Monday, June 24, 2013

அரூபவிரல்             
அப்போது என் முன்னே
இரண்டு விரல்கள்  நீட்டப்பட்டன.
ஒன்று கொலை
மற்றொன்று தற்கொலை
நான் இரண்டுக்கும் நடுவே நீண்டிருந்த
அந்த அரூபவிரலைப் பற்றினேன்.
இந்த வரிகளை
அந்த விரல்கொண்டே எழுதுகிறேன்.

Tuesday, June 18, 2013

கிறுக்கு


  
மார்கழிப்பனியில்
காதடைத்த பஞ்சோடு
அதிகாலை ஐந்துமணிக்கெல்லாம்
மைதானங்களில் ஓடிக்கொண்டிருப்பவர்களுக்கு
ஃபிட்னஸ் கிறுக்கு பிடித்திருக்கிறது

அதே சிற்றஞ் சிறுகாலையில்
மதுவிடுதியின் கதவுகளை ஓங்கி ஓங்கி தட்டுகிறான் ஒருவன்
அவனைத் தான் நாம் குடிக்கிறுக்கென்கிறோம்

உருளைக்கிழங்கு போண்டாவை மணமுடித்து
அதனூடே 72 ஆண்டுகள் வாழ்ந்து மறைந்ததொரு கிறுக்கு

 சிங்கத்தின் வாயில் தலையைத் தந்துவிட்டு
 கர்த்தரை நோக்கி கூவுகிறதொரு கிறுக்கு

 பெண்கிறுக்கில் பலநூறு உட்கிறுக்குகள்
சாரதி வைத்து தேரோட்டிய அதே தெருவில்
இன்று நெஞ்சைப்பிடித்த படி பஸ்ஸிற்கு ஓடுகிறார்
கல்யாணசுந்தரம்
அவருக்கு கார்குழல் துவங்கி கால்நகம் முடியவும் கிறுக்கான கிறுக்கு

இசைக்கிறுக்கில்
வகைக்கொரு கிறுக்கு..
வாத்தியத்திற்கொரு கிறுக்கு..

கிறுக்குகள் தம் கிறுக்குத்தனத்தின் அச்சில்
ஜம்மென்று அமர்ந்திருக்க
அதிலொரு கிறுக்கு
நேற்று உத்தரத்தில் தொற்றி விண்ணுலகு போனதேன்?
போகும் முன் தன் ப்யானோவை நூறு சுக்காக்கியதேன்?

Saturday, June 15, 2013

நிலவில் பழையபடி பாட்டி வடை சுடுகிறாள்

உன் காட்டுத்தீயின் சடசடப்பு  ஒய்ந்துவிட்டது
இப்போதெல்லாம் உன்னை வாடை கடிப்பதில்லை
நல்ல ஊண்..
பிறகெங்கு கைத்தொடி நெகிழ ?
பால் கசப்பதில்லை
படுக்கை நோவதில்லை
உன் கண்களின் காந்தத்தை கழற்றி
பழையிரும்புக்கடைக்குப் போட்டாய்
கைகளைக் காட்டு...
நகக்கொறி நின்றுவிட்டது
உன்னை அந்த ஞாயிற்றுக்கிழமையிடம் சொல்லவா ?

Tuesday, June 11, 2013

புரட்சி கேரளத்திலிருந்து பாலக்காடு , ஆற்றுப்பாலம் , உக்கடம் வழியே இருகூருக்கு வந்துகொண்டிருக்கிறது


                    
( சாம்ராஜின் “ என்று தானே சொன்னார்கள் “ கவிதைத் தொகுப்பை முன்வைத்து.. )

    -  இசை- 


   சாம்ராஜின் இக்கவிதைகள் கவிதைக்குள் இசை அளிக்கும் சலுகைகளைக் கோராதவை. மிகத் தாழ்ந்த ஆனால் திடமான குரலில் பேசுபவை.பித்தேறிய அரற்றலையோ, மிகுபுனைவின் வசீகரத்தோயோ துணைகொள்ளாமல் நிராயுதபாணியாக நின்று கவிதை விடுக்கும் சவால்களை எதிர்கொள்ள போராடுபவை. உரைநடைக்கு வெகுபக்கத்தில் நின்று கொண்டு கவிதையை சாதிக்க முயல்பவை. இக்கவிதைகளில் இசை முழங்கிக் கொட்டுவதில்லை. எனினும்  லயப்பிசகேதும் நேர்ந்துவிடக்கூடாது என்பதில் கவனமாகவே இருந்திருக்கிறார் சாம்.

    துண்டுதுண்டான வெவ்வேறு காட்சிகளை ஒரு நேர்கோட்டில் நிறுத்தி அதன் வழி கவிதையை உருக்கொள்ள வைப்பதென்பது இத்தொகுப்பின் மொழிதல்களில் பிரதானமானது. ஒரு கவிதையின் ஒவ்வொரு வரிகளின் மேலும் நாம் எண்ணற்ற கதைகளை புனைந்து கொள்ளலாம்.

    பால் வாங்ககூட செருப்பு போட்டுக் கொண்டு போகும் “ திமிர்பிடித்த பெண்,  சித்திரைத் தீயின் மதியத்தில் மேலும் தீயிட்டுக்கொள்ளும் பெண், எட்டு வயதில் முழங்காலுக்கு மேலான காயத்தை அப்பாவுக்கு கூட காட்ட மறுத்த பெண், எக்ஸ்ரே அறையிலிருந்து ஓடி வரும் மெண்,   வடுகொண்ட தன் முகத்தை வீட்டிற்குள்ளேயே வைத்து பூட்டுக்கொள்ளும் பெண், வானம் வெளுக்க விடுதியில் காத்திருக்கும் பெண், நாய்களின் புணர்ச்சியை மூடிய கதவின் வழியே உற்றுப்பார்க்கும் பெண், பத்து ரூபாய் அதிகம் கேட்டதற்காக பளிங்குத் தரையில் ரத்தம் சிந்தும் பெண், தூரத்து மலைகளூடே விளையாடப் போய் நேரமாகி விட்டபடியால் உணவு மேசையில் பரிமாறப்படும் பெண் என பெண்களின் மேலான கரிசனத்தால் நிரம்பியிருக்கிறது இத்தொகுப்பு. இவ்வகைக் கவிதைகளில் வயிற்றில் சூலம், அவள் நைட்டி அணிந்ததில்லை. மலைகள் யுகங்களாய் ஆகிய கவிதைகள் மொழிதலின் துல்லியத்தால் தனித்து நிற்கின்றன.   

     வயிற்றில் சூலம்
வடக்குத்தெருவில் இரண்டு பிள்ளைகள்
தீயைப் பொருதிக்கொண்டு செத்துப்போனார்கள்.
நடுத்தெருவிலிருந்து
அக்காவும் பார்க்கப் போனாள்.
அவள் தெருவிலிருந்து பத்து நிமடம்.

அப்பா எப்போதும் பெருமிதப்பட்டுக் கொள்வார்.
அக்கா அடுத்த தெரு
வீடெனப் போனதில்லையென “

நாற்பத்திமூன்று வயதில்
வடக்குத் தெருவைப் பார்க்கிறாள்
எல்லாத் தெருவையும் போலவே இருந்தது
அந்தத் தெருவும்.
பத்துநிமிட தூரத்தைக் கடக்க
அப்பாவின் ஆத்மா சாந்தியடையவும்,
கணவன் ரொட்டிக்காக கடல்கடக்கவும்,
இரண்டு பிள்ளைகள் தீயில் மரிக்கவும்,
வெயில் சற்று குறைவாகவும்
இருக்கவேண்டியுமிருக்கிறது.

     அதிகமும் உறுத்தாத ஒரு மெல்லிய பகடிமொழி தொகுப்பெங்கும் வெளிப்பட்டிருக்கிறது. “ போலச்செய்தலே இங்கு வாழ்வாகிப்போனது “ என்று சொல்லும் சாம்  தோழர்கள் போன்றவர்களை  கேலிக்குள்ளாக்குகிறார்.இத்தன்மையால் சமகாலக் கவிதைகளில் சாமின் கவிதைகள் தனித்துவம் பெறுகின்றன.

     “ என்று  தானே சொன்னார்கள் “ என்பதில்  இருப்பது தடித்த தத்துவங்களாலும்,  பொன்னான வாழ்வாலும் “ மோசமாக ஏமாற்றப்பட்டு விட்ட ஒருவனின் உடைசலான குரல். காது வழியவழிய நம்பிக்கையூட்டி விட்டு கடைசியில்  கொக்காணி  காட்டும் இவ்வாழ்வை வெறித்துப் பார்க்கும் ஒருவனின் குரல். “ அப்படி சொல்லவே இல்லையே “ என்று இவ்வாழ்வு சூது செய்யும் போது அது சொன்ன எல்லாவற்றையும் கேலி பேசத் துவங்கி விடுகிறான் கவிஞன். காற்றில் புடைத்த செங்கொடியைக் கொண்டு போய் கட்டுமான வேலையின் சகதிக்குள் நட்டுவைக்கிறான்

   நீங்கள் நனைவது
நீங்கள் நனைவது
புரட்சியின் தூரல்
விரைவில் பெருமழை
உங்களை நனைக்குமென்றார்கள்
அவசர அவசரமாக
பதுங்கு குழிகள் வெட்டப்பட்டன
ஆயுதங்கள் தீட்டப்பட்டன
செங்கொடிகள் காற்றில் புடைத்தன
கறுப்புக்குடைகளும் வண்ணம் மாற்றப்பட்டன
அப்படியொரு மழை
பெய்யவில்லை.

காலமழை
குடைகளுக்கு சொந்த நிறத்தைக் கொண்டுவர,
செங்கொடிகள்
“ ஆட்கள் வேலை செய்கிறார்கள் “ என
சகதியின் நடுவே
படபடத்துக் கொண்டிருக்கிறது.

     ஓர் இடது சாரி,  கூடங்குளத்து மக்களை நஷ்ட ஈடு வாங்கிக்கொண்டு ஊரைவிட்டு வெளியேறச் சொல்கையில், ஓர் இடதுசாரி கவிக்கு “உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்வது இன்றியமையாத கடமையென்றாகி விடுகிறது.  சாம் நிறைவாகவே இரண்டகம் செய்திருக்கிறார்.
             நான்  இன்குலாப்  சொல்லத் துவங்கிய காலத்தில் எங்கள் கிளைத் தோழர்கள் பசைகாய்ச்சிய படியே தமக்குத் தாமே இப்படி கேலிபேசிக்கொள்வர்.
“ மனச தளரவிடாதீங்க தோழர், புரட்சி இதோ உக்கடம் வரை வந்துவிட்டது. நமதூரை வந்தடைய  பதினைந்தே கிலோ மீட்டர் தான்.
அந்த 15 கி.மீ தான் யுகயுகமாய் நீண்டு கொண்டிருக்கிறது.அதே சுவரொட்டிகள், அதே வாசகங்கள், அதே மூன்று கல் அடுப்பு, அதே கரிபிடித்த சட்டி, முன்னே அமர்ந்திருக்கும் ஆள் மட்டும் மாறியிருக்கிறது. இன்னும் அந்தக் கரிச்சட்டியின் முன்னிருக்க ஒரு ஆளிருப்பது பின்னட்டை வாசகம் சொல்வது போல, துயரமானது எனில்  துயரமானது. ஆறுதலானது எனில் ஆறுதலானது. இப்படி புரட்சிக்கு பசை கிண்டியபடியே அதை கேலிபேசவும் செய்யும் ஒரு தோழரின் குரலை நாம் இக்கவிதைகளில் கேட்கிறோம்.
      குறுமுதலாலிகள், பெருமுதலாளிகள், வர்த்தக நிறுவனங்கள், கார்ப்ரேட் கம்பெனிகள் என எல்லாமும் “ எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது என்பதை சட்டமிட்டு மாட்டி வைத்து நமது கையறுநிலையை ஆற்றுப்படுத்துகின்றன. நமக்கும் அவை அவ்வளவு இதமான சொற்களாகவே இருக்கின்றன. சர்வதேச  சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை அதிகரித்து விட்டதால்  இன்றுமுதல் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 200 ரூபாய் என்று ஒரு அறிவிப்பு வருமாயின் நாம் என்ன செய்வோம்.கொஞ்ச நாட்களுக்கு நமக்கு தெரிந்த கெட்ட வார்த்தைகளை நண்பர்களோடு பகிர்ந்து கொள்வோம்.கொஞ்ச நாட்களுக்கு வீம்பாக பேருந்தில் பயணிப்போம். பிறகு சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை அதிகரிப்பதற்கு யார் தான் என்ன செய்யமுடியுமென்று மறுபடியும் இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு காற்று வாங்க கிளம்பி விடுவோம்.
    பம்ப பாய்.. பாவம், அவனுக்கு நிஜமாகவே ஒன்றும் தெரியாது. பங்க் முதலாளி..  அவர் தனுக்கொன்றும் தெரியாதென்கிறார். சட்டமன்ற உறுப்பினர்கள், மந்திரிகள், முதல்மந்திரி என எல்லோரும் தமக்கொன்றும் தெரியாதென்கிறார்கள்.  நாம் பெட்ரோலியத் துறை அமைச்சரை குறிபார்க்கிறோம். “ ஐயா, சத்தியமாக எனக்கு ஒன்றுமே தெரியாது என்றவர்  தளுதளுக்கிறார். நாலு முக்கு ரோட்டைத் தாண்டி, அங்காளம்மன் கோவிலை ஒட்டி இடப்புறமாக திரும்பினால் எங்கூர் சந்தை வந்து விடுகிறது. ஆனால் இந்த சர்வதேச சந்தை என்கிற கருமாந்தரம் எங்கிருக்கிறதென்றே நமக்கு தெரிய மாட்டேன் என்கிறது. நாமும் வேறு வழியின்றி காண்டீபத்தை தூர எறிந்து விட்டு “ எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது “ என அமைதியுறுகிறோம். கீதாசாரம் கவிதையின்,
   “ இந்த வினாடி
    சர்வதேசச் சந்தை முடிவு செய்து கொண்டிருக்கிறது
    நாளை நீங்கள்
    கன்னிமாரா மார்க்கட்டுக்கு
    வீட்டுச்சான்கள் வாங்கப் போகலாமா
    வேண்டாமாயென
என்கிற வரிகள் நம்மை மோசமாக பயமுறுத்தி விடுகின்றன.

   ஒரு பாடலை, இசையை, திரைப்படத்தை , பயணத்தை, காமத்தை, கலையை , துக்கத்தின் கயிற்றில் முடிச்சிடாமல் நம்மால் துய்க்கவே முடியாதா ? என்று கேட்கும் இத்தொகுப்பின் முன்னுரை, கவிதைகளுக்கு இணையான கலாபூர்வமானது.

   “ நல்லோர் ஒருவர் உளரேல் “ கவிதை  வெறும் காட்சிகளை மட்டும் காட்டுவதோடு  நிறுத்திக்கொள்வதால் சங்ககவிதைகளின் சாயல் கொள்கிறது.
        canon fm  10  கேமராக்கள் கிடைப்பதில்லை என்கிற கவிதை இவ்வுலகின் எண்ணற்ற வஞ்சங்களின் முன் என்னை அவ்வளவு அப்பாவியாக உணரவைத்த கவிதை. ஆண்களின் வஞ்சம் குறித்து நான் ஓரளவு அறிவேன். தன் காதலியோடு தனித்திருந்த பொழுதுகளை அவள் அறியாவண்ணம் படம் பிடித்து அதை நண்பர்களுக்கு விருந்தாக்கும் அயோக்கியத்தை சினிமாக்கள் காட்டாததற்கு முன்பிருந்தே நான் அறிவேன். ஆனால், இக்கவிதையில் வெளிப்படும் ஒரு பெண்ணின் வஞ்சம் என்னை நடுநடுங்க வைக்கிறது. “ காதலனை உருக்குலையச் செய்ய தன் நிர்வாணப்படத்தை இணையத்தில் உலவ விடுவதென்பது ஏற்கனவே புழக்கத்தில் இருக்கும் பழைய வஞ்சம் தானே நண்பா “ என்கிறான் வெய்யில். நான் உறுதியாக நம்புகிறேன், சாமையும், வெய்யிலையுமே கூட திகிலடையச் செய்யும் இன்னொரு புதுவஞ்சத்தை இவ்வாழ்வு தன்னுள்ளே பத்திரமாக ஒளித்து வைத்திருக்கிறது.
    சாம் கவிதைகளின் உரைநடை மொழி சில கவிதைகளுக்கு  தவிர்க்க இயலாமல் ஒரு வித “சோம்பல் தன்மையைஅளித்து விடுகிறது.
    “ அடுக்களையில்  ஜெகன்மோகினி பிசாசாய்
      வேகிறது உன் தேகம் “ என்கிற வரி உறுதியாக இந்த சோம்பல் தன்மையில் இருந்து எழுதியது தான்.
     சாமின் இயல்பிற்கு மாறாக  ஸ்ரீ குட்டி  கவிதையில் சொற்கள் பரவசத்தில் துள்ளுகின்றன.
   ஜன்னல் கதவை ரகசியமாக தட்டி
   ஸ்ரீ குட்டியை விளையாட அழைக்கிறது மழை.
  அம்மாவைப் பார்க்கிறாள் அவள்
  பெருங்காற்றை வீசவைத்து
  அம்மாவை அடுப்படிக்கு விரைய வைக்கிறது அது
  கள்ளத்தனத்தில் நனைகின்றனர் இருவரும்
  அம்மா  திரும்பி வரும் பொழுது
 தன்னை நிறுத்துக் கொள்கிறது மழை “
   என்கிற வரிகள் நம்மையும் கள்ளத்தனத்தில் நனைத்துவிடுகின்றன.
      
      பொதுவாகவே சாம் தன் கவிதைகளில் சொற்களை இன்னும் கொஞ்சம் துள்ள விடலாம் என்பது என் கருத்து. தளபுளவென்று கொதிக்க விடுவது அவசியமில்லைதான் என்கிற போதிலும், சொல்லிற்கு ஒரு மிதமான சூடு அவசியம் என்பது பொதுவாக ஏற்றுக்கொள்ளப் பட்டுவிட்ட ஒன்று தான்.

     பைத்தியம் பிடித்த ஒருவராக சாமைப் பார்க்க சந்தோஷமாக இருக்கிறது. விரைவில் பைத்தியம் முற்றிய ஒருவராகவும் சாமைப் பார்க்க ஆசை. வாழ்த்துக்கள் சாம்.

( என்று தானே சொன்னார்கள்- சாம்ராஜ்- சந்தியா பதிப்பகம்- விலை: ரூ.40)
                                           
     நன்றி : உயிர் எழுத்து - ஜுன் -2013