Saturday, January 7, 2017

“ என்ன அப்பிடி பாக்காதீங்க சத்யன் ... “

                                                   
           
                                                    
          
இளங்கோ தான் ஒரு முறை சொன்னான்..

“ தேவலோகத்துல எதோ ஒரு சின்னத்தப்பு பண்ணுனதுக்காக பூமியில  மனுசனா பொறந்துட்ட ஒரு ஆள் மாதிரியே இருக்கு அவர் எழுத்து ... “  “சின்ன “ என்பதை அவ்வளவு அழகாக அழுத்திச் சொன்னான். கல்யாண்ஜியை பார்த்துவிட்டு வந்து பிறகு அவனிடன் சொன்னேன்.
“ நண்பா அந்தாளுகிட்ட கொஞ்சம் ஜாக்கிரையாத்தான் இருக்கனும் போல.. அவர் என்னை சத்யன் ன்னு கூப்டறார்டா.. “ ஏதோ ஒரு மந்திரவாதியைப் பற்றிய கதைகளைப் போல அவரைப் பற்றிப் பேசிக்கொண்டோம்.  என் அம்மா, அப்பா இருவரைத் தவிர  வேறு யாரும் என்னை சத்யன் என்று  அழைத்ததில்லை. இப்படியாக முதல் சந்திப்பிலேயே அவர் என்னை ’’திட்டமிட்டு உருக்கிவிட்டார்.
    
  என்னை நானே உற்சாகமாக்கிக் கொள்வதற்காக வெளியிட்ட என் முதல் தொகுப்பை யாரும் அதிகமாக பார்த்திருக்க வாய்ப்பில்லை. இளங்கோ, சுகுமாரன் இருவர் வீட்டில் மட்டும் அது இன்னமும் இருக்கலாம் என்று நினைக்கிறேன். ஒரு வேளை கல்யாண்ஜி வீட்டிலும் அது இருக்கலாம். அப்போது அவரது நிலா பார்த்தல், வண்ணதாசன் கடிதங்கள் ஆகிய புத்தகங்களால் வசீகரிக்கப்ட்டிருந்தேன். புத்தகத்தோடு ஒரு கடிதமும் எழுதி இருந்தேன். அது அவரது மொழியிலேயே இருக்க வேண்டும் என்பதற்காக ரொம்ப பிரயத்தனப் பட்டது இப்போது நினைவுக்கு வருகிறது.

  சிறுவயதிலிருந்தே எனக்கு வயசுக்கு மீறிய சகவாசம் தான் வாய்த்திருக்கிறது. டவுசரோடு லுங்கி கட்டிய அண்ணன்களோடு அலைந்தது தான் என் பால்யத்தின் சித்திரம். அது இன்று வரை தொடர்கிறது. வண்ணதாசனின் கரங்களைப் பற்றிக்கொள்ளும் தருணத்திற்காக காத்திருக்கும் பலரையும் நான் அறிவேன். அப்படியிருக்க அவரோடு “ எல்லாம் “ செய்திருக்கிறேன் என்பதில் எனக்கு மகிழ்ச்சியும் பெருமிதமும் உண்டு. சில நேரம் அவர் தனி அறையில் இருப்பார். சில இரவுகளில் எங்கள் கூடவும் இருந்திருக்கிறார். அவருடன் இருந்த ராத்திரிகள் மகிழ்ச்சியானவை. கூடவே கண்ணீர்க்கும் குறைவில்லாதவை. ஒரு ராத்திரியில் அறையில் இருந்த எல்லாரும் அழுதோம். இதுதான் சாக்கு என்பது போல ... அவர் முன்னால் தான் கொட்ட வேண்டும் என்பதற்காகவே அத்தனை கண்ணீரையும் சேர்த்து வைத்திருந்தது போல. அநேகமாக எல்லாரும் அவர் மடியில் விழுந்தார்கள். இந்தக் கயவனுமா .. ? என்பது சரியாக நினைவில்லை. காலையில் ஒருவரை ஒருவர் வெட்கத்தோடு பார்த்துக்கொண்டோம். “என்னய்யா இது...எழவு வீடு மாதிரி ..என்கிற கேலிக்கு பின் தான் இயல்பு நிலைக்கு திரும்ப முடிந்தது.
  அவரது அந்தரங்க சினேகிதர் சாம்ராஜ் மூலமாகத்தான் அவரோடு நேரடி அறிமுகம் கிடைத்தது. அவர் எழுத வந்து 50 ஆண்டுகள் ஆவதை கொண்டாடும் விதமாக மதுரையில் “ வண்ணதாசன் 50 “ என்கிற நிகழ்ச்சி நடந்தது. அப்போதுதான் அவரை முதன்முதலாகப் பார்க்கிறேன். எனது சிவாஜி கணேசனின் முத்தங்கள்தொகுப்பு அவருக்கு வெகுவாகப் பிடித்திருந்தது என்பதை சாம் மூலம் அறிந்திருந்தேன். நிகழ்ச்சி முடிந்ததும் அவரை வாசகர்கள் சூழ்ந்து கொண்டார்கள். அவர் எல்லோருக்கும் கையொப்பம் இட்டுக் கொடுத்துக் கொண்டிருந்தார். நான் ஒரு ஓரமாக நின்று அவரைக் கவனித்துக் கொண்டிருந்தேன். ஒரு சின்ன இடைவெளியில் என்னைப் பார்த்து “ என்ன அப்பிடி பாக்காதீங்க சத்யன்..எனக்கு வெட்கமா இருக்கு .. “ என்றார். நான் நடுங்கிப் போனேன். தனிமையில் ஒரு எழுத்தாளனால் இன்னொரு எழுத்தாளைப் பார்த்து இப்படி சொல்லி விட முடியும் தான். அவரது ரசிகர்கள் புடை சூழ நின்று கொண்டிருக்கும் ஒரு தருணத்தில் அப்போது தான் எழுதத் துவங்கியிருக்கும் ஒரு சிறுவனைப் பார்த்து எப்படி ஒரு மனிதனால் இப்படி சொல்ல முடிந்தது என்பதை இன்று வரை யோசித்துக் கொண்டிருக்கிறேன். எனக்கு பிறகு எழுத வந்த இளைஞர்கள் எத்தனை பேரிடம் நான் உரையாடுகிறேன் என்பதை நினைத்துப் பார்க்கிறேன். “எத்தனை ஏணி வச்சா நீ கல்யாண்ஜி ஆவ.. “ என்று எனக்கு நானே கேட்டுக் கொள்கிறேன்.

   “இன்னைக்கு ஒரு மகத்தான தூக்கம் தூக்கினேன் ... “ என்று சாம் ஒரு முறை சொன்னார்..
அதென்ன தோழர் தூக்கத்துல ஒரு மகத்தான தூக்கம் ? என்று சீண்டினேன் .

 “ திருவனந்தபுரம் போயிட்டு அப்படியே வண்ணதாசன் சார் வீட்டுக்கு போயிருந்தேன்.. போய் சாப்பிட்டு படுத்தவன்தான் என்ன நடந்ததுன்னே தெரியல.. அப்படி ஒரு தூக்கம்.. மதியம் எழுந்து சாப்பிட்டு விட்டு மறுபடியும் தூக்கம்.. என் வாழ்க்கைலயே நான் இப்படி தூங்கியது அரிது தோழர்.. ஒரு வேளை நமக்கு ப்ரியமானவங்க பக்கதிலிருந்தா, அவர்கள் பாதுகாப்பில் இருக்கிறோம் என்கிற நினைப்பிருந்தா ,  இப்படி தூக்கம் வரும் போல..” 
  மகத்தான மனிதர்களால் மகத்தான காரியங்களை மட்டுமல்ல மகத்தான தூக்கத்தையும் அருள முடிகிறது.

      கல்யாண்ஜியின் பல கவிதைகள் எனக்குப் பிடித்தமானவை. சில கவிதைகளின் வரிகள் அவ்வப்போது தீடீரென நினைவில் தோன்றுவதும் உண்டு.  “ முடிதிருத்துகிற ஒரு தெய்வம் / செவ்வாய்க் கிழமை ஓய்வெடுத்துக் கொள்கிறது “ என்கிற வரி சமீபநாட்களாக அடிக்கடி நினைவில் வருகிறது. எங்கள் ஊரில் என் தலைமுறைப் பிள்ளைகள் எல்லோரும் சலூனிலேயே வளர்ந்தோம் என்பது ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால் அவர் கவிதைளில் எனக்கு சில போதாமைகள் உண்டு. அதாவது அந்தக் கவிதை என்ன சொல்ல வருகிறதோ அதை ஒரு கட்டுரையின் முடிவுரையைப் போல சுருக்கி கடைசி இரண்டு வரிகளில் சொல்வார். எல்லா கவிதைகளிலுமல்ல சில கவிதைகளில் இப்படி நிழந்திருக்கிறது.  இது ஒரு தொழிற்நுட்ப குறைபாடு என்பதை அவர் இருந்த மேடையிலேயே வெளிப்படையாக சொல்லி இருக்கிறேன்.ஆனாலும் எங்களுக்கிடையில் இது வரை எதுவும் அறுந்து விடவில்லை. சமீபத்தில் அவர் அனுப்பிய குறுஞ்செய்தி ஒன்று “ ஆட்டுதி அமுதே “ இரண்டு பிரதிகள் வாங்கியிருப்பதாகச் சொன்னது.

           அவர் சமீபத்தில் எழுத வந்த ஒருவரின் எழுத்துக்களை கூட அக்கறையுடன் வாசிக்கிறார்.  விஷால் ராஜா எழுதிய ஒரு கட்டுரையை வாசித்து விட்டு அவன்  உள்பெட்டிக்கு சென்று வாழ்த்துகிறார். என் கவிதையின் சாயைகள் விழத் துவங்கியிருந்த ஒரு கவிஞரிடம் “ அவன் வண்டில நீங்க ஏன் ஏறறீங்க..என்று எச்சரிக்கிறார்.

 “ நீங்கள் கேட்டவை “ படத்தில் ‘கனவு காணும் வாழ்க்கை யாவும் ‘பாடலில் ஒரு காட்சி வரும் ஒரு டிரைவர் தன் கார்  ஜன்னலுக்கு வெளியே கால்களை நீட்டியவாறு  தூங்கிக் கொண்டிருப்பார். கேமரா வெளியே நீண்டிருக்கும் அந்த கனுக்கால் பாதத்தை மட்டும் அழகாக காட்டிச்செல்லும். நண்பர் ஜான் இந்தக் காட்சியை பார்த்த பிறகு தான் பாலுமகேந்திராவின் தீவிர ரசிகராகி விட்டதாக ஒரு முறை சொன்னார். வண்ணதாசனின் “ மிச்சம் “ கதையை வாசித்து விட்டு ஜானை அழைத்துச் சொன்னேன்..
“ ஜான்.. உங்க டைரக்டருக்கு முன்னாலேயே  வண்ணதாசன் அந்த சீன எழுதிட்டாரு ஜான்.. நாம தான் அதைப் படிக்கல.. “

  நான் கதைகளை வாசிக்கத் துவங்கிய பருவத்தை எண்ணிப் பார்க்கிறேன். ஊழ்வினை உறுத்து வந்து ஊட்ட நான் வாசித்த எல்லாக் கதைகளிலுமே ஒரு சூரியோதயமோ, அஸ்தமனமோ இருந்தது. கதாசிரியன் அதை உருகி உருகி சொல்லி இருந்தான். எப்போதாவது அண்ணாந்து கொட்டாவி விடுகையில் கண்ணுக்கு சிக்கினால் உண்டு. மற்றபடி அது பாட்டுக்கு அது இருக்கிறது. நான் பாட்டுக்கு நான் இருக்கிறேன். கன்னியாகுமரியில் எல்லோரும் பார்க்கிறார்களே என்று கூட சேர்ந்து வேடிக்கை பார்த்ததை விட்டு விட்டால் நம் வாழ்வில் நாம் எப்போது சூரியனை நின்று பார்த்தோம் என்று தோன்றியது. எரிச்சல் பற்றிக்கொண்டு வந்தது. சில கதைகளில் வர்ணனைகள் ஒரு பக்க அளவுக்கு கூட நீண்டிருந்தன.  “ நீ களஞ்சியத்தையே கையளிப்பதாக இருந்தாலும் அது எனக்கு வேண்டாம்... “ என்று அந்தப் புத்தகங்களை தூர எறிந்திருக்கிறேன். சித்தரிப்புகளின் மேல் இவ்வளவு வெறுப்புடைய ஒருவனுக்கு வண்ணதாசன் கதைகள்  எரிச்சலைத்தான் அளித்திருக்கும் என்பதைத் தனியே சொல்ல வேண்டியதில்லை.

  எல்லோரும் சிலாகித்துச் சொன்ன அவருடைய தனுமை”  கதையை வாசித்து விட்டு “ இப்ப என்னய்யா பிரச்சனை... அந்த டீச்சரு இவன லவ் பண்றா.. இவன் வேரொருத்திய லவ் பண்றான்.. அந்தப் பொண்ணுக்கு கொஞ்சம் கால் வராது.. அவ்வளவு தான மேட்டரு..என்று தான் தோன்றியது.

  வண்ணதாசன் கதைகள் போய்ச் சேரும் இடத்தில் அல்ல, போகும் வழியில் இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள இந்த அவசரக்குடுக்கைக்கு கொஞ்சம் காலம் பிடித்தது. அவர் கதைகளுக்குள் நான் பெரிய பெரிய விஷயங்களை, பெரிய பெரிய சிக்கல்களை எதிர்பார்த்து ஏமாந்து போனேன். அவர் சின்ன விஷயங்களின் மனிதன் என்பதை காலம் தாழ்ந்தே அறிந்து கொண்டேன். சின்ன விஷயங்கள் உண்மையில் அவ்வளவு சின்ன விஷயங்கள் அல்ல என்பதையும்.

   “ தனுமைகதையை நாம் முடிவை நோக்கி வேகமாக வாசித்து விட்டுப் போகையில் , ஞானப்பன்  “ தட்டுங்கள் திறக்கப்படும் “ என்று பாட ,  அது அநாதை விடுதிச் சிறுவர்களுக்கு “ இந்த நல் உணவை நமக்குத் தந்த நம் இறைவனை வணங்குவோம் “ என்பதாக கேட்கிற பிரமாதமான கதையை இழந்து விடுகிறோம் என்று தோன்றுகிறது. அநாதைகளை மேலும் அநாதையாக்குகிற பாடல் என்று இதை எழுதிச்செல்கிறார் வண்ணதாசன். அவரின் கதைகளுக்குள் இது போல பல உப கதைகள் காணக் கிடைக்கின்றன. சில கதைகளில் உபகதைகள் கதையை காட்டிலும் அழகில் விஞ்சி நிற்கின்றன. ஓர் உல்லாசப் பயணம் “ கதையில் உல்லாசப் பயணம் போக வாய்க்காத சிறுவன் தோணித் தண்ணியை குற்றாலம் என்று சொல்லி குளித்துக்களிப்பதைக் காட்டிலும், அவன் அப்பா  பயணத் திட்டம்  குறித்த நோட்டீசைப் படித்து விட்டு  தன் இயலாமையின் கரிப்போடு “  என்ன தாமரைப்பூ வரையுதியா “ என்று பேச்சை மாற்றும் இடம் எனக்கு அவ்வளவு பிடித்திருந்தது. புத்தகத்தை மூடி வைத்து விட்டு  வெகுநேரம் மோட்டுவளையை வெறித்துக் கொண்டிருந்தேன்.

  அவர் கதைகளின் பலகீனமாக சொல்லப்படும் சித்தரிப்புகளின் வழியேதான் அவர் நல்ல கதைகள் பலதையும் எழுதிக்காட்டி இருக்கிறார். ஆனால் எல்லாக் கதையிலும் இந்தச் சித்தரிப்பு அவருக்கு உதவியிருக்கிறது என்பதை என்னால் நம்ப இயலவில்லை. “ சபலம் “ கதையில் ஒரு வாத்தியார் ஒரு மாணவனைப் அடிப்பதற்காக பிரம்பை தேடி மேஜை ட்ராயரை இழுக்கிறார்.. பிரம்பு எங்கோ ஒளிந்து கொண்டிருக்கிறது.. நானாக இருந்திருந்தால்  “ உள்ளே கண்டதும் கடியதும் கிடந்தது.. அதனூடே பிரம்பு எங்கோ ஒளிந்து கொண்டிருந்தது என்று எழுதியிருப்பேன்.. ஏனெனில் நாம் பிரம்பைத் தேடுகையில் பிரம்பைத் தவிர மற்றதெல்லாம் நமக்கு கண்டதும் கடியதும் தானே ? ஆனால் வண்ணதாசன் ஒரு ஓவியர் . அவருக்கு கித்தானின் ஒவ்வொரு அனுவிலும் வரைய வேண்டியிருக்கிறது. அவர் அந்த மேஜைக்குள் என்னென்ன இருந்தன என்று ஒவ்வொரு பொருளாக சொல்லிச் செல்கிறார். இது வண்ணதாசன் கதை. இது இப்படித் தான் இருக்கும். இது அவர் வண்ணம். அவர் ஓவியம்.

  அவரது கவிதை ஒன்று நினைவுக்கு வருகிறது. ஒரு மனிதன் ஒரு வீட்டுக் கதவின் முன் காத்து நிற்கிறான்..அவன் ஒரு பொருளை அங்கு ஒப்படைக்க வேண்டும். மின்தடையால் அழைப்பு மணி இயங்கவில்லை. கதவு திறக்க கால தாமதமாகிறது. அந்தக் காத்திருப்புக் காலத்தில் அவன் எதை எதைப் பார்க்கிறான் என்று சொல்வார்...
பூட்டிய கதவில் ஒரு சிலந்தி மனிதனின் ஒட்டுப்படம் / அங்கிருந்த முட்டைத் தோடை விட்டு / நெடுந்தூரம் வந்திராத ஒரு குட்டிப்பல்லி இடம் மாறியது/ வேறொரு கண்டத்திற்கு பறப்பது போலத் தாவியதில் அது எங்கு விழுந்ததோ ? பின்வாங்கியதில் என் மேல் உரசியது /காட்டமான வாசனையுடன் அரளிக்கொத்து / இதுவரை பார்க்காத ஒரு துருவேறிய நிறத்தில் ஏழெட்டுக் காளான்கள் வரிசையாய் / உபரியாக ஒரு தேரைத் துள்ளலும் /  தரைச்சக்கரம் போல் சுருண்ட வளையல் பூச்சியும்.
இவ்வளவையும் அவன் பார்க்கிறான். அந்தக் கவிதை இப்படி முடிகிறது
 “ ரொம்ப நேரமாக நிற்கிறீர்களா ? / கதவைத் திறந்த கைவளையல்கள்
   கனிவுடன் சரிந்தன மணிக்கட்டின் மெலிவில் / சொல்லவில்லை நான் ,
   இத்தனையும் பார்க்க  / நின்றால்தான் என்ன / எத்தனை நேரமும் என்று.

நான் அந்த வளைக்கரத்தின் மணிக்கட்டு மெலிவைத் தவிர இதில் வேறு எதையாவது பார்த்திருப்பேனா என்பது சந்தேகம்தான். ஆனால் அவருக்கு ஆயிரம் கண்கள். அத்தனையும் பார்க்க வேண்டும் அவருக்கு.

  தற்போது அவருக்கு விஷ்ணுபுரம் விருது, சாகித்ய அகாடமி விருது என இரண்டு முக்கியமான விருதுகள் அடுத்தடுத்து அறிவிக்கப்பட்டுள்ளன. இலக்கிய உலகம் முழுக்க அதை கொண்டாடிக் களிக்கிறது. முகநூலில் அவரது புகைப்படங்கள கொட்டித் தீர்க்கப்படுகின்றன. எல்லோரும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய வண்ணம் இருக்கிறார்கள். எனக்கு உறுதியாகத் தெரியும் அவை போலியான மகிழ்ச்சிகள் அல்ல. உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுபவை அல்ல. அந்த மனிதர் எத்தனை மனங்களை அவ்வளவு அந்தரங்கமாகத் தொட்டிருக்கிறார் என்பதற்கான சான்றுகள் இவை.

   “ அவர் நடிக்கிறார்.. என்று சிலர் என் காது படவே சொல்லியிருக்கிறார்கள். நான் அவர்களிடம் சொல்லிக்கொள்வது இது தான்... “ அவர் எவ்வளவு பெரிய நடிகராக இருந்திருந்தால் அவரால் இத்தனை மனங்களை வெல்ல முடிந்திருக்கும்.. உங்களால் முடிந்தால் நீங்களும் நடியுங்கள்... நானும் நடிக்கிறேன்.. இவரும் நடிக்கட்டும்.. அவரும் நடிக்கட்டும்.. உலகம் அன்பின் நடிப்பில் புரளட்டும்.
            


                                                  

                                                            நன்றி : உயிர்மை – ஜனவரி 2017

No comments: