பினேன். திறப்பதற்கு முன் தட்டி இருக்கவேண்டும் என்ன நாகரிகம் இல்லாத பிறவி நான் ! - முகுந்த் நாகராஜன் ஒரு தாய் தன் மகளின் கீர்த்திகளைப் பாடியிருக்கும் நூல் இது. அவர் தமிழறிந்தவர்  என்பதால் இயல்பாகவே ஒரு இலக்கியப்பிரதியின் இன்பத்தில் சமைந்திருக்கிறது.  “தீபத்தைக் கொண்டு சுடரேற்றிய தீபம் போலிருக்கிறாள் கீர்த்தினி” என்கிற முதல் வரியை கொஞ்சி