Wednesday, October 30, 2013

போலீஸ் நம்மை வீட்டிற்கு அனுப்புகிறது


   


நேற்று மாலை
சுரேஷ்பேக்கரி வாசலில் நின்று
நானும் இளங்கோவும் பேசிக்கொண்டிருந்தோம்.
இளங்கோ எப்போதும் ஒரு தத்துவவாதியை
உடன் அழைத்துவருவது வழக்கம்.
இந்தமுறை யாரோ யக்ஞ வல்கியராம்.

சிறிது நேரத்திலெல்லாம்
சாமும், ஜானும் வந்துவிட்டார்கள்.
“ ஏகாந்த..வேளை..என்று பாடியபடி
ஜானொடு ஜெயராமன்.

எல்லோரும் தென்காசிக்குப் போய்
கலாப்ரியாவை கூட்டி வந்தோம்.
கொஞ்சம் கூட்டம் தான் கூடிவிட்டது.
கலாப்ரியா அடிக்கடி யெயராமனை
கட்டியணைத்து முத்திக்கொண்டிருந்தார்.
அது குறித்து எம்.கே.டி க்கு ஒரு வருத்தமும் இல்லை
அவர் எப்போதும் போல் பூரித்த சிரிப்புடன் நின்று கொண்டிருந்தார்.

பணிரெண்டு பேர் கூடி
மதுரம்.. அதிமதுரம்..
மணிக்கணக்கில் குடித்துக்கொண்டிருக்கும்
ஒரு குவளை தேநீர்


பக்கத்து பெட்டிக்கடையில் வியாபாரம் தூள் பறக்கிறது.
சுகுமாரன் ஒரு பாக்கெட்டின் கடைசி சிகரெட்டை
புகைத்துக்கொண்டிருக்கையில்
கரகரத்த சத்தத்துடன் கடைகளின் ஷட்டர்கள் கீழிறக்கப்பட்டன.
விளக்குகள் அணைக்கப்பட்டன.
ஆணைகளைப் பிறப்பித்த படியே 
PATROL “  வண்டி   எங்களைக் கடந்து போனது.
இடை நின்ற பேச்சு தொடர்ந்து வளர்ந்தது.
தொ.ப  “ குடிசாமிகளுக்கு தரப்படுகிற இரத்தப் பலி “
குறித்து சொல்லிக்கொண்டிருக்க
போன வண்டி திரும்பி வந்ததை யார் கண்டார் ?
“ டேய்.. “ என்கிற சத்ததிற்கு
 கூட்டம் திசைக்கொன்றாய் சிதறி விட்டது.
 எம்.கே.டி தன் பட்டுஜரிகை வேட்டியை
 தூக்கிக்கட்டிக்கொண்டு ஒரு மூத்திரச் சந்திற்குள் ஓட
 நமது யக்ஞவல்கியர் பெட்டிக்கடை மறைப்பில் ஒளிந்து கொண்டார்.
ஏண்டா .. உங்களுக்கெல்லாம் வீடே கிடையாதா ..
 என்று கேட்கிறது போலீஸ்
 ஐயா , நிஜமாகவே எங்களுக்கென்று ஒரு வீடில்லை.
 வீடு எங்களை போலீஸில் பிடித்து தர
 போலீஸ் எங்களை வீட்டிற்கு பிடித்துக் கொடுக்கிறது.


                                           
                                                                                                                                                                                                    (  ஜானுக்கு ...)


                                                      
                       நன்றி : தி இந்து தீபாவளி மலர்

Tuesday, October 29, 2013

நினைவில் வீடுள்ள மனிதன்

நினைவில் வீடுள்ள மனிதன்

மொரிஷியஸ் தீவிற்கு புறப்படுகிறான்.

கிளம்புகையில்

தன் வீட்டை அடியோடு பெயர்த்துக் கொண்டு போய்

கப்பலில் ஏற்றுகிறான்

பாவம், அது தள்ளாடுகிறது


சென்ற வாரம் அவன் ஒரு சினிமாவிற்குப் போனான்.

சொல்பேச்சு கேளாமல்

அதிவேகத்தில் பைக்கோட்டித் திரியும் தன் இளையமகன்

ஒரு லாரிச்சக்கரத்தில் சிக்கி

உருச்சிதைந்து போவதை அவனதில் பார்த்தான்.நினைவில் வீடுள்ள மனிதன்

பூங்காக்களின் புதர்மறைவில் தன் மகளையே

காண்கிறான்


நினைவில் வீடுள்ள மனிதனுக்கு

இருபத்தியேழாம் வாய்ப்பாடு

மனப்பாடமாக தெரிந்திருக்கிறது


நினைவில் வீடுள்ள மனிதனின்

கேஸ் சிலிண்டர் தானாகவே திறந்து கொள்கிறது

அவன் அலுவலகம் போனதும்

அது “ டும்” என்று வெடிக்கிறது.


நினைவில் வீடுள்ள மனிதனின்

தலைக்கு மேலே ஒரு புகைப்போக்கி நீண்டிருக்கிறது

அவனது நெஞ்சத்தில்

ஏதோ ஒன்று எப்போதும் எரிந்து கொண்டிருக்கிறது.


நினைவில் வீடுள்ள மனிதன்

கடல் வழியே போய்

கடல் வழியே திரும்பினானென்றாலும் 

துளிநீலமும் கண்டானில்லை.


                                                                         
நன்றி : ஆனந்தவிகடன்; தீபாவளி சிறப்பிதழ்


     


ல்யூகோடெர்மா கன்னியின் விநாயகர்

அதிகாலை நீராட்டு முடிந்து
ஈரத்தலை சொட்ட சொட்ட
அவள் அந்த விநாயகரை
வலம்வந்து கொண்டிருந்ததை பார்த்த மாத்திரத்தில்
எனக்கு அழுகை பொத்துக் கொண்டு வந்தது.
பாவீ, இன்னும் உன் உலகில் ஒரு கடவுள் மிச்சமிருக்கிறாரா?
அது இந்த ஆனைமுகன் தானா?
அடீ, நிஜமாலும்தான் துதி சொல்கிறாயா ?
தோப்புக்கரணம் வேறா?
சொல்லடீ, அவன் விழிக்கடைநோக்கு அது தானா?
அல்லது
அதுவாக்கத்தான் இப்படி அலைபாய்கிறாயா ?
இத்தெய்வம் தன் துதிக்கையில் ஏந்தியிருக்கும் கனிந்த பழம்
நீ தானா ?

                           
           ல்யூகோடெர்மா – சருமத்தில் தோன்றும் வெண்புள்ளி குறைபாடு

              
                    நன்றி ; ஆனந்த விகடன் தீபாவளி சிறப்பிதழ்