Skip to main content

Posts

Showing posts from 2011

அந்த மயில் போட்டோவில் விழாது

மாயனின் மலைப்பயணத்தின் போது மயிலொன்று ஓடோடி வந்து தொழுது நின்றது. “ அபயம்.. போட்டோவில் விழுந்து விழுந்து முறிகிறேன்” மாயன் அதன் துயரோட்டி அருளினான். மானை வேட்டை நாய்களின் கண்களிலிருந்து விடுவித்தான் பறவைக்கும் விலங்குக்கும் பூச்சிக்கும் புழுவுக்கும் கேட்டதைத் தந்தான் வீடுதிரும்பிய மறுநாள் அலறியபடி வந்து கதவுதட்டியது மலையருவி துரத்தி வந்த தண்ணீர் போத்தல்காரன்களின் கண்களை குருடாக்கி மீண்டும் அதை வனமனுப்பி வைத்தான் கடைசியில் அரசாங்கம் வந்து காலில் விழுந்தது. “ எங்கள் ராடார்களின் கண்களிலிருந்து எதுவும் தப்பிவிடலாகாது” இப்போது விட்டத்தில் ஒரு பல்லியாகி வாலாட்டும் மாயன் வல்லரசின் கண்களில் விழமாட்டான். ( கோணங்கிக்கு)

அந்தக் காலம் மலையேறிப் போனது

என் வீட்டுக்குப் பின்னே ஒரு மலை இருக்கிறது. ஆறு வயதில் விரல் சூப்பூம் பழக்கத்தை இந்த மலை மீது தான் ஏற்றி விட்டேன் . அன்னைக்கு செய்து கொடுத்த மூன்று சத்தியங்களையும் ஒரு நள்ளிரவில் இந்த மலைக்கு அனுப்பினேன் கிரிக்கெட் மட்டை, கை மைக், கீ- போர்டு எல்லாவற்றையும் இந்த மலைதான் வாங்கிக் கொண்டது ஒரு காதல் மட்டும் இந்த மலை மீது ஏறி இறங்கி விளையாடிக் கொண்டிருந்தது வெகுகாலமாக. நேற்றது உச்சிக்கு சென்று மறைந்ததை பார்த்தேன் .

பாலசுப்ரமணியம் கவிதை

இந்த இரவில் விழித்திருந்து இரவின் கண்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன் முத்தமிட்ட இதழ்கள் ஒற்றை மர உதிரும் மஞ்சள் நிற இலைகள் மயக்கமூட்டும் மதுக்குடுவையின் மூடிகள் காணவே காண முடியாத தூரக் கிணறுகளின் ஆழ மீன்கள் மற்றும் என் நண்பர்கள் தங்கள் மனைவிகளோடு உறங்கிக் கொண்டிருப்பதையும் பார்க்கிறேன் இந்த மழைக்காலத்தில் வெய்யில் எவ்வளவு விருப்பமானதோ அப்படித்தான் எனக்கும் இரவின் கண்களைப் பார்ப்பதும் ஆனாலும் பெரியதொரு குற்றச்சாட்டோடு அப்போதுதான் நான் கண்ணீர் நிரம்பிய மெத்தைகளில் புரண்டு படுக்கிறேன்.

மன்னவன் வந்தானடி தோழி !

சென்ற மாத்தின் ஒரு நள்ளிரவில் நாச்சிமுத்து கொலைகாரனானார். நம்மை போல் தான் அவரும். கொலைசெய்வது பற்றியெல்லாம் நினைத்து கூட பார்த்தவரில்லை. ஆனால் நம்மைபோலில்லை நாச்சிமுத்து அவர் ஒரு கொலை செய்தார். “ நடிப்பிசை கதைக்கடலான” அவரைக் கொண்டு போய் சிறையின் கும்மிருட்டுள் வீசினார்கள். அங்கு பத்மினியின்றி அவர் தனிமையில் வாடினார். திருட்டுத்தனமாக பாட்டு கேட்ட குற்றத்திற்காக இரண்டு முறை பிடரியில் உதை வாங்கினார். மெய்மறந்து பாடிய சத்தத்தில் முன்பல் போனது. அனேக இரவுகளில் அவர் அழுதுகொண்டிருந்தார். இன்று அதிகாலை கடன் கழிக்க கழிவறை சென்ற நாச்சிமுத்துவுக்கு வெளியே வருகையில் ஒரு அம்சமான மீசை இருந்தது. மார்பெங்கும் இரத்தினங்கள் ஜொலித்துக் கொண்டிருந்தன. தலையில் ராஜகீரிடம்... அப்போது யாரோ இருவர் கொம்பூதி முழக்கினர். பொற்சரிகை பூண்ட அரையாடை துவள அவர் நடந்து வருகையில் பிண்ணனியில் ஒலித்தன ஜதியும் பாட்டும். தன் சிம்மாசனம் ஏறி அமர்ந்த மன்னவன் வரும் வழியெங்கும் கைகூப்பி எழுந்து நின்ற மரங்களை கை அமர்த்தி அமரச் சொன்னார். அவை அமர்ந்து கொண்டன.

இராவில் கல்லுடைப்பவர்கள்

அதிகாலையில் கர்லாகட்டை சுற்றுபவர்களும் இராவில் கல்லுடைப்பவர்களும் பச்சைமுட்டைகளை விரும்பிக்குடிக்கிறார்கள். திறக்கவே திறக்காத ஒரு கல்லை மரைகழன்ற சம்பட்டி ஓங்கி அடிக்கிறது. எனினும், கல்லுடைத்தல் ஒரு அத்தியாவசியப்பணி அது புதிய‌ க‌ட்டிட‌ங்க‌ள் த‌ழைக்க‌ உத‌வுகிற‌து இராவில் க‌ல்லுடைப்ப‌வ‌ர்க‌ளுக்கென்றே ம‌த‌ன் ஒரு இரும்புவில்லை க‌டைந்து வைத்திருக்கிறான் இராவில் க‌ல்லுடைப்ப‌வ‌ர்க‌ளால் மின்விசிறிக்கு கீழே இந்த‌ வாழ்கைக்கு வியர்த்துக் கொட்டுகிற‌து. இந்த‌ மைதான‌மெங்கும் ஓடிபிடித்துக் கொண்டும் ச‌றுக்கி விளையாடிக்கொண்டும் ஊஞ்ச‌லாடிக் கொண்டுமிருக்கின்ற‌ன உழைப்பின் க‌னிக‌ள்.

வாணலிக்குள்ளிருந்து பேசுகிறேன்

எவன் குவளை நீரை தட்டிவிட்டேன் எவன் குடிசைக்கு தீ வைத்தேன் எந்த தெய்வத்தை நிந்தித்தேன் எந்த பத்தினியின் விரதத்தை கலைத்தேன் எந்த சொல்லால் எவன் நெஞ்சை சிதைத்தேன் எந்த சிறுமியை வல்லாங்கு செய்தேன் எந்த குருடனுக்கு புதைகுழிக்கு வழிசொன்னேன் எந்த சூலியின் நிறைவயிற்றைக் கிழித்தேன் எந்த தூளிக்குள் அனலள்ளிப் போட்டேன் எந்த நண்பனின் புறங்கழுத்தைக் கடித்தேன் எவன் தொடைசதைக்கு நன்றி மறந்தேன் எப்பிறப்பில் எவன் குடியறுத்ததற்கு இப்பிறப்பு.

மேயாத மான்

1) மான்கள் மிரண்டது போல் ஒரு பார்வை பார்க்கும் அதற்கு நீ மிரண்டு விட்டால் புரண்டு விட்டாய் போ! 2) மொட்டைக் கருவேலத்தின் சொப்பனத்தில் எப்போதும் ஒரு காயாத கானகம். அதில் ஏராளம் மான்கள். 3) பொழுது விடிந்தது. பொற்கோழி கூவிற்று. அம்மா வந்து அறைக்கதவை இடிக்கிறாள். ஜன்னல் கம்பிகளூடே ஓடி மறைகின்றன சில மாயமான்கள். 4 ) சாயாத கொம்பிரண்டும் முட்டிமுட்டி கொன்றிட்டால் களிமோட்சம் உனக்குத்தான் சா ! 5 ) சொல் “ மகாலிங்கம் “ ! எத்தனை மான்தான் வேண்டும் உனக்கு.

கழியூன்றித் தாண்டுதல்

மேல்சட்டையை கால்சட்டைக்குள் செருகி பெல்ட் வைத்துக் கட்டி ஒரு நாளை புத்தம் புதிதாக்கினேன். முகத்தின் கருங்காட்டை வழித்தெடுத்ததில் நெகுநெகு வென்று திறந்தது ஒரு நாள் சப்பென்றிருக்கும் நாளின் மீது கொஞ்சம் உப்பையும், மிளகாய்பொடியையும் தூவி விடுவேன். இப்போது இது ஒரு சுவையான வெள்ளரிப்பிஞ்சு ஆனால் இன்றோடு பழசாகிவிட்ட இவற்றை இன்னொரு நாளின் மீது கொட்ட முடியாது. தியேட்டரில் போஸ்டர் மாற்றுவது உற்சாக மூட்டுகிறதெனினும், இனி ஒரு மாததிற்கு அதே வெள்ளை சுமோ அதே கண்ணிவெடிக்கு சிக்கி அதே உயரத்தில் தூக்கி வீசப்பட்டு அதுபோலவே வெடித்து சிதறுமே.. கடவுளே.. பூட்ஸ் போட்டுக் கொள்கிறேன் வழக்கத்திற்கு மாறாக ரயிலில் போகிறேன் வழக்கத்திற்கு மாறாக பேருந்தில் போகிறேன் அதிகாலையில் எழுந்து நடந்து போகிறேன் ஒரு நாளில் மூன்று முறை குளிக்கிறேன் வேம்பில் பல்துலக்கி பன்னீரில் கொப்பளிக்கிறேன். எம்கேடி எத்தனை நாட்களைத் தான் வெளுத்துத் தருவார்.. வாயில் ஊறும் இது, இந்த நாளில் இருப்பத்தி மூன்றாவது கம்பர்கட்.

குட்டி குட்டியாக சில பிரமாதமான வாழ்க்கைகள்

” இந்த வாழ்வு தாறுமாறான பீட்டில் பாடப்படும் மோசமான பாடல் ” என்று சொல்வார் சின்னதங்கம் பீட்ட்ர்ஸன். அதனால் தான் அதற்குள் குட்டி குட்டியாக சில பிரமாதமான பாடல்கள். ஒரு பாடல் என்னையும் என் வாகனத்தையும் ஓட்டிச் செல்கிறது.. ஒரு நாள், அது சைக்கிள் சிறுவர்கள் கையசைத்து கடந்து செல்கிற PBS வாகனம். பெருநகர சாலையின் வெள்ளைக் கோட்டிற்கு இப்புறம் கருங்குயில்கள் பறந்து திரியும் நந்தவனம்... மறு நாள், அது பித்தம் முற்றிய ஒரு மேற்கத்தியனுடையது. ஹாரனின் ஊளையை இன்னொரு கருவியிசையாக்கிக் கொண்டு நூலிடைச்சந்துகளில் புகுந்து வளைந்து களிபீடித்தாடுவது... ஒரு பாடல் என்னையும் என் வாகனத்தையும் ஓட்டிச் செல்கிறது... நானும் ஆண்ட்ரியாவும் கடவுளாகிக் கொண்டிருக்கையில் குறுக்கிட்டதொரு பெரிய டேங்கர் லாரி மண்டை உடைந்து இரத்தம் வழிகிறது ஆனந்தம்.. பரமானந்தம்.. ( ஜான் சுந்தருக்கு..)

என் பொறாமையை அவிழ்த்து விடப் போகிறேன்

என் மொறாமையை அவிழ்த்து விடப் போகிறேன் அது கன்னங்கரு குகையில் அலைந்து திரியும் கன்னங்கரு மிருகம். வன்மத்தின் கொள்ளி மின்னுகிற கண்கள் அதன் உருவம். இந்த உலகத்தின் ஒவ்வொரு புன்னகையும் அதன் கொள்ளியில் வாய்வைத்து ஊதுகிறது. சொர்க்கபுரியின் கூச்சல்களை சதா உன்னித்திருக்குமது அதை சகிக்கவொண்ணாத தருணத்தில் ஒரு இடியை உறுமுகிறது. கடவுள் அந்தரத்தில் மறைகின்ற மாமிச துண்டங்களை அதற்கு வீசியெறிந்தார். எனவே அது பக்கத்து தட்டை பார்க்க வேண்டி வந்தது அழுகையில் ஊறி நைந்த இரவுகளில் இருந்து திசைதெறிக்க ஓடி வருமதன் குறுக்கே நீதியை முழங்கும் கனவானை அது வாயைதிறவாமலேயே மென்று விடுகிறது.

கடைசியாக பார்க்கையில்

கடைசியாக பார்க்கையில் அவனும் இளையராஜாவும் மொட்டை மாடிக்கு போய்க் கொண்டிருந்தார்கள் அத்தனை நட்சத்திரத்திலும் ஒரு நட்சத்திரம் தனித்து ஜொலித்துக் கொண்டிருந்தது. அருகில் பெரிய பூவரசம் நிற்கிறது சின்ன காற்று ... அந்த நட்சத்திரமும் பூவரசமும் ஒரு தபெலாவும் சேர்ந்தடித்த காற்று.. அவன் கிழத்தி எத்தனை நேரமாய் அவனை சாப்பிட அழைத்துக் கொண்டிருப்பாள் மேலே வந்து பார்த்த போது ஒரு கோழிப் பொங்கு வானத்தில் போய்க் கொண்டிருந்தது.

வானம் - நீலம்

வானம் சிக்னலில் சிக்கிக் கொண்டது. ஒரு பிச்சைக்கார சிறுமி அதை நெருங்கி வந்து பிச்சை கேட்கிறாள். வானம் சிவப்பு விளக்கை வெறித்துக் கொண்டு நிற்கிறது. அவள் தொட்டு தொட்டு நச்சரிக்க எரிச்சலில் ஃபேண்ட் பாக்கெட்டில் திணித்திருந்த பர்ஸை எடுத்து அதில் சில்லரைகளைத் தேடியது. அவை எங்கோ இடுக்கில் சிக்கிக்கொண்டிருந்தன. எனவே வானம் பர்ஸை ஒரு குலுக்கு குலுக்கியது அப்போது உள்ளிருந்து தெறித்து விழுந்தது ஒரு யோனி. கடவுள் கிருபையால் சிக்னல் எடுக்க இன்னும் பத்து வினாடிகள் இருந்தன. பதறித் துடித்த அது ஐந்து வினாடிகளுக்குள் தவறவிட்டதை கைப்பற்றி விட்டது. அருகிருந்த பேக்கரியில் தண்ணீர் பாட்டில் வாங்கி அதை நன்றாக அலசி தன் கர்ச்சீப்பால் துடைத்து உலர்த்தி மீண்டும் பர்ஸில் பத்திரப் படுத்திக் கொண்டு கிளம்பியது. நீலம் வழக்கமாக போகும் பேருந்தில் இன்று கூட்டம் அதிகம். நிற்க கூட இடம் இல்லை. எனவே அது ஒற்றைக் காலில் பயணித்தது. உணவு இடைவேளையில் பையை திறந்து பார்த்தால் சாம்பார் டப்பாவும், தயிர் கிண்ணமும் கழன்று பை முழுக்க சிந்தியிருந்தது. அதன் ஈரமும் நாற்றமும் அதற்கு எரிச்சலூட்டியது. அது அவசர அவசரமாக பையில் இருந்த பொருட்களை எட

குடும்ப நாய் ; சில சித்திரங்கள்

1. ஒரு குடும்ப நாய் குடும்பத்தைத் தின்று குடும்பத்தை பேண்டு அதையே தின்று அதையே பேழ்வது. 2. உண்மையில் குடும்பநாய்களுக்கு சங்கிலியோ கயிரோ தேவையில்லை. 3 . குடும்ப நாய்களை நாம் பரிசோதிக்க வேண்டியதில்லை. அவை சிச்சயம் நல்ல சாதி நாய்கள் 4 உலைத்து உலைத்து ஓடாய் தேய்பவை குடும்ப நாய்கள். பெரும்பாலும் அதன் உலைப்பு காற்றில் போய்விடுகிறது. 5. குடும்ப நாய்கள் சமயங்களில் திருட்டு பூனைகள். 6. குடும்ப நாய்களுக்கு விசாலமான வீடுகள் உண்டு. என்றாலும் அவை அசுத்தமான விடுதிகளிலேயே சுத்தமான காற்று கிடைப்பதாக சொல்கின்றன. எனவே சில நேரங்களில் சொந்த ஊரிலேயே அறை எடுத்து தங்குகின்றன. 7. குடும்ப நாய்களிலும் பெட்டைகள் இன்னும் பாவம் அவை பாத்ரூம்களில் மட்டும் நடனமாட அனுமதிக்க பட்டவை 8. குடும்ப நாயின் கர்ப்பக்குட்டிகளின் வயிற்றில் வளர்ந்து வருகிறது சலாமிடுதல் என்கிற பட்டறிவு. 9. குடும்ப நாய்கள் ரொம்பவும் மனசாட்சிக்கு பயந்தவை. எனவே எல்லா அநீதிகளுக்கெதிராகவும் அவை இரண்டு முறை குரைத்து விடுகின்றன. 10. ஒரு குடும்ப நாய் தன் வாழ்வில் ஒரு முறையேனும் தண்டவாளத்தை உற்ற

நிலா ரசிகன் கவிதை

இலை அங்குமிங்கும் அலைவுறும் இலையின் பின் ஓடுகிறாள் சிறுமி கைகளில் அகப்படாத இலையை முயல்போல் தாவித்தாவி பின் தொடர்கிறாள். மாபெரும் விருட்சங்கள் தலைகுனிந்து அவளோட்டத்தை ரசிக்கின்றன. வெண்காகங்கள் அவளுடன் நீந்திக்கொண்டு இலையை தொடர்கின்றன. பச்சை இலையின் நரம்புகளை தீண்ட விரல் நீட்டுகையில் ருதுவாகிறாள். அசைவற்று கிடக்கிறது இலை.

விகடகவி மட்டையை உயர்த்துகிறார்

முதன்முதலாக நான் செருப்படி வாங்கியபோது வானத்தில் போன பறவைகள் அப்படியே நின்றுவிட்டன. கடலில் எழும்பிய அலைகள் அந்தரத்தில் ஸ்தம்பித்துவிட்டன அசையும் பொருளெல்லால் ஒரு நாழிகை அப்படியே நின்றுவிட்டன இரண்டாவது முறையாக செருப்படி வாங்கியபோது பறவைகள் அது பாட்டுக்கு பறந்தன அலைகள் அது பாட்டுக்கு அடித்தன செருப்படி வாங்குவதற்காக படைக்கப் பட்டவர்கள் கடவுளின் தரவரிசைப் புத்தகத்தில் கடைசியில் இருக்கிறார்கள் செருப்படி வாங்கிக்கொண்டு கவிதை எழுதுபர்கள் அதற்கும் கொஞ்சூண்டு மேலா அல்லது கடைசிக்கும் கடைசியா என்றெனக்குத் தெரியவில்லை எல்லோரும் என்னை ஒரு விகடகவி என்பதால் நான் எல்லாவற்றையும் விளையாட்டாக்கி காட்ட வேண்டி உள்ளது. எனவே 100 வது செருப்படியின் போது இந்த உலத்திற்கு முன்னால் நான் ஒரு மட்டையை உயர்த்திக் காட்டினேன் ஆனால் 101 வது செருப்படி ரொம்பவும் வலுவாக நடு மொகரையில் விழுந்தது. நான் ஒரு விகடகவியாதலால் வாயை இளிப்பிற்கு கொண்டு வர முயன்றேன் அதற்குள் கண்ணிரண்டும் கலங்கி விட்டன

குட்டிச் செம்பொன்

சுவரைத் தாண்டாத தாழ்ந்த குரலில் உருக்கொள்கிறது ஒரு சச்சரவு அந்த வீட்டின் அம்மாவும் அப்பாவும் மாறி மாறி ஏசிக்கொள்கிறார்கள் வஞ்சினம் சொல்கிறார்கள் அப்பா காலைத் தூக்கிக்கொண்டு அம்மாவை உதைக்க போகிறார் அம்மா ஒரு சொல்லை பழுக்ககாய்ச்சி அப்பாவின் நெஞ்சில் வைத்து தேய்கிறார் அம்மா நெஞ்செங்கும் அழ, அப்பா கண்களுக்குள் அழுகிறார் அப்பா கனவு கண்டிருந்த பொன்னான வாழ்விற்குள் அம்மா மூத்திரம் மொண்டு வைக்கிறாள் அம்மா கனவு கண்டிருந்த பொன்னான வாழ்வை அப்பா எண்ணெய்ச் சவுக்கால் ஓங்கி ஓங்கி அடிக்கிறார் நமக்கு தெரியும் இரண்டு வயதே நிரம்பிய ஒரு குழந்தைக்கு என்ன தெரியுமென்று நான் பேசுவதெதுவும் அதற்கு புரியாது அதனால் பேசவும் முடியாது இரண்டு முகங்களையும் மாறி மாறி பார்க்கும் அது ஐந்தாம் வீட்டின் சுவரை முட்டிக்கொண்டு அழுகிறது பொன்னான வாழ்வில் பூத்த குட்டிச் செம்பொன் அநியாயத்திற்கு வளர்ந்து விட்டது

முட்டக்கோழியின் அதிகாரம்

இன்று அதிகாலைத் தூக்கத்துள் வந்து விழுந்தது ஒரு தொலைபேசி அழைப்பு. எழுந்து வாசலுக்கு வந்தேன். அங்கு ஒரு பெரிய முட்டக்கோழி நின்று கொண்டிருந்தது. அதற்கு அப்புறம் உலகமே தெரியவில்லை. சிலசமயம் அது அப்படியும் இப்படியுமாய் அசைந்தாடுவது நிச்சயம் ஒரு கேலிநடனம். எப்போது வேண்டுமானாலும் யார் வீட்டு வாசலிலும் உருண்டு வந்து நிற்கலாம் ஒரு முட்டக்கோழி. என் தாத்தா கடவுளை செருப்பால் அடித்திருக்கிறார். எனவே நான் கடவுளின் அதிகாரத்திற்க்கு பயப்படுவதில்லை. ஆனால் தாவாக்கொட்டையில் மயிர்வளர்க்கும் எத்தனையோ பேர் தோன்றி என்னென்னவோ சொன்னபோதிலும் முட்டக்கோழியின் அதிகாரத்தை உடைத்தெரிய முடியவில்லை. நான் முட்டக்கோழிக்கு அஞ்சுகிறேன் அதைப் பணிந்து வணங்குகிறேன் முட்டக்கோழியே! என்னை விட்டு விடு

என் முதல் சிறுகதை

இளமஞ்சள் நதி தன் பத்தொன்பதாவது வயதில் அப்பாவிடம் இருந்து முதல் அரையை வாங்கிக்கொண்டு கொஞ்சமும் பதற்றமற்று நின்று கொண்டிருந்தான் பிரபு. அப்பாவிடம்அவனுக்கு எப்போதும் பயமிருந்ததில்லை. தோளிற்கு மேல் வளர்ந்த பிறகல்லகாலிற்கு கீழ் நிற்கும் போதே தோழனாகி விட்டவன் அவன். தன் முடிவில்உறுதியாகவே இருப்பதாகவும், குடும்ப மானம் போய் விடுமென்றால் குடும்பத்திலிருந்து போய் விடுவதாகவும் சொன்னான். கூப்பாடு போட வாய்திறந்த சரஸ்வதியை “ஊரக் கூட்டதடி கழுத முண்ட” என்று காலைத் தூக்கிக்கொண்டு உதைக்கப் போனார் கணேசன். அவள் சேலைத் தலைப்பால் வாயைப் பொத்திக்கொண்டு விசும்பி விசும்பி அழுதாள். பிரபு பீரோவைத் திறந்து தன் ஆடைகளை எடுக்கத் துவங்கினான். “தூக்கத்திலிருந்த மனைவி கழுத்தை நெறித்துக் கொலை; கணவருக்கு போலீஸ் வலை வீச்சு” ... உறக்கம் வராது உலாத்தும் எல்லா ராத்திரிகளிலும் கணேசனுக்கு இந்த செய்தி நினைவில்வரும். போலீஸ் மட்டும் வலைவீசாமல் இருக்குமானால் ஒருவேளை இந்நேரம் அது நடந்து முடிந்திருக்கலாம்.அந்தராத்திரிகளில் அவர் சிகரெட்டுகளை கொன்றுபோட்டு மிதித்தார்.கணேசனுக்கும் சரஸ்வதிக்கும் திருமணத்திற்கு முன்பே ஒ

அந்தப் பசி நன்கு வறுக்கப்பட்ட கோழி இறைச்சியைப் போல் இருக்கிறது

கையில் ஒரு அலுமினியத் தட்டில்லை உடைகளில் கிழிசலேதுமில்லை ஆனாலும் அந்தக் கண்கள் .. அது நிச்சயம் ஒரு பிச்சைக்காரனுக்குரியவை அவன் உணவு தேக்கு மரக்கதவுகளாலும் சுற்றி நிற்கும் காம்பவுண்டு சுவர்களாலும் இரண்டு கொழுத்த நாய்களாலும் தாளிட்டுக் கொண்டு ஒரு மாளிகைக்குள் வாழ்கிறது. அந்த வீதியில் எத்தனையோ வீடுகள் திறந்திருக்கும் போதிலும் பன்னெடுங்காலமாக அவன் அந்த இரும்பு கிராதிக்கு கீழே தான் நின்றுகொண்டிருக்கிறான். காம்பவுண்டு சுவரை எகிறிக் குதித்து, நாய்களை கொன்று வீசி விட்டு தேக்குமரக்கதவுகளை உதைத்து உதைத்து திறக்கும் நாயக பாவத்தில் அவன் புனையும் பாடல்கள் அவனைப் போலவே இரும்பு கேட்டுக்கு கீழே கிடக்கின்றன. அவன் அப்பாடல்களை தின்று வாழ்கிறான் அல்லது அந்தப் பசியை. அது நன்கு வறுக்கபட்ட கோழி இறைச்சியைப் போல் இருக்கிறது. அது வாழட்டும் காணவே காணாத அந்தப் பிச்சை அதுவும் வாழட்டும் அந்த நாய்கள் அவை வாழ்வாங்கு வாழட்டும்.

பால்ய பருவமென்பது..

உங்கள் பால்யத்தைக் கேட்டால், நீங்கள் கூடைச்சேருள் அமர்ந்து சிரிக்கும் ஒரு குழந்தையையோ விறைத்த ட்ரவுசரும்,விறைத்த முகமுமாய் சீருடையில் நிற்கும் ஒரு பள்ளிச்சிறுவனையோ காட்டுகிறீர்கள். ஒருவன் தன் கல்லூரி ஆல்பத்தைக் காட்டுகிறான். அதில் அவன் பல் முப்பத்திரண்டும் தெரிகிறது. நான் நேற்று காலை எடுத்த என் புகைப்படத்தைக் காட்டுவேன். பால்யத்தின் வாகனத்திலேறி பால்யத்தின் கனவுகளோடு தொலைதூர மலைவெளிக்கு போகிறது ஒரு காதல். அது கட்டிக்கொள்ள எண்ணற்ற கொண்டை ஊசி வளைவுகளை சமைத்து வைத்தீரே, வாகனத்தில் நிரப்பப்பட்டிருக்கும் பால்யத்தின் காற்றை அது வீடு திரும்பும் வரையிலேனும் பிடுங்கி விடாதிருப்பீரா ஆண்டவரே.. நம் இனிப்பினிப்பான கற்பனைகள் ஒரு முடிவுக்கு வரும் தறுவாயில் கூடைச்சேர்கள் காலொடிந்து சரிகின்றன. நம் குழந்தைமையின் அமர்ந்தகோலம் நடுநடுங்கியாடி தொப்பென்று கீழே விழுகிறது

சமயவேல் கவிதை

அழகென்னும் அபாயம் ஒரு நெடுஞ்சாலைப் பயணத்தில் ஊர்தி எந்திரம் நிறுத்தி சாலையோரம் கொஞ்சம் நடந்து ஓங்கி வீசுகிற காற்றில் நிரம்பியபடி சிறுமரக் கூட்டமொன்றை நெருங்குகின்றேன் நுணா மரப் புதரொன்றில் ஒரு சிறு பறவை இறகுகள் அடர் சிவப்பு கழுத்து மயில் நீலம் உருண்டை வயிறு சாம்பல் நிறம் கொண்டை மஞ்சள் நிறம் கண்கள் என்ன நிறம்? கால்கள் பசுமஞ்சள் நிறம் விரல்கள் அரக்கு நிறம் நிற்கிற மரமோ மர நிறம் அந்த இத்தினியூண்டு பறவை கொண்டையை ஆட்டி ஒரு வினோதக் கூவலை எழுப்பியபோது என் பெரு நகர ஆத்மாவின் தலை வெட்டுண்டு உருண்டது மரணத்தின் விளிம்பை ஒரு நடனக் கூடமாக்கியது என் உடல் கூவல் முடித்து பறவை விருட்டென்று பறந்தோடியதும் உயிர் மீட்டு ஓர் குழந்தையாக நின்றேன்