
மேல்சட்டையை கால்சட்டைக்குள் செருகி
பெல்ட் வைத்துக் கட்டி
ஒரு நாளை புத்தம் புதிதாக்கினேன்.
முகத்தின் கருங்காட்டை வழித்தெடுத்ததில்
நெகுநெகு வென்று திறந்தது ஒரு நாள்
சப்பென்றிருக்கும் நாளின் மீது
கொஞ்சம் உப்பையும், மிளகாய்பொடியையும்
தூவி விடுவேன்.
இப்போது இது ஒரு சுவையான வெள்ளரிப்பிஞ்சு
ஆனால் இன்றோடு பழசாகிவிட்ட இவற்றை
இன்னொரு நாளின் மீது கொட்ட முடியாது.
தியேட்டரில் போஸ்டர் மாற்றுவது
உற்சாக மூட்டுகிறதெனினும்,
இனி ஒரு மாததிற்கு அதே வெள்ளை சுமோ
அதே கண்ணிவெடிக்கு சிக்கி அதே உயரத்தில் தூக்கி வீசப்பட்டு
அதுபோலவே வெடித்து சிதறுமே.. கடவுளே..
பூட்ஸ் போட்டுக் கொள்கிறேன்
வழக்கத்திற்கு மாறாக ரயிலில் போகிறேன்
வழக்கத்திற்கு மாறாக பேருந்தில் போகிறேன்
அதிகாலையில் எழுந்து நடந்து போகிறேன்
ஒரு நாளில் மூன்று முறை குளிக்கிறேன்
வேம்பில் பல்துலக்கி
பன்னீரில் கொப்பளிக்கிறேன்.
எம்கேடி எத்தனை நாட்களைத் தான்
வெளுத்துத் தருவார்..
வாயில் ஊறும் இது,
இந்த நாளில் இருப்பத்தி மூன்றாவது கம்பர்கட்.
Comments