இ ந்தத் தனியறைக்குள் கொஞ்சம் கோப்பையை நிரப்பி ஆண்ட்ராய்டு போனோடு ச்யர்ஸ் சொல்கையில் செத்து மிதக்கிறது நம் மது. நமது ஏகாந்தங்கள் களியாட்டங்கள் தாறுமாறான பாடல்கள் கண்ணீரில் ஊறிய சோபா செட்கள் திடீர் திருப்பங்களில் நிகழும் அடிதடிகள் எல்லாவற்றையும் எவனோ ஒருவன் துவரப் பெருக்கி பூமிக்கு வெளியே தள்ளிவிட்டான். நமது அறையிலிருந்து கோபித்துக் கொண்டு கிளம்பும் ஒருவனைப் போல மகிழ்ச்சி ஆவேசமாக படியிறங்கிப் போவதைப் பார்! இப்போதே புரிகிறது போதை உனது கோப்பையிலிருந்துதான் எனது தலைக்கு ஏறியிருக்கிறது. உண்மையில் நாம் மதுவை காய்ச்சித்தான் குடித்திருக்கிறோம் நண்பா! (மிஷ்கினுக்கும், சாம்ராஜிற்கும்)