Skip to main content

Posts

Showing posts from May, 2022

உவமை

  உ ன்னைச் சொல்ல ஒரு சரியான உவமை சரக்கொன்றை இருந்த இடம்

நஞ்சு

  கூ வுகுயில்  தூரத்தே சென்று மறைவது  போல் பறந்து விட்டது சரக்கொன்றை. கீதத்தின் நஞ்செனவே தங்கி விட்டது சரக்கொன்றை இருந்த இடம்.

சரியான தவறு

ப ச்சைப் புல்வெளியில் பசுவொன்று மேய்ந்து கொண்டிருந்தது. அதன் வயிற்றடி நிழலில் மேய்ந்து கொண்டிருந்ததொரு  கொக்கு. பேருந்தில் தன் பிள்ளைக்குப்  பாடம் நடத்திய ஒரு அன்னை "அங்க பாரு..  அங்க பாரு...கொக்கு நிழலில் மாடு மேயுது பாரு..." என்றாள். பிறகு  வாயைப் பொத்தியபடி "sorry..  sorry.." என்று  அவசர அவசரமாக அதை  அழித்தாள்  "சரிதான்... சரிதான்.." என்று நான் சிரித்தேன்.

முதல் "டா"

  அ ப்போது காலிரண்டும் முறிந்து கட்டிலில் கிடந்தேன் தலைமாட்டில் ஒலித்தது கோவில் மணிச்சத்தம் உன்னிடமிருந்து வந்திருக்கிறது  முதல் "டா" அதை  இரண்டாய் முறித்து கக்கங்களில்  ஊன்றி  கொண்டு மெல்ல எழுந்து வாழ்விற்குள் நடக்கிறேன்.

யாருக்குத் தெரியும்?

  பு லிக்கு பசியில் வயிறு எரிந்தது. ஒரு மானைக் கண்டு பாய்ந்தது. பசி  புலியை ஓடு ஓடு என்று விரட்டியது அச்சம்  மானை ஓடு ஓடு என்று விரட்டியது. காட்டின் குறுக்கே சாலையைக் கடக்க முயல்கையில் துள்ளித் தாவிய மான் அவ்வழியே போன இரு சக்கர வாகனத்தின் மீது விழுகிறது. உல்லாசப் பயணம் வந்த இரண்டு இளைஞர்கள் இப்போது இரத்த சகதியில் கிடக்கிறார்கள் "எனக்கு ஒன்றும் தெரியாது குழந்தைகளே! " என்று அழுகிறது மான். "எனக்கும் ஒன்றும் தெரியாது குழந்தைகளே! "  என்று அழுகிறது புலி.

அறிவுப் பாட்டு

  1. மு ட்டாளே!  காலத்தைக்  காட்டச் சொன்னால் கடிகாரத்தையா காட்டுவாய்? பேரறிவாளன்  தலை வாரிக் கொண்டிருக்கிறான்  அவன் உச்சி வழுக்கையைக் காட்டு! 2.  எ வனோ ஒருவனுக்கு ஒழுங்காகக்  கேட்கவில்லை. எவனோ ஒருவன் ஒழுங்காக எழுதவில்லை. எவன் ஒருவனும்  எவனோ ஒருவனல்ல உன் வாகனத்தின் மீது நேருக்கு நேராய் மோதிய  லாரியின் டிரைவர் முந்தைய நொடிவரை எவனோ ஒருவன். 3. ப ரோலில் ஒரு விதமாகவும் விடுதலையில் ஒரு விதமாகவும் கூவும் குயிலொன்றை நெஞ்சில் வளர்த்து வருகிறான் அறிவு 4. ப தினோரு ஆண்டுகளாக எரிந்து கொண்டிருந்த ஒருத்தியை போதும் வா!  என்று  அழைத்துச் செல்கிறது நெருப்புத் தெய்வம். 5.  அ றிவு! நாம் கோப்பையை ஏந்துவோம் கொஞ்சம் உடைந்த கோப்பைதான் ஆயினும் என்ன?  மோதி மோதி அதை  மேலும் உடைப்போம். 6.   வ ருக அறிவு!  சூடான  முட்டைப் பரோட்டோ  உங்களை வரவேற்கிறது!

விடுதலை

ஓ ர் ஆனந்தக் கூவல் என் பெயர் சொல்லி அழைத்தது. எங்கோ தொலை தூரத்தில் அடியாழத்தில் அலைந்து கொண்டிருந்த  என் கார் நிலைக்குத் திரும்பி விழித்தது.  பள்ளித் தோழனொருவன் நகரசுத்தி தொழிலாளியாகி மக்கும் குப்பைக் குவியல்களுக்கிடையே தலைநீட்டி கையசைக்கிறான். அவன் பதுங்கி ஒளியாத  அந்த இடத்தில் மலர்ந்து சிரிக்கிறது விடிய விடிய ஏடுகளில் மூழ்கி நான் துப்பறிந்தும்  காணாத ஒன்று.

நித்தியம்

கா ற்றில் அசைகையில் இலைகளெல்லாம் மலர்களாகிவிடுகின்றன. காற்றற்ற போதும் மலர்களைக் காண நீ இன்னும் கொஞ்சம் உடைய வேண்டும்.