Wednesday, October 10, 2012

எனக்கினி ஒரு ஜன்மும் கூடி...
                                                     
                                                                       -  சாம்ராஜ் -

எனக்குத் திலகனை "பெருந்தச்சனாகத்" தான் அறிமுகம். 89 அல்லது 90 என்று நினைக்கிறேன். அந்த உருவமும் குரலும் மிகையில்லாத நடிப்பும் என்னவோ செய்தது. "கிரீடம்" தான் என்னைத் திலகனின் தீவிர ரசிகனாக மாற்றியது. (தமிழில் அஜித்தை வைத்து அக்கிரமம் செய்தார்களே அந்தப் படம் தான். அசலுக்கும் போலிக்கும் என்ன வித்தியாசம் என்று இன்று வரை உங்களுக்கு வாழ்வில் விளங்கவில்லை எனில் இது இரண்டையும் அடுத்தடுத்து பார்த்து விடுங்கள்.)மலையாள சினிமாவில் மிக முக்கியமான படங்களில் ஒன்றாகக் கொண்டாடப்படுகிற படங்களில் ஒன்று கிரீடம். ஒரு அச்சன் - மகனைப் பற்றியான கதை. வண்ணதாசனின் வரியில் சொன்னால் ஒரு அச்சனின் கதை அது.

 ஒரு தந்தையாக, சாதாரண போலீஸ்காரனாக, மகனை எஸ்ஐ - யாக    
 பார்க்க வேண்டும் என்ற விடாப்பிடியான கனவு கொண்டவனாக அந்த    கனவுகள் நொறுங்கிப் போனவனாக அபாரமாக செய்திருப்பார்.
எங்கேனும் ஒரு வயதான, உண்மையான, கீழ்ப்படிதலான போலீஸ்காரரை காணும் பொழுது திலகனின் அந்தப் பாத்திரம் ஓர்மையில் வராமல் கடப்பது சாத்தியமில்லை. ரௌடியாக ஆகி விட்ட மகனை கடைத் தெருவில் இரவு ரோந்தின் பொழுது டார்ச் வெளிச்சத்தில் அப்பனும் மகனும் பார்த்துக் கொள்கிற தருணம் வாழ்வின் துயரம் அறிந்தவர்களுக்கு ஒருபொழுதும் மறக்க முடியாத தருணமது.

கிரீடத்தின் இரண்டாம் பாகமான " செங்கோல்" அதில் மகளைக் கூட்டிக் கொடுப்பவராக, அதை மகன் கண்டு பிடிக்கும் பொழுது தற்கொலை செய்து கொள்ளவதாக திலகனின் பாத்திரம். மகளை நாடகத்திற்கு நடிக்க அழைத்துப் போகும் தந்தை, அந்தப் பயணத்திற்கு "வேறு நோக்கங்களும்" உண்டு. அந்த நோக்கங்களை ஒரு சிறிய பெட்டியைக் கையில் பிடித்தபடி மகளோடு பேருந்து நிறுத்தத்திற்கு நடந்து போவதில் திலகனால் கொண்டு வந்து விட முடியும்.

குணச்சித்திரம், எதிர்மறை, நகைச்சுவை என எல்லாத் தளத்திலும் அவரால் இயங்க முடியும். கிலுக்கம், மூக்கற்ற ராஜ்ஜியம், சில குடும்பச் சித்திரங்கள் போன்ற படங்களில் அவரது அபாரமான நகைச்சுவை நடிப்பை உணர முடியும். அவரது விருப்பமான நடிப்பு குணச்சித்திரமும், எதிர்மறை பாத்திரங்களுமாகவே இருந்திருக்கும் எனத் தோன்றுகிறது. "காட்டுக் குதிரா" என்றொரு படமுண்டு. அது முழுக்க எதிர்மறையான பாத்திரம். திலகன் மீது நமக்கு வெறுப்பு வராமல் நாம் அரங்கத்தை விட்டு வெளிவர முடியாது.

சிறிய பாத்திரங்களில் கூட அவரால் நுட்பங்களை கொண்டுவந்து விட முடியும். " நாடு வாழிகள்" படத்தில் பெரிய முதலாளிகளின் வீட்டில், முதலாளிகள் வளரத் தொடங்கிய காலத்திலிருந்தே, அவரோடு கூடவே இருக்கும், பெரிய திறமையற்ற விசுவாசமிக்க ஊழியனின் பாத்திரத்தை அத்தனை நேர்த்தியாகச் செய்திருப்பார். தமிழில் சொன்னால் கொஞ்சம் அல்லக்கை பாத்திரம் அது. ஆனால் அதை திலகனால் தான் அப்படிச் செய்ய முடியும். " வரவேழ்ப்பில்" ஆர் டி ஓ அதிகாரி, "சதயத்தில்" நீதிபதி, "பிங்காமி" யில் சமூக சேவகன், "பஞ்சாக்கினி" -யில் பத்திரிக்கையாளன் என ஒருபாடு நல்ல பாத்திரங்கள் அவருக்கு உண்டு. அவரை மட்டுமே நம்பி எழுதப்பட்ட எடுக்கப்பட்ட திரைப்படங்கள் நிறைய உண்டு. பத்மராஜனின் மூணாம் பக்கம், லோகியின் கண்ணெழுதி பொட்டும் இட்டு, ரஞ்சித்தின் இந்தியன் ருபீ, அன்வர் ரஷீத்தின் உஸ்தாத் ஹோட்டல் என.

எதிலும் அடங்காதவராக இருந்தார் திலகன். தமிழில் வெறும் "பன்னீர்ஷெல்வம் " என்ற விளியின் மூலம் அறியப்பட்டவராகவே அவர் இருந்தார். அது அவரது ஒரு பக்கம் மட்டுமே!

எனக்கு ஒரு ஆறேழு வருடங்களாய் தொலைபேசியில் அவரோடு பேசிக்கொள்கிற அளவிற்கான நட்பிருந்தது. தொலைபேசியில் மிஸ்டு-காலைப் பார்த்துவிட்டு "ஈ நம்பரிலிருந்து விளிச்சிருந்தல்லே" என அவர் கேட்கும் பொழுது எனக்கு ஆடிப்போகும். எத்தனையோ படங்களில் கேட்ட அவரின் மகத்தான குரல் அது. என்னோடு தமிழில் பேசவே முயற்சிப்பார். "சொல்லுங்கோ" என்பார். சிறுவயதில் மதுரை, ராமேஸ்வரம் எல்லாம் வந்திருப்பதாகச் சொன்னார். தனது இளமைக்கால நாடக அனுபவங்களைப் பற்றி எப்பொழுதேனும் சொல்வார். தன் குரல் தனக்கு மிகப் பெரிய பலம் என்பார். எந்த மொழியானாலும் தன் குரல் இல்லையெனில் தன் நடிப்பில் பாதி போய் விடும் என்பார். சிவாஜியோடு யாத்ரா மொழி படத்தில் நடித்ததை தன் வாழ்நாள் பாக்கியமெனக் கூறுவார்.

AMMA -வோடு (மலையாள திரைப்பட அமைப்பு) முரண்பட்டு, புறக்கணிக்கப்பட்டு படங்களே இல்லாத சமயத்தில் இனியும் தனக்கு இந்நிலை தொடர்ந்தால் கலாச்சாரத் துறை அமைச்சர் எம் ஏ பேபி வீட்டு வாசலில் தற்கொலை செய்துகொள்வேன் என ஆனந்த விகடனில் பேட்டி அளித்தார். ஏன் சார் இப்படி என்று கேட்டேன்! கைப்பாகச் சிரித்தார். ஒரு சிறிய மௌனத்திற்குப் பின் " அது ஒரு வால்லாத வேதனையானு " என்றார். அபிநயிக்கானு இல்லாது இருக்கினது தனக்கு ஒருக்கிலும் தாங்காம் பட்டிலா" என்றார். நான் அழைக்கும் பெரும்பாலான சமயங்களில் உடல் நலம் இல்லாதிருந்தார். ஏதாவது சூரணம் சாப்பிட்டுக் கொண்டிருப்பதாகச் சொல்வார். ஒருமுறை அவரை சந்திப்பதற்கான வாய்ப்பு கிடைத்து. நான் போக முடியவில்லை. அந்த குற்ற உணர்ச்சி என் வாழ் நாளுக்கும் இருக்கும்.

மலையாள சினிமா அவர் மரணத்தை முன் அறிந்தது. போன வருடம் அவர் மீதான தடைகள் நீக்கப்பட்டபோது இயக்குனர் ரஞ்சித் அதற்காகவே காத்திருந்தது போல அவருடைய ஆகச் சிறந்த பாத்திரங்களில் ஒன்றாகக் கருதப்படுகின்ற இந்தியன் ருபி திரைப்படத்தை இவருக்காகவே இயக்கினார்.

எந்த கதாநாயகர்களோடு முட்டி மோதினாரோ அவர்களின் படங்களிலும் தடைக்குப் பிறகும் நடித்தார். மோகன்லாலோடு ஸ்பிரிட் படத்தில் நடித்தார். (இருவரும் சந்தித்துக் கொள்வது போல காட்சிகள் இல்லையென்றாலும் கூட).

மம்மூட்டியின் மகனின் இரண்டாவது படமான "உஸ்தாத் ஹோட்டல்" திலகனை மனதில் வைத்தே எழுதப் பட்டது. (மம்மூட்டியே தன் மகனுக்கான திரைப்படங்களை தேர்ந்தெடுக்கிறார் என்று சொல்கிறார்கள். அவருக்கு திலகன் மைய பாத்திரமாக இருக்கும் படத்தில் தன் மகன் நடிப்பதில் எந்த ஆட்சேபனையும் இல்லை).

ஒரு நல்ல நடிகனுக்கு உண்டான கௌரவத்தை சற்று தாமதமாகவேனும் மலையாள சினிமா அவருக்கு அளித்தது. உஸ்தாத் ஹோட்டல் படத்தின் முடிவு (ஏறக்குறைய அவரின் கடைசிப் படங்களில் ஒன்று) அவரது வாழ்விற்கான குறியீட்டு முடிவு போலவே இருக்கும். படத்தின் இறுதியில் எங்கோ சுவடுகளற்று புகை போல் மறைவார். திரைப்படத்தில் அவர் எங்கோ வாழ்வதாக மற்றவர்கள் நம்புவார்கள்.

அந்தத் திங்கள் காலை " திலகன் நம்மிடம் இருந்து விடை வாங்கி" என்று கோவில்பட்டி சரவணனிடம் இருந்து குறுஞ்செய்தி வந்திருந்தது. சென்னை நகரப் போக்குவரத்து தாறுமாறாக என் முன் பாய்ந்து கொண்டிருக்க, நான் மிகத் தனியனாய் உணர்ந்தேன். நண்பர்களுக்கு எஸ் எம் எஸ்ஸில் செய்தி அனுப்பினேன். மிகத் தனியனாய் உணருகிறேன் என்று ஜெயமோகனுக்கு குறுஞ்செய்தி அனுப்பினேன். "நானும் அப்படி உணர்கிறேன். எல்லா எழுத்தாளர்களைப் போல என்னிடமும் அவருக்கான கனவுப் பாத்திரங்கள் இருந்தன" என பதில் அனுப்பினார்.

திருவனந்தபுறத்திற்கு போகலாம் என புறப்பாட்டால் அன்று மாலையே அனேகமாக அடக்கம் இருக்கும் என்றார் இயக்குனர் மதுபால். மதுரைத் தோழர் பிரபாகரன் அவர் எண்ணில் கூப்பிட்டுப் பாருங்கள் என்றார். அவர் இல்லாத அவர் எண்ணை அழைப்பது எத்தனைத் துயரம். யாரோ எடுத்து அன்று மாலையே என உறுதிப் படுத்தினார்கள்.

அறையிலும் இருக்க முடியாமல் வெளியிலும் திரிய முடியாமலும் நகரத்தில் அலைந்தேன். அவருடைய போனின் ரிங் டோன் பாடல் வரி இப்படி இருக்கும்,

"சந்த்ர கலபம் சாத்தி உறங்கும் தீரம்,

இந்த்ர தனுசின் தூவல் பொழியும் தீரம்,

ஈ மனோகர தீரத்து தருமோ இனி ஒரு ஜன்மம் கூடி,

எனக்கினி ஒரு ஜன்மமும் கூடி"

செங்கோல் படத்தில் மதுரம் ஜீவாமிர்த பிந்து என்ற பாடலில் "ஏகாந்த யாம வீதியிலே" என்ற வரியின் பொழுது கிராமத்து தெருவில் தள்ளாடியபடி நடந்து போவார் திலகன்.

நானும் அந்த இரவில் ஆதித்யா பாரில் இருந்து வெளியேறி  12 மணிக்கு நாய்கள் குரைக்க தள்ளாடியபடியே நடந்துகொண்டிருந்தேன்.. யாரிடமாவது சொல்லி அழவேண்டும் போல் இருந்தது. ப்ரியமானவர்களை தொலைபேசியில் அழைத்தேன்.லிபி, இசை, பிரசாத், மாயா.. என. மற்றவர்கள் இரண்டாம் ஜாமத்தில் இருக்க,  லிபி மட்டுமே எடுத்தார்.அவரது சொற்களும் தூக்கத்தில் மிதந்தன. “ தூங்குங்குள் லிபி ..” என்று சொல்லி விட்டு இணைப்பை துண்டித்துக் கொண்டேன்.

              இன்னேரம் திருவனந்தபுரம், தைக்காடு இடுகாட்டில் சாம்பலாகி இருப்பார் என் ஆதர்ஷ நடிகன். சாம்பலில் இருந்து பிரித்தெடுக்க முடியுமோ அக்குரலை..அந்த மகத்தான அபிநயத்தை

                                  "திலகன் அரங்கு ஒழிஞ்சு".

Tuesday, October 2, 2012

துயரத்தின் கழுத்துச் சதை மார்பில் துவள்கிறது

   காலையில் எழுந்ததும் டீ குடிக்கப் போவேன்
   பாதி டீ வரை சும்மாதான் குடிப்பேன்
   பிறகு  "மயிரப்புடுங்கியுடு"  என்று
   இரண்டு வறுக்கிகளை வாங்கி நனைத்துத் தின்பேன்.
   ஒரு ஜிலேபியை தின்னும் 
  அந்த இரண்டு நிமிடங்களில்
   இந்த வாழ்வு இனித்துச் சொட்டுகிறது
   இனித்துச் சொட்டும் வாழ்வை 
   விட்டுவிடக்  கூடாதென்பதற்காகத்தான்
   காலையிலும், மதியத்திலும், இரவிலும்
   இடையிடையும்
   ஜிலேபிகளைத் தின்கிறேன்.
   பால்யத்தை மீட்டுரு செய்யவே
   கம்பர்கட்டுகளையும், கொடல் வத்தல் பாக்கெட்டுகளையும்
  தின்கிறேன்.
  ப்ரூ காஃபியும், பூண்டு மிக்சர் தட்டோடும்
  நான் மொட்டைமாடியில் அமர்ந்திருக்கையில்
 மந்தமாருதம் என்னை  விட்டெங்கோடிப்போகும்?
 நான் ஒழுங்காக கோப்புகளை பார்க்கவே ஆசைப்படுகிறேன்
 இந்த கேண்டீன் முதலாளி மணிக்கொருதரம்
காற்றில் சமோசாவை ஏவி விடுகிறான்
அது என் காதோரம் வந்து
பார்த்து பார்த்து என்னைத்தை கிழித்தாய்
என்று கேட்கிறது
இந்த நாட்டில் எவ்வளவோ சட்டங்கள் இருக்கின்றன
”இருசக்கர வாகனங்களில் காதலர்கள் இறுக்கி அணைத்தபடியே
 பயணிக்கலாகாது “ என்று ஒரு சட்டமேனும் இல்லை.
ஒருத்தி தன் காதலனின் கன்னத்துள்
புகுந்து வெளிவந்ததைப் பார்த்த ராத்திரியில் தான்
நான் க்ரில்சிக்கனில் ஒரு முழுக்கோழி தின்றேன்
வாரத்திற்கு மூன்றுதரம்
முழுக்கோழி தின்னவேண்டும் என்பது என் தலையெழுத்து.
கடவுள் என் வலக்கையை
இயந்திரத்தின் இரும்புச்சக்கரங்களுக்கு கொடுத்துவிட்டு
இடக்கையில் இருட்டுக்கடை அல்வாவை வைத்தார்