Skip to main content

Posts

Showing posts from February, 2014

இந்த போதைக்கு யாருமில்லை

   இந்த போதைக்கு யாருமில்லை   சிகரெட்டும், நீலப்படமும் அலுத்துப்போன இந்த போதைக்கு யாருமில்லை.    இந்த போதையின் டேபிளில் பரிமாறப்பட்ட கறி குஞ்சாகிப் பறந்து விட்டது.   இந்த போதைக்கு யாருமில்லை   இந்த போதை ஒரு செவிட்டு முண்டம்   அதனால் ஒரு வயலின் துண்டு   கூட   இல்லை.   இந்த போதை தன் அத்தனை கண்களையும் திறந்து பார்த்தும்   வானத்தில் நிலவு இல்லை   இந்த போதைக்கு யாருமில்லை இந்த போதைக்கு அவ்வளவு மோசமாக மரத்துவிட்டது ஆகவே கண்ணீர் சிந்த வழியில்லை. சென்ற போதைக்கு நாசூக்கு தெரியவில்லை எனவே இந்த போதையில் தோழிமார் உடன் இல்லை. இந்த போதைக்கு யாருமில்லை சிகரெட்டும், நீலப்படமும் , நண்பர்களும் அலுத்துப்போன இந்த போதைக்கு யாருமில்லை. இந்த போதையை எப்படித்தான் ஆவியாக்க அம்மே !

தேன்மொழிகளின் ஸ்கூட்டிகள்

இருளிலும் மஞ்சளொளி வீசும் அழகு அவள். ஆனால் காதலிக்கவெல்லாம் இல்லை. அப்பா கண்டுபிடித்து தந்தவன் இரண்டாம் நாளில் தீடீரென புகைபிடித்தான். ஒரு வாரம் கழித்து மதுநெடி கொண்டு வந்தான். மறுநாளே மது கொண்டு வந்தான் . வானத்தை நோக்கி உளறத்தொடங்கியவனின் மாத்திரை அட்டைகள்     ரகசிய இடத்திலிருந்து டேபிளுக்கு வந்தன . அவன் தேன்மொழியின் தலையை இழுத்துக்கொண்டு போய் சுவற்றில் மோத விட்டான் . ஒரு நாளில் தன்னையே தூக்கி கிணற்றுள் எறிந்தான் . சரியாக அவனுக்கு முப்பது முடியும் காலத்தில் கடவுள் ஸ்கூட்டிகளை சந்தையில் இறக்கி விட்டார் . அவள் ஒரு ஸ்கூட்டி வாங்கிக்கொண்டாள் . அது இல்லாத இடத்திலிருந்து இருக்கும் இடமெங்கும் அவளைக் கூட்டிப்போனது . அவள் ஈரத்தலையுடன் கண்ணாடி முன்னே நடனமாடத் துவங்கினாள் .