Thursday, May 9, 2013

அநாதைக்கவிதைகள்

  1  தூங்கிக்கொண்டிருக்கும் சொற்களை
     நடுச்சாமத்தில்
    தலையால் முட்டிமுட்டி எழுப்புபவர்கள் ஆனந்தன்கள்

 2.   இன்று வந்திருப்பது அநாதைநிலா
     இது அநாதையொளியை
     நிலமெங்கும் தளும்பவிடுகிறது.

3.  விரிசடை நுனியில்
     அசைந்தாடும் நீர்ச்சொட்டு
    உன்னை
    மேலும் அநாதையாக்குகிறதா ஆனந்தா

 4.  கிணற்றுக்கு பயந்து
     முட்டைபரோட்டாவிற்குள் குதிப்பது
    ஆனந்தனின் வழக்கம்


  5   போவதற்கு வேறுஇடங்கள் இருப்பவர்கள்
     எவ்வளவு எளிதாக
     “ குட்பை “ சொல்கிறார்கள்
     பார்த்தாயா ஆனந்தா


6 “ எங்க போறதுன்னு தெரியலயே”
   என்கிற சினிமா வசனத்திற்கு
   கைகொட்டிச் சிரித்தவன் தானே நீ
   இன்று
   அதையே சொல்லி அழு.

                     நன்றி : காலச்சுவடு மே -2013

ஒரு ப்ரவுன்கலர் ஜட்டியைப் பார்த்தீர்களா ?
“மேகம்” கட்டிலுக்கடியில் தவழ்ந்து போகையில்
அவரது தொந்தி நிலத்தில்தேய்ந்து மோசமாக மூச்சுமுட்டியது
ஏழாவதுமுறையாக
குளியலைறைக்குச் சென்று சல்லடை போட்டார்
தன் சகஎழுத்தாளர் தேநீர் குடிக்க அழைக்கையில்
” பழக்கம் இல்லை” என்று சொல்லி அனுப்பிவிட்டு
அவரது பையையும் பரிசோதித்துவிட்டார்.
ஜன்னல் கம்பியில் காயப்போட்டதாகத்தான் நினைவு.
காற்று இந்த மூன்றாவது மாடியிலிருந்து
அதை கீழே தள்ளி விட்டிருக்கலாம்.
கண்களைப்பிடுங்கி கீழே வீசி பொறுமையாகத் துழாவினார்.
பிறகு கண்களை நம்பாமல் அவரே இறங்கிப் போனார்.
அவர் ஒன்றும் தரித்திர கலைஞர் அல்ல
அவரிடம் இப்போது கூட சுளையாக 500 ரூபாய் இருக்கிறது.
ஆயிரம் ஜட்டிகள் வாங்கினாலும்
இடதுபுற எலாஸ்டிக் பட்டையில்
அது போலவே நூல்பிரித்து விட உறுதியாக அவருக்கு தெரியாது.
நாம் அசட்டை செய்வது போலவோ
கிண்டலடிப்பது போலவோ
அது ஒன்றும் சாதாரண ஜட்டி இல்லை.
அவரது இல்லத்து அரசி
அந்த ப்ரவுன் கலர் ஜட்டிக்கு
பொறுப்புணர்வு என்று பெயர் சூட்டி அனுப்பியிருக்கிறார்.

                               நன்றி : காலச்சுவடு மே இதழ்

Tuesday, May 7, 2013

நைஸ்


எதேச்சையாக பட்டுவிட்டது
உன் கைகள் எவ்வளவு நைஸாக இருக்கின்றன


இந்த நைஸிற்குத்தான் மணிமுடிகள் சரிந்தனவா
முனிகள் பிறழ்ந்தனரா


இதற்காகத்தான் இப்படி
தேம்பி தேம்பி அழுகிறார்களா
இதற்காகத்தான் இவ்வளவு ஓயாத மன்றாட்டமா


இந்த நைஸிற்காகத்தான் அம்மையப்பனை எதிர்க்கிறார்களா
செங்குருதியில் மடலிடுகிறார்களா
இதுமட்டும் போதுமென்றுதான்
கண்காணாத இடத்துக்குப் போய்விடுகிறார்களா

இந்த நைஸிற்காகத்தான்
ஆழக்குழி தோண்டி அதில் பண்பாட்டை போட்டு மூடுகிறார்களா
இதற்காகத்தான் ஓட்டைப் பிரித்து பிறன்மனைக்குள் குதிக்கிறார்களா

இதற்கு ஏங்கித்தான் பசலை ஏறுகிறதா
கைவளை நெகிழ்கிறதா
இந்த நைஸிற்காகத்தான் "வைகறை வாளாகிறதா"


இதற்காகத்தான் எஜமானிகள் பரிசாரகர்களை அன்பு செய்கிறார்களா
முதலாளிகள் சமத்துவம் பேணுகிறார்களா
இந்த நைஸிற்காகத்தான் தென்னந்தோப்பை எழுதி வைக்கிறார்களா


இதற்காகத்தான்
தூங்கும்போது தலையில் கல்லைத் தூக்கிப் போடுகிறார்களா
இதற்காகத்தான் மனைவிக்கு விஷம் வைக்கிறார்களா

அந்த நைஸ் இனியில்லையென்றானதற்காக
தண்டவாளங்களை நோக்கி ஓடுபவர்களுக்கு
பாவம்,அதே நைஸ்தான் வேண்டுமோ.

                                         நன்றி : காலச்சுவடு மே இதழ்