Skip to main content

Posts

Showing posts from December, 2011

அந்த மயில் போட்டோவில் விழாது

மாயனின் மலைப்பயணத்தின் போது மயிலொன்று ஓடோடி வந்து தொழுது நின்றது. “ அபயம்.. போட்டோவில் விழுந்து விழுந்து முறிகிறேன்” மாயன் அதன் துயரோட்டி அருளினான். மானை வேட்டை நாய்களின் கண்களிலிருந்து விடுவித்தான் பறவைக்கும் விலங்குக்கும் பூச்சிக்கும் புழுவுக்கும் கேட்டதைத் தந்தான் வீடுதிரும்பிய மறுநாள் அலறியபடி வந்து கதவுதட்டியது மலையருவி துரத்தி வந்த தண்ணீர் போத்தல்காரன்களின் கண்களை குருடாக்கி மீண்டும் அதை வனமனுப்பி வைத்தான் கடைசியில் அரசாங்கம் வந்து காலில் விழுந்தது. “ எங்கள் ராடார்களின் கண்களிலிருந்து எதுவும் தப்பிவிடலாகாது” இப்போது விட்டத்தில் ஒரு பல்லியாகி வாலாட்டும் மாயன் வல்லரசின் கண்களில் விழமாட்டான். ( கோணங்கிக்கு)

அந்தக் காலம் மலையேறிப் போனது

என் வீட்டுக்குப் பின்னே ஒரு மலை இருக்கிறது. ஆறு வயதில் விரல் சூப்பூம் பழக்கத்தை இந்த மலை மீது தான் ஏற்றி விட்டேன் . அன்னைக்கு செய்து கொடுத்த மூன்று சத்தியங்களையும் ஒரு நள்ளிரவில் இந்த மலைக்கு அனுப்பினேன் கிரிக்கெட் மட்டை, கை மைக், கீ- போர்டு எல்லாவற்றையும் இந்த மலைதான் வாங்கிக் கொண்டது ஒரு காதல் மட்டும் இந்த மலை மீது ஏறி இறங்கி விளையாடிக் கொண்டிருந்தது வெகுகாலமாக. நேற்றது உச்சிக்கு சென்று மறைந்ததை பார்த்தேன் .