Skip to main content

Posts

Showing posts from March, 2012

திசேராவின் “ வெள்ளைத்தோல் வீரர்கள் “- ஒரு வாசிப்பனுபவம்

இந்த கட்டுரை சார்ந்து உங்களின் பொருட்படுத்தலுக்காக முதலிலேயே சில விஷயங்களை சொல்லி விடுவது உத்தமம். நான் கவிதைகள் எழுதி வருகிறேன். ஆனால் கவிதைகளைப் பற்றிய கட்டுரைகள் பத்தைத் தாண்டாது. நான் சிறுகதைகள் எழுதுவதில்லை. உலகின் தலைசிறந்த பத்துகதைகளுள் ஒன்று என்கிற நினைப்பில் என்னால் எழுதப்பட்ட இரண்டு சிறுகதைகள் பிரசுர வாய்ப்பை பெறவில்லை.தவிர கொலைக்களத்திலிருந்து எழுதப்பட்டிருக்கும் இக்கதைகளை தின்று கொழுத்து, ஊதிப்பெருத்திருக்கும் சுகவாசியான நான் விமர்ச்சிக்கப் போகிறேன்.மேலும் இது என் முதல் சிறுகதை விமர்சனம். இக்கதைகள் தொகுப்பாக்கப் பட்ட ஆண்டு 2004. இதில் இருக்கும் சில கதைகள் 2000 ல் எழுதப்பட்ட்வை. ஆக சுமார் 10 வருட இடைவெளியில் நமது மண்டையை கொஞ்சம் பெரிதாக்கிக் கொண்டு 2012 இக்கதைகளை விமர்சிக்கப் போகிறோம். திசேராவின் கதை சொல்லல் முறை ரொம்பவும் நிதானமானது.உணர்வெழுச்சியால் பீடிக்கப்பட்டு பீறிட்டெழும் மொழிதல் அனேகமாக எந்தக் கதைகளிலும் இல்லை. ”குண்டுகள் எங்காகிலும் வெடித்துக் கொண்டே இருக்கின்றது” என்று துவங்கும் கதையிலும் கூட. இந்த நிதானமான மொழிதலோடு ஒரு மென் அங்கதம் தொகுப்பின் எல்லா கதைக

இன்றைய மாலை நடை எடையற்றிருக்கிறது

எனக்கு கடை வாயில் மூன்று பற்கள் சொத்தை இரண்டால் இப்போதைக்கொன்றும் பாதகமில்லை கடந்த சில நாட்களாக அந்த கடைசி பல்லின் ஊழிக் கூத்து... அதிலிருந்து சல்லொழுகும் வேட்டைநாயொன்று வெளியே குதித்தது. அதன் குதிரை உயரத்திற்கு கீழே கிடந்தேன் என் இத்துனூன்டு நெஞ்சில் க‌னத்த குளம்படிகள் விடிய விடிய ஓடின‌ அப்பாவி நண்பர்கள் வேட்டை நாயிற்கு கிராம்பு தைலம் பூசச் சொன்னார்கள் வலி தாளாத நான் வாயிற்குள் ஒரு ஊசியைப் போட்டு நேற்றதைப் பிடுங்கி எறிந்தேன். இப்போது அங்கொரு சின்ன ஓட்டை. காற்றை அள்ளி வாய் முழுக்க கொப்பளித்தேன் இன்றைய மாலை நடை எடையற்றிருக்கிறது. என் ஊரை விட்டு வெகு தூரம் வந்துவிட்டேன் பாழாய்ப் போன என்னை விட்டு வெகுதூரம் கடந்து விட்டேன் நான் சொல்கிறேன்.. இன்று நிறைந்த பெளர்ணமி. வான் சொல்லும் சிறுபிறையை ஒரு வளைவளைத்து முழுமதியாக்கி நடக்கிறேன்

நெடுவெங்கோடை

சாலையின் தார் உருகி வழிந்து வாகனங்கள் வழுக்கி விழுந்தன‌‌ தர்ப்பூசணிப் பழத்தில் தீ பிடித்துக் கொண்டது என் உடலில் இருந்து கல் உப்புகளை வழித்தெடுத்தேன் பதினோரு ஆண்டுகள் கழித்து மின்சாரம் வந்திருக்கிறது நண்பா அந்த ஃபேனை 20 ல் வை !

ஆதவன் தீட்சண்யா கவிதை

இன்னும் இருக்கும் சுவர்களின் பொருட்டு.. சுவற்றின் இந்தப்பக்கம் இருக்கும் என்பெயர் மனிதன் அந்தப்பக்கம் யாரும் இருக்கிறீர்களா? விடையிறுக்கப்படாத இந்தக் கேள்வியை எழுப்பியபடி நானெருவன் எத்தனைக்காலம்தான் காத்திருப்பது? உங்களில் ஒருவருக்கேனும் எனது குரல் காதில் விழுகிறதா? என்னோடு உரையாடுவதை தவிர்த்துக்கொள்ளும் பொருட்டு உங்களது குரல்வளையை நீங்கள் இன்னும் அறுத்துக்கொள்ளாதிருக்கும் பட்சத்தில் மறுமொழி சொல்லுங்கள் யாரேனும் குலுக்குவதற்கு நீட்டப்பட்டிருக்கும் எனது கரங்கள் மரத்துப்போய் தானே தொய்ந்துவிழ வேண்டுமென்று காலந்தாழ்த்தும் தந்திரத்தை கைக்கொண்டிருக்கிறீர்களா அல்லது, இதோ நானிருக்கிருக்கிறேன் என்று பதில் கூற யாருமேயில்லாத பாழ்வெளியாய் கிடக்கிறதா அந்தப்பக்கம் சுவர் உங்களைக் காப்பதாய் சொல்லிக்கொண்டு சுவற்றை நீங்கள் காக்கும் இழிகாலத்தில் எந்தப்பக்கம் இருபவர் யார் என்ற வழக்கில் இப்போது எழுதப்பட வேண்டியது தீர்ப்பு மட்டுமேயாதலால் சுவற்றின் இந்தப் பக்கம் இருக்கும் என்பெயர் மனிதன் அந்தப்பக்கம் யாரும் இருக்கிறீர்களா? உஸ்பார் கொய் ஹை க்யா? ஆக்கடே யாரு இதாரே? திக்கடே பாஜீ கோன் ஆஹே..? அக்கட எவுரு உண்ணாரு

கருணையின் ராஜா

பல நாள் திருடன் நான் இறந்துக் கிடக்கிறேன் என்னை ஒரு நாளும் அகப்படாமல் இறக்கச் செய்தீர் ஸ்தோத்ரம் ஆண்டவரே சில ஈக்களை அனுப்பி என் முகத்தின் திருட்டு களையை பறந்து போகப்பண்ணினீரே ஸ்தோத்ரம் ஆண்டவரே யோக்கியத்தின் கல்லிலிருந்து என்னை தப்புவித்தீர் கருணையின் ராஜா ! உமக்கு நன்றி ஐயா