Skip to main content

Posts

Showing posts from March, 2016

சிக்கெனப் பிடித்தல்

                                           பிரச்சனை ” சிக்கெனப் பற்றுதலில் “ தான் இருக்கிறது. நல்லவேளையாக வாதவூரனுக்கு  உடைந்த மதியும், ஊரும் பாம்பும்  கிடைத்து விட்டன. அவன் அதைப்பற்றிக்கொண்டு   கதிமோட்சம் கண்டான். கச்சவிழ்ப்பின் வழியே வீட்டுலகம் அடைந்தவர்களை அவன் அங்கு சந்தித்தான். சிக்கெனப்பற்றப்படும் எதுவும் யாரையும் கைவிட்டு விடுவதில்லை. எவ்வளவு முயன்றும் எப்படிப் புரண்டும் எதையும் பற்றிக்கொள்ள இயலாதவர்கள் கடைசியாக தாம்புக் கயிறு வாங்கிவர வேகமாக கிளம்புகிறார்கள். ஆகத்துயரம் என்னவெனில் அவர்களில் பலருக்கு அதுவும் கீழே விழுந்து உடைந்து விடுகிறது.

ரவா ரோஸ்ட்

     ஒரே மகள்  தீவிர சிகிச்சைப் பிரிவில் கிடக்கிறாள் விபத்தில் சிக்கி தலையில் பலத்த காயம் மாதம் இரண்டாகிறது இப்போதுதான் நாளுக்கு ஒரு முறையென விழித்துப் பார்க்கிறாள் அப்போதும்  எங்கேயோ பார்த்துவிட்டு கண் மூடிக்கொள்கிறாள் இவள் சவம் போலாகிவிட்டாள் இரண்டு நாட்கள் பட்டினி கிடந்தாள் பிறகு நான்கு இட்லிகளை வாங்கி அதில்  இரண்டரையை சாப்பிட்டாள். ஒரு நாள் நான்கு இட்லிகளுடன் வந்த சர்வரிடம் ” ரவா ரோஸ்ட் “ இருக்கா ? என்று கேட்டாள் வாங்கி உண்டாள்... முழுசாக   உண்டாள்... கடைசியில் சுண்டுவிரலைக் கூட  சப்பினாள் கைகழுவும் வேளையில் தான் உணர்ந்தாள் தீடீரென இப்படி “ ரவா ரோஸ்ட் “ தின்று விட்டதை. உணவகம்  ஒலிவீசக்  கத்தினாள்.

பூரண மகிழ்ச்சி

                             கட்டக்கடைசியில் நான் உறுதிபூண்டு விட்டேன் வாழ்வில் இனி மகிழ்ச்சி மட்டும்தான் என்று. கிடார் வாசிக்க கிடார் தேவையில்லை என்பதைத் தெரிந்து கொண்டேன். புகைக்க நெருப்பு கட்டாயமில்லை நாபிக்கமலத்தை நுனிநாக்கால் வருடுவதற்கு நாபிக்கமலமோ நுனிநாக்கோ அவசியமில்லை என்பதை அறிந்துகொண்டேன். மலையுச்சியில் நிலவொளியில் கிடக்க மலையேற வேண்டியதில்லை. புனலாட வேண்டும் என்று தோன்றிவிட்டால் உடனே ஆடைகளை களைந்து விட வேண்டியதுதான் கடல்நீர் ஆவியாகி பிறகு மேகமாகி எப்போது அது மாரியாகி எப்போது நமது ஆறுகளில் புதுவெள்ளம் பெருக்கெடுக்க?  நான் உறுதிபூண்டு  விட்டேன் இனி மகிழ்ச்சி.. மகிழ்ச்சி.. பூரணமகிழ்ச்சி!