Tuesday, January 17, 2017

பரட்டைத்தலை அன்பு

                                           
 தெருமுக்கில் குந்தி 
பீடி வலிக்கும் பரட்டைத்தலை என் அன்பு
நீ பார்க்கும் போது
அது பீடியைக் கீழே எறிவதில்லை
நீ காணும் போது எறிய வேண்டும் 
என்பதற்காகவே
அதைப் பற்ற வைப்பதுமில்லை


ஒரு நிமிடம் முன்புதான்
அது ஒரு குருட்டுப்பிச்சைக்காரனுக்கு
சாலையைக் கடக்க உதவியது
அதற்குத் தெரியும் ஒரு நிமிடத்தில்
நீ வந்து விடுவாயென.
அதற்குத் தெரியாததோ
ஒரு நிமிடம் அவனைத் தாமதிக்க வைக்கும் லாவகம்


அது பீடியிலிருந்து சிகரெட்டுக்கு மாறும் முன்பே
கண்டு கண்டு சலூன் கண்ணாடிகளை உடைக்கும் முன்பே
கிளிப்பசையிலிருந்து  மென்கட்டச் சட்டைகளுக்கு மாறும் முன்பே
அதை கால்சட்டைக்குள் செருகி விட்டுக் கொள்ளும் முன்பே
கிச்சுக்குள் நறுமண தைலங்களை பூசிக்கொள்ளும் முன்பே
பிறவியிலிருந்தே சாய்ந்திருக்கும் நடையை வெட்டிச் சீராக்கும் முன்பே
அவசர அவசரமாக 
அதற்கு அன்பு வந்து விட்டது


நேர்த்தியற்ற அன்பு
உன்னை முத்தமிடுகிறது
அது இந்த உலகத்தில்
இது வரை யாராலும் இடப்படாத ஒரு முத்தம்
ஆனாலும் என்ன,
கடைவாயில் கொஞ்சமாக  சல்லொழுகி விட்டது
சல்லொழுக்கும் நேர்ந்தே  அதன் முத்தம்.


                                          நன்றி  : குங்குமம்  வாரஇதழ்

Wednesday, January 11, 2017

பெருமூச்சின் புயவலி


                                   

பொறாமை  கத்தியைத் தூக்கிக் கொண்டு
என்னோடு சண்டையிட  வந்தது.
நான் அதனோடு  நடனமிட்டேன்

அது வனமிருகத்தின்  வாயால்
அர்த்தமற்ற  சொற்களை  பீய்ச்சியடித்தது
நான் அதனுடன்
நிதானமாக உரையாடினேன்

அது  தன்  தலையால்
என் நெஞ்சை உடைக்க வந்தது
நான் சற்றே விலகிக் கொண்டேன்

என்  இதழ்க்கடை மலர்  கண்டு
அதன்  சித்தம் கலங்கி விட்டது


கடைசியில் 
ஒரு மல்லன் 
தன் புயவலியைக்  காட்டுவதைப் போலே,
பொறாமை 
சட்டையைக் கழற்றி  எறிந்து விட்டு 
அதன்  ஏக்கங்களைக்  காட்டிக் கொண்டு  நின்றது.
அது கண்டு
நான் காலொடு மண்டு விட்டேன்.

Monday, January 9, 2017

அநாதைகளின் அமரகாவியங்கள்


                                                 
        பாடகன் ஆகிவிட வேண்டுமென்பதுதான் என் லட்சியக் கனவாக இருந்தது. அப்துல்கலாம் அறிவுறுத்தியதற்கும் முன்பிருந்தே நான் அதைத்தான் கனவு கண்டு கொண்டிருந்தேன். பின்னாட்களில் எனக்கு எந்தக்குரலும் பொருந்தவில்லை என்பதைக் கண்டுகொண்டேன் என்றாலும், எஸ்.பி.பி குரல் எனக்குப் பொருந்தவில்லை என்பதை முன்பே அறிந்து கொண்டேன். எனவே எனக்கு முன்பு இளையராஜா என்றும், பின்பு சங்கர்மகாதேவன் என்றும் நினைப்பு. நான் பாடினால் எனக்கு மட்டும் இளையராஜா போன்றே கேட்டது. காதுக்குள் விதவிதமான கருவிகளை செருகிஎடுத்த போதும் இந்த நோயை குணமாக்க கூடவில்லை. எனினும் இந்நோய் உடலுக்கு பெரிதாக ஊறு செய்யவில்லை. மேலும் மனதிற்கு நேரும் இன்னல்களை விரட்டவும் இதுவே உதவியது. கொஞ்சம் முயன்றிருந்தால், கொஞ்சம் துணிந்திருந்தால் நானும் ஒரு நகலிசைக் கலைஞன்தான் என்பதை இன்றும் விடாது நம்புவதால், இந்நூல் எனக்கு என்னை ஒத்த ஜீவன்களின் கதைகளைப் பேசுகிறது.

  நானும் ஒன்றும் சாதாரண கலைஞனல்ல. எட்டாவது படிக்கும் போதே “ டவுசர் விறைக்க, கைகளைக் கட்டிக்கொண்டு “ இசைத்தமிழ் நீ செய்த அரும்சாதனை .. நீ இருக்கையிலே எனக்கேன் பெரும் சோதனை...என்று பாடி அரங்கையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய பெருங்கலைஞன். எனக்குத் தெரியும் பாடிவிட முடியாதென்று. ஆனால், தோற்றுப்போனாலும் டி.ஆர்.மகாலிங்கத்திடம் தோற்றுப் போக வேண்டும். அதுவன்றோ கலைத்தாயின் காலடியில் செலுத்தும் காணிக்கை? அதை விடுத்து எளிய எஸ்.பி.பி யின் எளிய பாடலொன்றைப் பாடி சின்ன டிபன்பாக்ஸை வெல்வதில் என்ன சாதனை இருக்கிறது ? அன்றிலிருந்து அந்தப் பாட்டு வாத்தியார் என்னை எங்கு பார்த்தாலும் ஒரு நமட்டுச் சிரிப்பு சிரிப்பார். என்னை வெறும் பாடகன் என்று மட்டும் சுருக்கி விட முடியாது. “ வாத்திய மாமணியும் கூட. அப்போது  அந்தப்பாட்டு வாத்தியாருக்கு  தபெலா வாசிக்க ஒரு மாணவன் தேவைப் பட்டான். ஏற்கனவே வாசித்துக் கொண்டிருந்த சுரேஷிற்கு நன்றாக படிக்க வேண்டியிருந்தது.வாழ்க்கையில் உயர வேண்டி இருந்தது. எராளமான லட்சியங்கள் பாக்கி இருந்தன. எனவே அவன் என்னை சிக்க வைத்து விட்டு நழுவி விட்டான். தபெலாவை விட்டு விட்டுக் கிளம்பியவன் அமெரிக்கா போய்தான் நின்றான். இன்றும் அவ்வப்போது எனக்கு குறுஞ்செய்திகள் அனுப்புவான். எனக்கு மட்டும் ஆசை இருக்காதா என்ன? இருந்தது.. ஆனால் தபெலாவின் வழியே, தபெலாவையும் தூக்கிக் கொண்டு அமெரிக்கா போனால் இன்னும் கொஞ்சம் இனிக்குமே என்று கொஞ்சம் யோசித்து விட்டேன். அப்போது கடவுள் வயிற்றைப் பிடித்துக் கொண்டு, கீழே விழுந்து விழுந்து சிரித்தது எனக்குக் கேட்கவில்லை. இப்படித்தான் ஒரு நகலிசைக் கலைஞனின் வாழ்வு தடம் மாறிப்போகிறது.

ப்யானோ கலைஞரும் கடுங் கோபக்காரருமான வசந்தன் சொல்கிறார்...
“ அந்த முண்டை “ம்க்கும்பா... அவங்காத்தா “ஏம்பா...மில்லுக்காவது போலாமில்லம்பா...எல்லா என் நேரம்... “
அந்த முண்டை யாரென்று புரிகிறதல்லவா?
“ ஒழுங்கா படிச்சு வேலைக்கு போயிருப்பேன்.. எல்லாம் இந்த தாயளினால வந்தது..என்று இளையராஜாவைக் காட்டி வசைபாடும் வசந்தன் கொஞ்ச நேரத்திற்குப் பின் “ ரியலி.. ஹீ இஸ் அன் ஏஞ்சல் ப்ரம்... “ என்று சொல்லிவிட்டு இரண்டு கைகளையும் தலைக்கு மேல் உயர்த்திக் காட்டுகிறார்.

  தனியார் வங்கி ஒன்றில் கடன்பாக்கி வசூலிப்பவராக ஜானை யோசித்துப் பார்க்கவே கொடூரமாக இருக்கிறது. ஒரு கட்டத்தில் அவர் துணிந்தார். வேலையைத் துறந்தார். பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை வந்து விட்டபோதிலும் இனி இசைதான் வாழ்க்கை. அதுதான் வழி . ஜானைப் போலவே நகலிசைக்கலைஞர்கள் பலரும் “ வேண்டுமானால் வெட்டிக்கொள்... “ என்று பலிபீடத்தில் தலைவைத்தவர்கள் தான்.

   நகலிசைக்கலைஞர்கள் ஒவ்வொரு முறையும் நேரடியாக ஒலிபரப்ப வேண்டியிருக்கிறது. உருளைக்கிழங்கோ போண்டாவையோ, எண்ணெய் பச்சியையோ தின்று விட்டு ஒவ்வொரு முறையும் ஒன்று போலவே முக்க வேண்டியிருக்கிறது. கொஞ்சம் பிசகினாலும் “கேலிப் பண்டம் “ ஆக்கி விடுவார்கள். திரைமேதைகளுக்கு இந்தச் சிக்கல் இல்லை. அவர்கள் தம் கட்ட அவசியம் இல்லை. தொழிற்நுடபம் வளர்ந்து விட்டது. ஒவ்வொரு வரியாகப் பாடிக் கூட சேர்த்துக் கொள்ளலாம். நான் சில நட்சத்திரப் பாடகர்களின் ‘லைவ் ஷோ “ க்களை பார்த்திருக்கிறேன். பார்த்திருக்க கூடாது என்று பிறகு எண்ணிக்கொண்டேன். சமீபத்தில் ராஜாவின் “ காதல் கசக்குதய்யா...பாடலை அவரது குடும்ப உறுப்பினர்கள் கூட்டாக சேர்ந்து பாடியதைக் கேட்டேன். எனக்கென்னவோ அந்நிகழ்ச்சி ராஜாவின் ஆயுளைக் குறிவைத்து நடத்தப்பட்ட நிகழ்ச்சியாகவே பட்டது. உறுதியாக என்னையும் சேர்த்து ஒரு பத்தாயிரம் பேராவது அந்தப் பாடலை அவர்களை விட பிரமாதமாகப் பாடுவார்கள் என்று தோன்றியது. பெரும்பான்மையாக நகலிசைக்கலைஞனின் லட்சியம் திரையிசையில் மின்னுவதுதான் . ஆனால் எல்லோராலும் அங்கு சென்று விட முடிவதில்லை. அதற்குத் தேவையான சகலமும் இருக்கின்ற போதிலும் அவனிடம் ஏதோ ஒன்று குறைந்து விடுகிறது. அது இசை தொடர்பானதாக இருக்கலாம். அப்படி இல்லாமலும் இருக்கலாம்.  ஆனால் அவர்கள் கலைஞர்கள்தான்.. சிலர் மகத்தான கலைஞர்கள்..அதிலொன்றும் சந்தேகமில்லை. மற்றபடி “நகலிசைக் கலைஞன் “ என்கிற விளிப்பு  அடையாளத்தின் நிமித்தம் வழங்கப்படும் ஒரு தொழிற்பெயர் ... அவ்வளவே.

   டி.எம்.எஸ்,  பி.சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி, பி.பி.ஸ்ரீனிவாஸ், வாணிஜெயராம் போன்றோரால் “ சிம்ஹம் “ என்று அழைக்கப்பட்ட , கீபோர்டு ப்ளேயர் ராமேட்டன் என்கிற ராமச்சந்திரனுக்கு ஒரு போதாத காலம் வந்துவிடுகிறது. ரூ.500 க்கு வாங்கிய செல்போனுக்கு பில் கட்ட இயலவில்லை.  கட்டச்சொல்லி அறிவுறுத்தும் ரெக்கார்டிங் அழைப்புகள் வந்து கொண்டே இருக்கின்றன. அவர் அதை எடுக்கவே இல்லை. தன் கண்ணாளனுக்கு என்னவோ சிக்கல்.. நாமே அதைத் தீர்த்து வைத்து விடலாம் என்று முடிவுசெய்த அவர் தர்மபத்தினி இந்த முறை போனை எடுத்து விடுகிறார்.

“ ஹல்யோ ஆரா ...
ஒரு பெண் குரலில் அறிவுறுத்தல்கள் துவங்குகின்றன.
“ அது அவருக்கு கச்சேரி இல்லம்மா...இரிந்நா அவுரு கெட்டிடும்..
மறுமுனையில் பெண் பேசிக்கொண்டே இருக்கிறாள்.
“ ஆ...செரிம்ம்மா...
“ ஆங்.. கெட்டிடும்...
“ என்னம்மா ந்நீ... இங்ஙன , ஞான் இத்தர ச்சொல்லிட்டும் அதையே சொன்னா எப்பிடியாக்கும்... கச்சேரி இல்லம்மா..இரிந்நா அவுரு கெட்டிடும்... “
பார்க்க பாவமாக இருக்க  கடைசியில் அது ரெக்காட்டிங் வாய்ஸ்...என்று சொல்லி தன் மனைவியை சாந்தப்படுத்துகிறார் ராமேட்டன். ஒரு நகைச்சுவை காட்சி போலவே சொல்லப்படிருக்கும்  இக்கட்டுரையில் துக்கத்தின் சாயலே இல்லை.
” .... இவ்வளவு நேரமும் பதில் சொல்லிக் கொண்டிருந்த சேச்சியின் முகம் போன போக்கைப் பார்த்து ஏட்டனுக்கு நிலைகொள்ளாத, முகம்கொள்ளாத சிரிப்பு. சேச்சிக்கும் ...”  இப்படி முடிந்து விடுகிறது கட்டுரை.

   பெருந்துக்கம், ஆறாத கண்ணீர், ஆழ்ந்த கசப்பு என்றெல்லாம் ஜான் அங்கு எதையும் எழுதி வைக்கவில்லை. அவ்வளவு தானா? அவ்வளவு தானா ? என்று நாம் தான் பதறுகிறோம். இவ்வளவுதான் சொல்வாயா இதை...? என்று அவர் சட்டையை பிடித்து உலுக்குகிறோம். அதில் அவர் மேல் பட்டன் தெரித்து விடுகிறது. அங்கு அக்கட்டுரை “ அமரகாவியம் “ ஆகிவிடுகிறது. இப்படி ஒன்றை எழுதிய ஜான், இன்னொரு இடத்தில் “ அந்தச் சிரிப்புக்கு உள்ளிருப்பது வலியன்றி வேறென்ன தோழர்களே ... “ என்று கட்டுரை வடிக்கத் துவங்கும் போதுதான்  நமக்கு சப்பென்று ஆகிறது.

 ஜான் தான் முதன்முதலாக பாடிய அனுபவத்தை முன்னுரையில் சொல்லி இருக்கிறார்.. அதிலிருந்து எனக்கு ஒரு ஞானம் கிட்டியது. அவர் முதன் முதலாக பாடிய பாடல் வருஷம் 16 படத்தில் இடம் பெற்ற  “ பழமுதிர்ச்சோலை உனக்காகத் தான் “ பாடல். ஜானின் பேரதிர்ஷம் அது ஒரு பறக்கும் ஹம்மிங்ஹோடு துவங்குகிறது.  ஜான் எழுதுகிறார்..
“ நடுங்கும் கால்களை உதறிக் கொண்டேன். “ வாழ்த்துக்கள் தம்பி ! “ என்று சொல்லி மைக்கை என் கையில் கொடுத்தார் சூரியண்ணன். ஓன்.. டூ.. த்ரீ.. ஃபோர்  சொல்ல, என் செட்டைகள் விரிந்தன.
“ ஏஹே ..ஓஹோ..  லாலலா..
இங்கு எனக்கு கிடைத்த ஞானமாவது எந்த மகத்தான வரியாலும் இந்த ஹம்மீங்கை பதிலீடு செய்திருக்க முடியாது என்பது. “ ஏஹே.. ஓஹோ.. லாலலா ... “ வின் விடுதலையை , ஆனந்தத்தை எந்த வரியிட்டு நிரப்ப முடியும். ஒரு இளைஞன் தன் முதல் பாடலின் முதல் வரியை அர்த்தமற்ற ஆனந்தப் பரவசத்தில் துவங்குவது எவ்வளவு பொருத்தமானது ?
                    உண்மையில் அமரகாவியங்களின் தொகைதான் நகலிசைக்கலைஞனின் வாழ்க்கை. ஆனால் கொண்டாடத்தான் நாதியில்லை. அதை கொண்டாடித் தீர்க்கத்தான் ஜான் இந்தப்புத்தகத்தை எழுதியிருக்கிறார்.  இந்நூல் மெச்சப்படுவதற்கான காரணங்களில் பிரதானமானது இதன் சுவாரஸ்யமான புனைவம்சம் என்றே நினைக்கிறேன். கதை சொல்வதில் பெருவிருப்பமுடைய ஜானின் எழுத்தில் கதைகள் இயல்பாகவே கலந்து விட்டிருக்கின்றன. 
தாள வாத்திய கலைஞர் ஒருவரைப் பற்றிய கதை ஒன்று உண்டு...
 “ டொக்... அதிர்ஷடம் பாருங்க.. யாருக்கு எந்த ரூபத்துல எந்த நேரத்துல எந்த வடிவத்தில வரும்னு சொல்ல முடியாதுங்க.. டொக்.. இது ஒருவருக்கு மட்டுமே கிடைக்கிற ஒருதலை ராகமில்லைங்க.. அனைவருக்கும் கிடைக்க கூடிய ஆபூர்வராகங்க.. ஆனந்தராகங்க.. டொக்.. ‘

“ டொக்.. பூட்டான்.. பூட்டான்.. உங்களைக் கைவிட மாட்டான்.. ராயல் பூட்டான்.. டொக்.. இமயமலை அடிவாரத்திலே பூத்துக் குலுங்கும் சின்னஞ்சிறு மாநிலம்ங்க..சிங்கார மாநிலம்ங்க..சிக்கிம் மாநிலம்.. பெரியோர்களே... சிக்கிம்...சிக்கிம்.. என்று கேட்டு வாங்குங்கள் நண்பர்களே... டொக்...

ஒவ்வொரு வாக்கியம் முடிந்த பின்னும் ஆட்டோவில் அந்த அறிவிப்பாளர் நாக்கை மேலண்ணத்தில் சப்புக்கொட்டுவது போலத் தட்டி “ டொக் “ ஒலிக்கச் செய்கிறார். அதைக் கேட்கும் போதெல்லாம் பரவசமாயிருக்கிறது ஸ்டீபனுக்கு..

 இப்படியாக தாளத்தால் ஈர்க்கப்படும் ஒரு சிறுவன் ஒருநாள் நிறைய தாளக்கருவிகள் புழங்கும் அறைக்குள் அழைக்கப்படுகிறான்.. அதாவது தனது கலைவாழ்வில் அடியெடுத்து வைக்கிறான்.. அந்த அறையில் பேங்கோஸ் வாசித்துக் கொண்டிருந்த அண்ணனொருவன்  வெளியே பரவசத்தில் நின்று கொண்டிருக்கும் சிறுவனைப் பார்த்து..
“ உள்ள வா தம்பி “ என்றழைக்கிறார்..
அங்கு ஜான் அந்த பழைய வசனத்தை திரும்ப எழுதிக்காட்டுகிறார்..
“ டொக்.. அதிர்ஷடம் பாருங்க.. யாருக்கு எந்த ரூபத்துல... எந்த நேரத்துல.. எந்த வடிவத்தில... வரும்னு சொல்ல முடியாது.. “
என் கையிலிருந்த பென்சில் அந்த வரிகளை  அழுத்தி அடிக்கோடிட்டது. பிறகு அதை சுற்றி வட்டமிட்டுக் கொண்டிருந்தது. பிறகு அதற்குப் பக்கத்தில் “ முக்கியக்குறி “ இட்டது. அந்தவரி அற்புதமானதுதான் என்றாலும் அற்புதம் “ என்று சொல்ல முடியாது. முகநூலின் சரளமான புழக்கத்துக்கு பின் அற்புதத்தில் ஒரு அற்புதமும் இல்லாமல் போய் விட்டது. அது பரஸ்பரம் சொல்லிக்கொள்ளும்  பாசாங்கான உபச்சார சொல்லாக மாறிவிட்டது. முகநூல் அற்புதத்தின் பிரகாசத்தை மங்கிய மினிபல்ப் ஆக்கிவிட்டது.

     "எண்பதுகளிலேயே  கேரளம், தமிழகத்து மேடைப் பாடகனுக்குக் “கட்-அவுட் “வைத்துக் “ கலைசெல்வன் நைட் “ என்று நிகழ்ச்சி நடத்தி கொண்டாடியிருக்கிறது. அதற்காக ஒட்டப்பட்ட தனது போஸ்டரின் மீதே அந்த மகாகலைஞன் போதையில் படுத்துக் கிடந்தான்...
 இது கலைச்செல்வன் என்கிற பாடகரின் கதை. அவருக்கு என்ன குறைந்தது? எதை நிரப்பிக்கொள்ள அவர் இவ்வளவு குடித்தார்? இதற்கான காரணம் எதையும் கட்டுரை சொல்லவில்லை. “ வெறும் பழக்கமாக “ கூட இருக்கலாம். அந்தக் காரணமே போதுமானதுதான். ஏனெனில் “பழக்கம் “ வேறெந்த துக்கத்திற்கும் குறைந்ததல்ல.

      ஒரு இடத்திற்கு அந்த மனிதன் போய்ச் சேருமுன்பே அவன் சாதி போய்ச் சேர்ந்து விடும் என்று சொல்லப்படுவதுண்டு. கலைச்செல்வன் நமது சாதி அடுக்கில் ஆகக் கீழே கிடக்கும் “ அருந்ததியர் “ இனத்தை சேர்ந்தவராக இருந்திருக்கிறார். ஆனாலும் கொண்டாடப்பட்டிருக்கிறார். கலை இழிவுகளை கடக்கவல்லது என்பதை நாமும் நம்புவோம்.

               சிவாஜிக்கு கட்-அவுட் வைக்கலாம். லாட்டரிசீட்டு வீசலாம். தோரணங்கள் கட்டலாம். அவர் பெயரில் நீர்மோர் ஊற்றவோ, நிழற்குடை அமைக்கவோ செய்யலாம். மகனுக்கு எஸ்பி செளத்ரி என்று கூட பெயரிட்டுக் கொள்ளலாம். அதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். அதை விடுத்து “ நானும் சிவாஜி தான் “ என்று கிளம்பும் போதுதான் சகல கேடுகளும் கூடவே கிளம்புகின்றன. ஆனால் சிவாஜிகளால் எப்படி சும்மா இருக்க முடியும் ? சிலருக்காவது ஓரிரு வருடங்களில் தான் சிவாஜி இல்லை “ கருப்பணன் ‘ தான் என்று தெரிந்து விடுகிறது. சிலரோ மரணப்படுக்கையிலும் சிவாஜியைப் போலவே முனகிய படி அவரைப் போலவே இரும முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். கலையின் அழைப்பு அவ்வளவு வசீகரமானது. புறந்தள்ள இயலாதது. தன்னை கலைஞன் என்று கருத்திக் கொள்பவனை நோக்கி அது ஒரு சிறுமுறுவல் பூத்துவிட்டு போய் விடுகிறது. அந்த சின்னஞ்சிறு முறுவலுக்கு அவன் தன் வாழ்வையே பணயம் வைக்கிறான்.

  ஜானுக்குள் ஒரு துடுக்குத்தனமான சிறுவன் இருக்கிறான். “ அவர் சாதாரணமானவரல்ல...ஸ்பெஷல்ரணமானவர் “ போன்ற வரிகளை அந்தப் பையன்தான் எழுதுகிறான். உணர்வு பெருக்கொடு எழுதப்பட்டிருக்கும் கடைசி கட்டுரைக்கு “ திம்ஸூ “ என்று பொறுப்பற்று தலைப்பிட்டிருப்பதும் அந்தப் பையனின் சேட்டைகளில் ஒன்றுதான். ஜான் அந்தப்பையனிடம் கவனமாக இருக்க வேண்டும்.தனக்குத்தானே சிரித்துக்கொள்ளும் சில அற்பநகைச்சுவைகளிடமும்.

                          நன்றி : காலச்சுவடு - ஜனவரி 2017

     நகலிசைக்கலைஞன் - ஜான்சுந்தர்- காலச்சுவடு பதிப்பகம்

Saturday, January 7, 2017

“ என்ன அப்பிடி பாக்காதீங்க சத்யன் ... “

                                                   
           
                                                    
          
இளங்கோ தான் ஒரு முறை சொன்னான்..

“ தேவலோகத்துல எதோ ஒரு சின்னத்தப்பு பண்ணுனதுக்காக பூமியில  மனுசனா பொறந்துட்ட ஒரு ஆள் மாதிரியே இருக்கு அவர் எழுத்து ... “  “சின்ன “ என்பதை அவ்வளவு அழகாக அழுத்திச் சொன்னான். கல்யாண்ஜியை பார்த்துவிட்டு வந்து பிறகு அவனிடன் சொன்னேன்.
“ நண்பா அந்தாளுகிட்ட கொஞ்சம் ஜாக்கிரையாத்தான் இருக்கனும் போல.. அவர் என்னை சத்யன் ன்னு கூப்டறார்டா.. “ ஏதோ ஒரு மந்திரவாதியைப் பற்றிய கதைகளைப் போல அவரைப் பற்றிப் பேசிக்கொண்டோம்.  என் அம்மா, அப்பா இருவரைத் தவிர  வேறு யாரும் என்னை சத்யன் என்று  அழைத்ததில்லை. இப்படியாக முதல் சந்திப்பிலேயே அவர் என்னை ’’திட்டமிட்டு உருக்கிவிட்டார்.
    
  என்னை நானே உற்சாகமாக்கிக் கொள்வதற்காக வெளியிட்ட என் முதல் தொகுப்பை யாரும் அதிகமாக பார்த்திருக்க வாய்ப்பில்லை. இளங்கோ, சுகுமாரன் இருவர் வீட்டில் மட்டும் அது இன்னமும் இருக்கலாம் என்று நினைக்கிறேன். ஒரு வேளை கல்யாண்ஜி வீட்டிலும் அது இருக்கலாம். அப்போது அவரது நிலா பார்த்தல், வண்ணதாசன் கடிதங்கள் ஆகிய புத்தகங்களால் வசீகரிக்கப்ட்டிருந்தேன். புத்தகத்தோடு ஒரு கடிதமும் எழுதி இருந்தேன். அது அவரது மொழியிலேயே இருக்க வேண்டும் என்பதற்காக ரொம்ப பிரயத்தனப் பட்டது இப்போது நினைவுக்கு வருகிறது.

  சிறுவயதிலிருந்தே எனக்கு வயசுக்கு மீறிய சகவாசம் தான் வாய்த்திருக்கிறது. டவுசரோடு லுங்கி கட்டிய அண்ணன்களோடு அலைந்தது தான் என் பால்யத்தின் சித்திரம். அது இன்று வரை தொடர்கிறது. வண்ணதாசனின் கரங்களைப் பற்றிக்கொள்ளும் தருணத்திற்காக காத்திருக்கும் பலரையும் நான் அறிவேன். அப்படியிருக்க அவரோடு “ எல்லாம் “ செய்திருக்கிறேன் என்பதில் எனக்கு மகிழ்ச்சியும் பெருமிதமும் உண்டு. சில நேரம் அவர் தனி அறையில் இருப்பார். சில இரவுகளில் எங்கள் கூடவும் இருந்திருக்கிறார். அவருடன் இருந்த ராத்திரிகள் மகிழ்ச்சியானவை. கூடவே கண்ணீர்க்கும் குறைவில்லாதவை. ஒரு ராத்திரியில் அறையில் இருந்த எல்லாரும் அழுதோம். இதுதான் சாக்கு என்பது போல ... அவர் முன்னால் தான் கொட்ட வேண்டும் என்பதற்காகவே அத்தனை கண்ணீரையும் சேர்த்து வைத்திருந்தது போல. அநேகமாக எல்லாரும் அவர் மடியில் விழுந்தார்கள். இந்தக் கயவனுமா .. ? என்பது சரியாக நினைவில்லை. காலையில் ஒருவரை ஒருவர் வெட்கத்தோடு பார்த்துக்கொண்டோம். “என்னய்யா இது...எழவு வீடு மாதிரி ..என்கிற கேலிக்கு பின் தான் இயல்பு நிலைக்கு திரும்ப முடிந்தது.
  அவரது அந்தரங்க சினேகிதர் சாம்ராஜ் மூலமாகத்தான் அவரோடு நேரடி அறிமுகம் கிடைத்தது. அவர் எழுத வந்து 50 ஆண்டுகள் ஆவதை கொண்டாடும் விதமாக மதுரையில் “ வண்ணதாசன் 50 “ என்கிற நிகழ்ச்சி நடந்தது. அப்போதுதான் அவரை முதன்முதலாகப் பார்க்கிறேன். எனது சிவாஜி கணேசனின் முத்தங்கள்தொகுப்பு அவருக்கு வெகுவாகப் பிடித்திருந்தது என்பதை சாம் மூலம் அறிந்திருந்தேன். நிகழ்ச்சி முடிந்ததும் அவரை வாசகர்கள் சூழ்ந்து கொண்டார்கள். அவர் எல்லோருக்கும் கையொப்பம் இட்டுக் கொடுத்துக் கொண்டிருந்தார். நான் ஒரு ஓரமாக நின்று அவரைக் கவனித்துக் கொண்டிருந்தேன். ஒரு சின்ன இடைவெளியில் என்னைப் பார்த்து “ என்ன அப்பிடி பாக்காதீங்க சத்யன்..எனக்கு வெட்கமா இருக்கு .. “ என்றார். நான் நடுங்கிப் போனேன். தனிமையில் ஒரு எழுத்தாளனால் இன்னொரு எழுத்தாளைப் பார்த்து இப்படி சொல்லி விட முடியும் தான். அவரது ரசிகர்கள் புடை சூழ நின்று கொண்டிருக்கும் ஒரு தருணத்தில் அப்போது தான் எழுதத் துவங்கியிருக்கும் ஒரு சிறுவனைப் பார்த்து எப்படி ஒரு மனிதனால் இப்படி சொல்ல முடிந்தது என்பதை இன்று வரை யோசித்துக் கொண்டிருக்கிறேன். எனக்கு பிறகு எழுத வந்த இளைஞர்கள் எத்தனை பேரிடம் நான் உரையாடுகிறேன் என்பதை நினைத்துப் பார்க்கிறேன். “எத்தனை ஏணி வச்சா நீ கல்யாண்ஜி ஆவ.. “ என்று எனக்கு நானே கேட்டுக் கொள்கிறேன்.

   “இன்னைக்கு ஒரு மகத்தான தூக்கம் தூக்கினேன் ... “ என்று சாம் ஒரு முறை சொன்னார்..
அதென்ன தோழர் தூக்கத்துல ஒரு மகத்தான தூக்கம் ? என்று சீண்டினேன் .

 “ திருவனந்தபுரம் போயிட்டு அப்படியே வண்ணதாசன் சார் வீட்டுக்கு போயிருந்தேன்.. போய் சாப்பிட்டு படுத்தவன்தான் என்ன நடந்ததுன்னே தெரியல.. அப்படி ஒரு தூக்கம்.. மதியம் எழுந்து சாப்பிட்டு விட்டு மறுபடியும் தூக்கம்.. என் வாழ்க்கைலயே நான் இப்படி தூங்கியது அரிது தோழர்.. ஒரு வேளை நமக்கு ப்ரியமானவங்க பக்கதிலிருந்தா, அவர்கள் பாதுகாப்பில் இருக்கிறோம் என்கிற நினைப்பிருந்தா ,  இப்படி தூக்கம் வரும் போல..” 
  மகத்தான மனிதர்களால் மகத்தான காரியங்களை மட்டுமல்ல மகத்தான தூக்கத்தையும் அருள முடிகிறது.

      கல்யாண்ஜியின் பல கவிதைகள் எனக்குப் பிடித்தமானவை. சில கவிதைகளின் வரிகள் அவ்வப்போது தீடீரென நினைவில் தோன்றுவதும் உண்டு.  “ முடிதிருத்துகிற ஒரு தெய்வம் / செவ்வாய்க் கிழமை ஓய்வெடுத்துக் கொள்கிறது “ என்கிற வரி சமீபநாட்களாக அடிக்கடி நினைவில் வருகிறது. எங்கள் ஊரில் என் தலைமுறைப் பிள்ளைகள் எல்லோரும் சலூனிலேயே வளர்ந்தோம் என்பது ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால் அவர் கவிதைளில் எனக்கு சில போதாமைகள் உண்டு. அதாவது அந்தக் கவிதை என்ன சொல்ல வருகிறதோ அதை ஒரு கட்டுரையின் முடிவுரையைப் போல சுருக்கி கடைசி இரண்டு வரிகளில் சொல்வார். எல்லா கவிதைகளிலுமல்ல சில கவிதைகளில் இப்படி நிழந்திருக்கிறது.  இது ஒரு தொழிற்நுட்ப குறைபாடு என்பதை அவர் இருந்த மேடையிலேயே வெளிப்படையாக சொல்லி இருக்கிறேன்.ஆனாலும் எங்களுக்கிடையில் இது வரை எதுவும் அறுந்து விடவில்லை. சமீபத்தில் அவர் அனுப்பிய குறுஞ்செய்தி ஒன்று “ ஆட்டுதி அமுதே “ இரண்டு பிரதிகள் வாங்கியிருப்பதாகச் சொன்னது.

           அவர் சமீபத்தில் எழுத வந்த ஒருவரின் எழுத்துக்களை கூட அக்கறையுடன் வாசிக்கிறார்.  விஷால் ராஜா எழுதிய ஒரு கட்டுரையை வாசித்து விட்டு அவன்  உள்பெட்டிக்கு சென்று வாழ்த்துகிறார். என் கவிதையின் சாயைகள் விழத் துவங்கியிருந்த ஒரு கவிஞரிடம் “ அவன் வண்டில நீங்க ஏன் ஏறறீங்க..என்று எச்சரிக்கிறார்.

 “ நீங்கள் கேட்டவை “ படத்தில் ‘கனவு காணும் வாழ்க்கை யாவும் ‘பாடலில் ஒரு காட்சி வரும் ஒரு டிரைவர் தன் கார்  ஜன்னலுக்கு வெளியே கால்களை நீட்டியவாறு  தூங்கிக் கொண்டிருப்பார். கேமரா வெளியே நீண்டிருக்கும் அந்த கனுக்கால் பாதத்தை மட்டும் அழகாக காட்டிச்செல்லும். நண்பர் ஜான் இந்தக் காட்சியை பார்த்த பிறகு தான் பாலுமகேந்திராவின் தீவிர ரசிகராகி விட்டதாக ஒரு முறை சொன்னார். வண்ணதாசனின் “ மிச்சம் “ கதையை வாசித்து விட்டு ஜானை அழைத்துச் சொன்னேன்..
“ ஜான்.. உங்க டைரக்டருக்கு முன்னாலேயே  வண்ணதாசன் அந்த சீன எழுதிட்டாரு ஜான்.. நாம தான் அதைப் படிக்கல.. “

  நான் கதைகளை வாசிக்கத் துவங்கிய பருவத்தை எண்ணிப் பார்க்கிறேன். ஊழ்வினை உறுத்து வந்து ஊட்ட நான் வாசித்த எல்லாக் கதைகளிலுமே ஒரு சூரியோதயமோ, அஸ்தமனமோ இருந்தது. கதாசிரியன் அதை உருகி உருகி சொல்லி இருந்தான். எப்போதாவது அண்ணாந்து கொட்டாவி விடுகையில் கண்ணுக்கு சிக்கினால் உண்டு. மற்றபடி அது பாட்டுக்கு அது இருக்கிறது. நான் பாட்டுக்கு நான் இருக்கிறேன். கன்னியாகுமரியில் எல்லோரும் பார்க்கிறார்களே என்று கூட சேர்ந்து வேடிக்கை பார்த்ததை விட்டு விட்டால் நம் வாழ்வில் நாம் எப்போது சூரியனை நின்று பார்த்தோம் என்று தோன்றியது. எரிச்சல் பற்றிக்கொண்டு வந்தது. சில கதைகளில் வர்ணனைகள் ஒரு பக்க அளவுக்கு கூட நீண்டிருந்தன.  “ நீ களஞ்சியத்தையே கையளிப்பதாக இருந்தாலும் அது எனக்கு வேண்டாம்... “ என்று அந்தப் புத்தகங்களை தூர எறிந்திருக்கிறேன். சித்தரிப்புகளின் மேல் இவ்வளவு வெறுப்புடைய ஒருவனுக்கு வண்ணதாசன் கதைகள்  எரிச்சலைத்தான் அளித்திருக்கும் என்பதைத் தனியே சொல்ல வேண்டியதில்லை.

  எல்லோரும் சிலாகித்துச் சொன்ன அவருடைய தனுமை”  கதையை வாசித்து விட்டு “ இப்ப என்னய்யா பிரச்சனை... அந்த டீச்சரு இவன லவ் பண்றா.. இவன் வேரொருத்திய லவ் பண்றான்.. அந்தப் பொண்ணுக்கு கொஞ்சம் கால் வராது.. அவ்வளவு தான மேட்டரு..என்று தான் தோன்றியது.

  வண்ணதாசன் கதைகள் போய்ச் சேரும் இடத்தில் அல்ல, போகும் வழியில் இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள இந்த அவசரக்குடுக்கைக்கு கொஞ்சம் காலம் பிடித்தது. அவர் கதைகளுக்குள் நான் பெரிய பெரிய விஷயங்களை, பெரிய பெரிய சிக்கல்களை எதிர்பார்த்து ஏமாந்து போனேன். அவர் சின்ன விஷயங்களின் மனிதன் என்பதை காலம் தாழ்ந்தே அறிந்து கொண்டேன். சின்ன விஷயங்கள் உண்மையில் அவ்வளவு சின்ன விஷயங்கள் அல்ல என்பதையும்.

   “ தனுமைகதையை நாம் முடிவை நோக்கி வேகமாக வாசித்து விட்டுப் போகையில் , ஞானப்பன்  “ தட்டுங்கள் திறக்கப்படும் “ என்று பாட ,  அது அநாதை விடுதிச் சிறுவர்களுக்கு “ இந்த நல் உணவை நமக்குத் தந்த நம் இறைவனை வணங்குவோம் “ என்பதாக கேட்கிற பிரமாதமான கதையை இழந்து விடுகிறோம் என்று தோன்றுகிறது. அநாதைகளை மேலும் அநாதையாக்குகிற பாடல் என்று இதை எழுதிச்செல்கிறார் வண்ணதாசன். அவரின் கதைகளுக்குள் இது போல பல உப கதைகள் காணக் கிடைக்கின்றன. சில கதைகளில் உபகதைகள் கதையை காட்டிலும் அழகில் விஞ்சி நிற்கின்றன. ஓர் உல்லாசப் பயணம் “ கதையில் உல்லாசப் பயணம் போக வாய்க்காத சிறுவன் தோணித் தண்ணியை குற்றாலம் என்று சொல்லி குளித்துக்களிப்பதைக் காட்டிலும், அவன் அப்பா  பயணத் திட்டம்  குறித்த நோட்டீசைப் படித்து விட்டு  தன் இயலாமையின் கரிப்போடு “  என்ன தாமரைப்பூ வரையுதியா “ என்று பேச்சை மாற்றும் இடம் எனக்கு அவ்வளவு பிடித்திருந்தது. புத்தகத்தை மூடி வைத்து விட்டு  வெகுநேரம் மோட்டுவளையை வெறித்துக் கொண்டிருந்தேன்.

  அவர் கதைகளின் பலகீனமாக சொல்லப்படும் சித்தரிப்புகளின் வழியேதான் அவர் நல்ல கதைகள் பலதையும் எழுதிக்காட்டி இருக்கிறார். ஆனால் எல்லாக் கதையிலும் இந்தச் சித்தரிப்பு அவருக்கு உதவியிருக்கிறது என்பதை என்னால் நம்ப இயலவில்லை. “ சபலம் “ கதையில் ஒரு வாத்தியார் ஒரு மாணவனைப் அடிப்பதற்காக பிரம்பை தேடி மேஜை ட்ராயரை இழுக்கிறார்.. பிரம்பு எங்கோ ஒளிந்து கொண்டிருக்கிறது.. நானாக இருந்திருந்தால்  “ உள்ளே கண்டதும் கடியதும் கிடந்தது.. அதனூடே பிரம்பு எங்கோ ஒளிந்து கொண்டிருந்தது என்று எழுதியிருப்பேன்.. ஏனெனில் நாம் பிரம்பைத் தேடுகையில் பிரம்பைத் தவிர மற்றதெல்லாம் நமக்கு கண்டதும் கடியதும் தானே ? ஆனால் வண்ணதாசன் ஒரு ஓவியர் . அவருக்கு கித்தானின் ஒவ்வொரு அனுவிலும் வரைய வேண்டியிருக்கிறது. அவர் அந்த மேஜைக்குள் என்னென்ன இருந்தன என்று ஒவ்வொரு பொருளாக சொல்லிச் செல்கிறார். இது வண்ணதாசன் கதை. இது இப்படித் தான் இருக்கும். இது அவர் வண்ணம். அவர் ஓவியம்.

  அவரது கவிதை ஒன்று நினைவுக்கு வருகிறது. ஒரு மனிதன் ஒரு வீட்டுக் கதவின் முன் காத்து நிற்கிறான்..அவன் ஒரு பொருளை அங்கு ஒப்படைக்க வேண்டும். மின்தடையால் அழைப்பு மணி இயங்கவில்லை. கதவு திறக்க கால தாமதமாகிறது. அந்தக் காத்திருப்புக் காலத்தில் அவன் எதை எதைப் பார்க்கிறான் என்று சொல்வார்...
பூட்டிய கதவில் ஒரு சிலந்தி மனிதனின் ஒட்டுப்படம் / அங்கிருந்த முட்டைத் தோடை விட்டு / நெடுந்தூரம் வந்திராத ஒரு குட்டிப்பல்லி இடம் மாறியது/ வேறொரு கண்டத்திற்கு பறப்பது போலத் தாவியதில் அது எங்கு விழுந்ததோ ? பின்வாங்கியதில் என் மேல் உரசியது /காட்டமான வாசனையுடன் அரளிக்கொத்து / இதுவரை பார்க்காத ஒரு துருவேறிய நிறத்தில் ஏழெட்டுக் காளான்கள் வரிசையாய் / உபரியாக ஒரு தேரைத் துள்ளலும் /  தரைச்சக்கரம் போல் சுருண்ட வளையல் பூச்சியும்.
இவ்வளவையும் அவன் பார்க்கிறான். அந்தக் கவிதை இப்படி முடிகிறது
 “ ரொம்ப நேரமாக நிற்கிறீர்களா ? / கதவைத் திறந்த கைவளையல்கள்
   கனிவுடன் சரிந்தன மணிக்கட்டின் மெலிவில் / சொல்லவில்லை நான் ,
   இத்தனையும் பார்க்க  / நின்றால்தான் என்ன / எத்தனை நேரமும் என்று.

நான் அந்த வளைக்கரத்தின் மணிக்கட்டு மெலிவைத் தவிர இதில் வேறு எதையாவது பார்த்திருப்பேனா என்பது சந்தேகம்தான். ஆனால் அவருக்கு ஆயிரம் கண்கள். அத்தனையும் பார்க்க வேண்டும் அவருக்கு.

  தற்போது அவருக்கு விஷ்ணுபுரம் விருது, சாகித்ய அகாடமி விருது என இரண்டு முக்கியமான விருதுகள் அடுத்தடுத்து அறிவிக்கப்பட்டுள்ளன. இலக்கிய உலகம் முழுக்க அதை கொண்டாடிக் களிக்கிறது. முகநூலில் அவரது புகைப்படங்கள கொட்டித் தீர்க்கப்படுகின்றன. எல்லோரும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய வண்ணம் இருக்கிறார்கள். எனக்கு உறுதியாகத் தெரியும் அவை போலியான மகிழ்ச்சிகள் அல்ல. உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுபவை அல்ல. அந்த மனிதர் எத்தனை மனங்களை அவ்வளவு அந்தரங்கமாகத் தொட்டிருக்கிறார் என்பதற்கான சான்றுகள் இவை.

   “ அவர் நடிக்கிறார்.. என்று சிலர் என் காது படவே சொல்லியிருக்கிறார்கள். நான் அவர்களிடம் சொல்லிக்கொள்வது இது தான்... “ அவர் எவ்வளவு பெரிய நடிகராக இருந்திருந்தால் அவரால் இத்தனை மனங்களை வெல்ல முடிந்திருக்கும்.. உங்களால் முடிந்தால் நீங்களும் நடியுங்கள்... நானும் நடிக்கிறேன்.. இவரும் நடிக்கட்டும்.. அவரும் நடிக்கட்டும்.. உலகம் அன்பின் நடிப்பில் புரளட்டும்.
            


                                                  

                                                            நன்றி : உயிர்மை – ஜனவரி 2017

Monday, January 2, 2017

போலீஸ் வதனம்


                           நான்குமுனைச் சந்திப்பொன்றில்
ஒரு போலீஷ்காரரும் ஒரு குடியானவனும்
கிட்டத்தட்ட மோதிக் கொண்டனர்.
குடியானவன் வெலவெலத்துப் போனான்
கண்டோர் திகைத்து நின்றனர்
அடுத்த கணம் அறைவிழும் சத்தத்திற்காய்
எல்லோரும் காத்திருக்க
அதிகாரி குடியானவனை நேர்நோக்கி
ஒரு சிரி சிரித்தார்.
அப்போது வானத்தில் தேவர்கள் ஒன்று கூடும் ஓசை கேட்டது.
“ நகையணி வதனத்து ஒளிநறுங்கீற்றே ! “
 என  வாழ்த்தியது வானொலி.
 போலீஸ் தன் சுடரை
 ஒரு கந்துவட்டிக்காரனிடன் பற்ற வைத்து விட்டுப்போனார்.
 அவன்
ரோட்டோரம் கிடந்து பழம் விற்கும் கிழவியிடம் கந்து வசூலிக்க வந்தவன்.
கிழவி தலையைச் சொரிந்த படியே
“ நாளைக்கு... “ என்றாள்.
 ஒரு எழுத்து கூட ஏசாமல் தன்  ஜொலிப்பை
அவளிடம் ஏற்றிவிட்டுப் போனான் அவன்.
அதில் பிரகாசித்துப் போன கிழவி
இரண்டு குட்டி ஆரஞ்சுகளை சேர்த்துப் போட்டாள்.
அது ஒரு குப்பைக்காரியின் முந்தானையில் விழுந்தது.
எப்போதாவது ஆரஞ்சு தின்னும் அவளை
ஒரு பிச்சைக்காரச் சிறுமி வழிமறிக்க
அதிலொன்றை  ஈந்து விட்டுப் போனாள்.
சிறுமியின் காலடியில்
நாய்க்குட்டியொன்று வாலாட்டி மன்றாடியது.
அதிலொரு சுளையை எடுத்து
அவள் அதன் முன்னே எறிய
சொறிநாய்க் குட்டி
அந்த "ஒளிநறுங்கீற்றை“ லபக்கென்று  விழுங்கியது.

                             நன்றி : ஆனந்தவிகடன்