Skip to main content

Posts

Showing posts from January, 2022

பொற்கதவம்

  உ டை மாற்றிக் கொண்டிருந்தாள். விரலிடையளவு விலகிய வெளிச்சத்தின் வழியே என்னைக் கண்டுவிட்டவள் ஓடோடி வருகிறாள் இலையாடைக் காலத்தே சாத்தப்பட்ட அக்கதவை அடித்துச் சாத்துகிறாள் இன்னொரு முறையும்.

சுழற்பந்து

  5 0 ல் நிற்கும் ஒரு மனிதனுக்கு அதிகாலையில் அவசரமாக  ஒரு எலுமிச்சை தேவைப்பட்டுவிட்டது பக்கத்துக் கடையில் இருப்பு இல்லாததால் அவர் கொஞ்ச தூரம் நடக்க வேண்டி இருந்தது. மனிதன் ஒரு போதும் தனியே நடப்பதில்லை. வாங்கிய எலுமிச்சையை ஏனோ திடீரென  சுற்றத் துவங்கிவிட்டார் எங்கிருந்தோ எழுந்து வந்தான் ஒரு சுழற்பந்து வீச்சாளன் அடுத்த கணம் அவர் அந்தரத்தில் சுழற்றி விட்ட பந்து பெரிய மைதானத்தில் நடு ஸ்டம்பை கழற்றிக் கொண்டோடியது. கரகோஷங்களுக்கும் வெறிக் கூச்சல்களுக்குமிடையே களிமுற்றி ஆடுகிறார்.  ஆட்டம் முடிவதற்குள்  வாசல் வந்துவிட்டது. பந்து ஒன்றுமே தெரியாதது போல் எலுமிச்சைக்குத் திரும்பி விட்டது. சின்ன எலுமிச்சைக்குள் இவ்வளவா சுற்றிக் கொண்டிருக்கும்? அறிந்திருந்தால் அவர் காலை உணவைத் தவிர்த்திருப்பார்.

தெரியாதவை

ம லைச்சரிவில் தத்தித்தத்தி நடந்துவருகிறது ஒரு ஆட்டுக்குட்டி அதன் தலைக்கு உச்சியில் கூவிக் கடக்கிறது ஒரு நீலப்பறவை இரண்டையும் ஒருகணம் சேர்த்துக் கட்ட ஆங்கொரு திவ்யம் எழுந்து நிறைகிறது குட்டி தனியே நடக்கிறது நீலம் தனியே பாடுகிறது ஆட்டிற்கோ பறவைக்கோ தெரியாது என்னை

காய்ச்சலன்

   நா ன்கு கதவுகளை எட்டு ஜன்னல்களை முழுக்க அடைத்துக் கொண்ட பிறகும் வெந்நீருக்கு மாறி கசாயங்களுக்கு மாறிய பிறகும் தைலப் புட்டிகளால் மாத்திரை வில்லைகளால் இரட்டைக் கம்பளியால் நீ உன்னை இறுகச் சாத்திக்கொண்ட பிறகும் உன்னுள் கொதித்துப் பரவுமே  ஒரு காய்ச்சல் அதுபோல்  வருவேன். காய்ச்சலை அடித்து விரட்டிவிட்டு அந்தக் காய்ச்சலைப் போல் உன் மீது வருவேன்.

அநித்தியத்தின் மேடையில் இசை தூவும் அட்சதை க்ஷணங்கள்

உடைந்து எழும் நறுமணம் தொகுப்பு குறித்து ஷங்கர் ராமசுப்ரமணியனின் கட்டுரை. https://www.shankarwritings.com/2022/01/blog-post_9.html?m=1

உன்னுடையதில்லை அல்லவா?

  எ ன்னுடையதா? என்னுடையதா? நெஞ்சு கிடந்து அடித்துக் கொண்டது அதே செவலை நிறம் அதே வால் சுழி எந்தச் சக்கரத்திற்கும் அசைந்து தராமல் சாலையோரம் கிடக்கிறது தயங்கித் தயங்கி நெருங்கி தலைகுனிந்து நோக்கினேன். நீண்டதொரு பெருமூச்சில் இயல்பிற்குத் திரும்பிய கணத்தில் சட்டென அங்கே தோன்றி மறைந்தார் வெள்ளை முக்காடிட்ட ஒரு துறவி வெள்ளை முக்காடிட்ட ஒரு பிசாசு

கரகரப்பின் மதுரம்

நான் முறைப்படி இசை பயின்றவன் அல்ல. ஆயினும் பாடகன். பெயர் கூட  ‘இசை’. எவ்வளவு திமிர்? தமிழ்நாட்டில் எல்லோரும் பாடகர்தான். தன் வாழ்வில் ஒரு பாடலைக்கூட முணுமுணுத்திராத மனிதஉயிர்என்று எதுவும் இருக்காது. அதுவும் இளையராஜாவின் தேசத்தில் எல்லோரும்தான் பாட வேண்டும். எல்லோரும்தான் பறக்க வேண்டும். பாடல் என்பது கொஞ்சமாகப் பறப்பது. மனிதன் பாதசாரியானாலும் பறக்க விரும்புவன்தான். அவன் அத்தனை நெரிசல்களுக்கிடையே நடந்து நடந்து சலிப்பவன். எனவே சமயங்களில் அத்தனையையும் விட்டுவிட்டு அவன் பறக்கத்தான் வேண்டும்.  நான் பாத்ரூம் ஓட்டை வழியே பறந்து வானத்திற்குப் போய்விடுபவன். என்னை வானத்தில் ஏற்றிவிடும் அம்மையப்பன்  இளையராஜா. எனக்கு ராஜாவின் இசையைப் போலவே அவர் குரலும் அவ்வளவு பிடிக்கும். ஆனால் ஏன் பிடிக்கிறது என்பதுபற்றி இதுவரை யோசித்ததில்லை. ஆராய்ந்து பார்த்ததில்லை. ஆராயவும் தெரியாது.  ஆராயத்தெரியாதுஎன்பது அருவியின் முன் ஒரு சலுகை. குடைந்து குடைந்து நீராட வேண்டியதுதான்.   ராஜாவின் இசையைப் போற்றிப் புகழும் சிலருக்குக்கூட  அவர் குரல் உவப்பானதாய் இருப்பதில்லை. கொஞ்சம் இசை அறிந்த நண்பர் ஒருவர் தலையைக் குலுக்கியபடி “அ

நான் கர்ணன்

   சா ரங்கி கேவத் துவங்குகிறது. பால்ய நண்பனோடு பழங்கதைகள் பேசியபடியே டேபிளுக்குக் கீழே அவன் மனைவியின் தொடை மீது கைவைத்துள்ள ஒருவன் தானும் சேர்ந்து விம்மத் துவங்குகிறான் கழுத்துச் சங்கிலிக்காக  தாயின் தலைமீது பெரிய கல்லைத் தூக்கிப் போட்ட  ஒரு செல்வன்  தானும் சேர்ந்து விம்மத் துவங்குகிறான் விம்மிச் செழித்த முலைகளால் முதலாளியின் மாந்தோப்புகளை வளைத்துப் போட்டுக் கொண்ட ஒருத்தி தானும் சேர்ந்து  விம்மத் துவங்குகிறாள் கொஞ்சமே இருக்கும் மதுவை சமமாகப் பகிர வேண்டிய இக்கட்டான தருணத்தில் எதிரே இருக்கும் மனிதனுக்கு விட்டத்துப் பல்லியை வேடிக்கை காட்டுவேன்  ஆயினும் நான் கர்ணன் சாரங்கி வில்லும்  ஒரு குடிகாரக் கவிஞனும் சேர்ந்து போகிற போக்கில் ஒரு உள்ளம் விடாமல் எல்லா உள்ளத்தையும் 'உள்ளத்தில் நல்ல உள்ளம்' ஆக்கி வைத்தார்கள் .