1. தாவாங்கட்டையில் அணிந்திருக்கும் நைந்த மாஸ்க்கோடு அந்த சின்ன கிராமத்திற்குள் நுழைகிறான் கிளி ஜோசியக்காரன் முதல் தெருவில் ஒரு பிணம் விழுந்துள்ளது "தளபதி சக்திவேல்" காலமாகிவிட்டார். கெத்தாக வாழ்வதற்கு கெத்தான பெயர் அவசியம்தான். நேற்று தளபதியும் சக்திவேலும் மடிந்துவிட்டனர். கிளி ஜோசியக்காரன் யாரையும் அதிர்ஷ்டம் பார்க்க அழைக்க வில்லை. கிளி அழைக்கிறது. அவன் அதை அதட்டி அடக்குகிறான். இரண்டாவது, மூன்றாவது என அடுத்தடுத்த தெருக்களிலும் அவன் யாரையம் அழைக்கவில்லை. கிளி அழைத்தது அவன் அதட்டினான். 9 வது தெருவில் அவன் அழைக்கவில்லை அதுவும் அழைக்கவில்லை. கிளிக்கு என்னவோ புரிந்துவிட்டது. ஆனால் எதுவும் புரியவில்லை. 2.
வெயில் அள்ளிக் கொட்டியது. ஒரு மாடிவீட்டு நிழலில் நின்று பீடியைப் பற்றவைத்தான் கிளி ஜோசியக்காரன். கிளி ஜோசியம் ஒரு விளையாட்டாகி காலங்கள் ஆகிவிட்டன அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்தான். அவனுக்கு இதுபோல் விளையாட்டாகத்தான் ஏதாவது செய்ய வரும்.
|
ஆ மாம், அப்படித்தான் கேவலன்தான் பரதேசி தெருத் தெருவாக அலைவது போலே முகநூல் முழுக்கத் திரிவேன். குப்பை மேட்டின் முன் குந்தி அதைக் கிளறிக் கிளறி ஆராய்ந்து கொண்டிருக்குமே ஒரு பைத்தியம் அது கூட நான்தான். சந்தேகம் எழும் ஆண்களின் கணக்குகளைத் திறந்து ஒன்றுவிடாமல் துப்பறிவேன் என்னைத் தவிர எனக்கு எல்லார் மேலும் சந்தேகம் உயிர் நண்பர்கள் ஆபத்தானவர்கள் ஆகவே முதலில் அவர்களிடமிருந்தே துவங்குவேன் அங்கு நீ இட்ட இதயக்குறி ஒன்று சடசடவென எரிந்து கொண்டிருக்கும் . அப்போது நான் என் நெஞ்சிற்குச் சொல்லுவேன்.. “ஒன்றுமில்லை. துளியூண்டு சிவப்பு மை குட்டு, அவ்வளவு தான்". அதுவும் திருப்பி எனக்கு அதையே சொல்லும் “நடுங்காதே.. துளியூண்டு சிவப்பு மை குட்டு , அவ்வளவே".

Comments