Skip to main content

Posts

Showing posts from February, 2015

வெள்ளைக்கலர்

                                           வெள்ளையிலிருந்து                   எல்லா வண்ணங்களும் பிறக்கின்றன .                  குறிப்பாக                  எலுமிச்சைநிறமும் ரோஸ்கலரும் .                                 வெள்ளைக்கலருக்கு                  விண்ணப்ப படிவம்   இல்லை                  தேர்வுகள் ஏதுமில்லை                  அது நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறது .                  வெள்ளைக்கலரை   சிரிக்க வைக்க                 எத்தனை   நகைச்சுவைகள்                 கடைந்தெடுக்கப்படுகின்றன .                வெள்ளைக்கலரை மகிழ்விக்க                  எத்தனை கவிஞர்கள்                  இரா காக்கிறார்கள் .                 வெள்ளைக்கலரின் ஏடு                 பத்திலிருந்து   நான்கைக் கழித்தால்    ஐந்தென்கிறது .                 கண்டிப்பான தணிக்கையாளன்                 அதை மனப்பூர்வமாக ஒப்புக்கொள்கிறான் .                             வெள்ளைக்கலரின் முன்னே                எத்தனை   மனிதர்கள் உடைந்து சிதறுகிறார்கள் .

குட்டி ஒடிசா

கோயமுத்தூர் மாநகராட்சியின் 93- வது வார்டில் புதிதாக உருவாகியிருக்கிற மைதானத்தில் மட்டையாட்டம் நிகழ்கிறது. அங்கு ஒரிய மொழி ஒலி வீசுகிறது. ஆட்டத்தின் முசுக்கரத்தில் கிளம்பும் புழுதியில் ஒரு ”குட்டி ஒடிசா” எழுந்து வருகிறது. ஒரு புளியமரம் பல தலைமுறைகள் காண்பது இன்று  அம்மரத்தடியில் அமர்ந்திருக்கும் ரசிகர் கூட்டம் ” மாரோ... மாரோ... “ என்று கத்துகிறது. அந்த இடதுகை ஆட்டக்காரன் இறங்கி ஒரு இழு இழுக்கிறான். மகிழ்ச்சியின் கூச்சலினூடே பறந்து செல்லும் அப்பந்து மைதானத்தை தாண்டி, ஒரு மூமுதுகிழவனின் தோளில் விழுகிறது. அவன் அப்பந்தைத் தூக்கி அதே மகிழ்ச்சியின் கூச்சலினூடே திரும்ப எறிகிறான்.  அவனை ”கணியன் பூங்குன்றன்” என்றறிக !

அவரும் நானும்

இந்தாருங்கள் , ஓர் உன்னதம் என்று என்னிடம் அவர் நீட்டிக்காட்ட நானதை நுணுகிப்பார்த்து  “ யுரேகா .. யுரேகா … “ என்று   வெற்றிக்களிப்பில்   கூச்சிலிட்டேன் . அங்கே பாருங்கள் , ஓர் உன்னதம் என்று அவரெனக்கு   சுட்டிக்காட்ட நானதை கூர்ந்து நோக்கி “ யுரேகா .. யுரேகா … “ என்று மகிழ்ச்சியில் கெக்கலித்தேன் . வேறெங்கும் போக வேண்டாம் .. உங்கள் பக்கத்தில் பாருங்கள் , ஓர் அதிஉன்னதம் என்றவர் முகஞ் சிவந்து சீறி வர “ யுரேகா .. யுரேகா … “   என்று நான்     பொறுமையாய் முணுமுணுத்தேன் . ஐயா , ஓட்டை இல்லாததென்று வையத்தில் ஏதுமில்லை சரிதான் விடுங்கள் என்றார் . உன்னதங்களைக் கட்டிக்கொண்டு அவரழுவதென்றும் ஓட்டைகளைக் கட்டிக்கொண்டு நானழுவதென்றும் சமரசம் கண்டது சர்ச்சை .                    நன்றி: காலச்சுவடு - பிப்ரவரி-2015

எனது களம்.. எனது ஆட்டம்.. நானே நாயகன்

புதிதாக ஒரு கொசுமட்டை   வாங்கியதிலிருந்து நிம்மதியாக இருக்கிறேன் . கொசு விரட்டிகள் கொசுக்களை விரட்டி விடுகின்றன . ஆனால் மட்டை அவைகளை கொன்று தீர்க்கிறது . ஒரு கொசு பறந்து போக நானும் பறந்து போய் சரியான வாகில் வைத்து ஒரே சாத்து … இன்பம் என் உள்ளத்தில் ” பட் ” என்று தெறிக்கிறது . "  பட் …   பட் …   பட்பட்பட் ….”   இந்தக் கொசுமட்டை சமயங்களில் ஒரு   கோடாரி   ஈனப்பிறவிகள் என் காலடியில் கிடந்து   " தயை ”…  " தயை ”..  என்று கதறும் .   கதறலின் மண்டையில் ஓங்கி ஒரு போடு  ” பட் .. பட் .. பட்பட் …. ”  “ பட்பட் .. பட் ”   பிஸ்டலுக்கு எண்ணெய் போடுவது போலே மட்டையில் மின்சாரம் ஏற்றுகிறேன் . என் வீட்டின் முன்னே குளம் போல தண்ணீரைத் தேக்கி வைத்திருக்கிறேன் . கொசுவீர் ! பிறந்து எழுந்து திரண்டு வருக !                                       நன்றி ; காலச்சுவடு – பிப்ரவரி-2015                 

சுமாரான கொள்கைக்குன்று

சுமாரான கொள்கைக்குன்று ஊஞ்சலில் இருக்கிறது . கொள்கைக்குன்றிற்கு ஊஞ்சலில் சோலியில்லை . இதுவோ சுமாரானது . எனவே ஓயாமல் ஆடுகிறது . சரியென்று முன்னாடி தவறென்று பின்னாடி நாமென்று முன்னாடி நானென்று பின்னாடி கடவுளென்று முன்னாடி கிடவுளென்று பின்னாடி நீதியென்று முன்னாடி மயிரென்று பின்னாடி ஆடியாடி ஆடியாடி   – அது தலைசுத்திச் சாகுமுன்னே ஆரேனும் ஊஞ்சல் கயிரை அறுத்து விட்டால் ஆகாதோ ?                                                                   நன்றி : காலச்சுவடு- பிப்ரவரி-2015                           

செவிநுகர்கனிகளின் இனிப்பும் சத்தும்

                                                            ( க . மோகனரங்கனின் “ மீகாமம் )                        கவிஞரும் விமர்சகருமான க . மோகனரங்கனின்   மூன்றாவது கவிதைத்தொகுப்பு இது . கடந்த சில வருடங்களாக இவர் ” விமர்சகரும் கவிஞருமான ” என்கிற முன்னொட்டோடு அழைக்கப்பட்டு வந்தார் அல்லது ” இரக்கமின்றி ” விமர்சகர் என்றழைக்கப்பட்டார் . குறிப்பிடத்தக்க கவிதைகள் நிரம்பிய இத்தொகுப்பு தழிழில் இவரை ஒரு குறிப்பிடத்தக்க கவியாக நிறுவுகிறது . பார்க்க மெலிதாக தெரிகிற இத்தொகுப்பு உண்மையில் வாசகனிடம் அதிகமாக வேலை வாங்குகிறது . ஒரு தழிழ் மாணவனுக்கு மகிழ்ச்சியையும் பரவசத்தையும் தரவல்ல நிறைய கவிதைகள் இதில் உள்ளன . பக்கங்களை கொண்டு   படைப்பை அளவிட இயலாது என்பது மீண்டும் ஒரு முறை இத்தொகுப்பின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது . வெறும் 48 பக்கங்கள் என்று ஒரு வாசகன்   நம்புவானாகில் அவன் ஏமாந்துபோகவே வாய்ப்புகள் அதிகம் . ஒவ்வொரு பக்கத்தையும் புரட்ட அவ்வளவு   நேரமாகிறது .         இன்றைய கவிதைகளின் மேல் இரண்டு குற்றச்ச