Skip to main content

Posts

Showing posts from May, 2018

ஊடுருவல்

              சோமனூர் பஸ்  ஸ்டாண்டில் கொய்யாப் பழம் விற்கும் சமூக விரோதியிடம் கிலோவுக்கு ஒன்று குறைவதாக சண்டையிட்டுக் கொண்டிருந்தான் நக்சல். தன் உடலெங்கும் அரியவகை மூலிகைகளால் ஆன தைல டப்பாக்களை தொங்க விட்டிருக்கும் தேசவிரோத  சக்தி நக்சலின் தோளைத் தொட்டு வத்திப்பெட்டி கடன் கேட்டான். பெட்டி இருந்தது ஆனால் அதில் குச்சி இல்லை. இருவருமாய்ச் சேர்ந்து கடப்பாரை, மண் வெட்டி சகிதம் 14 பி க்கு காத்திருக்கும் தீவிரவாதியை அணுகினர். அவன் தானும் தீயின்றித்தான் தவிப்பதாகச் சொன்னான்.  கழிப்பறை வாசலில்  அமர்ந்து கொண்டு " ஆச்சா... சீக்கிரம் வா..."     "ஆச்சா...சீக்கிரம் வா"  என்று கத்திக் கொண்டிருந்தான்  விஷமி அவனிடம் ஒரெயொரு குச்சி இருந்தது. அந்த உரிமையில் அவன் ஒரு பீடி  ஓசி கேட்டான். இப்படியாக ஒரு நக்சல், ஒரு தேச விரோத சக்தி,  ஒரு தீவிரவாதி, ஒரு விஷமி ஆகிய நால்வரும் ஒரேயொரு குச்சியில் 4 பீடிகளைக் கொளுத்திக் கொண்டனர். அப்போது இமயம் முதல் குமரி வரை எங்கெங்கும் பற்றியெரிந்தது.

தஸ்தயேவ்ஸ்கியின் கவிதை

              முகத்தில் சித்திரை எரிந்து கொண்டிருந்தது. அயோக்கியனிலும் அயோக்கியன் சாத்தானுக்கெல்லாம் சாத்தான் என்று வசைமாரி பொழிந்தாள் பதுங்கிப் பதுங்கி சமையலறையைச் சூறையாடும் சுண்டெலி என்றாள். இந்த உலகிலேயே மிகவும் அருவருப்பான விஷயமாக  மாறிவிட்ட அவன் முகத்தை இனி எப்போதும்  காண விரும்பவில்லையவள் அந்த வீடியோ சாட்டின் கோணத்தில் ஒரு சின்ன திட்டமிருந்தது ஸ்லீவ் லெஸ்ஸின் மீது அசைக்கமுடியாத நம்பிக்கை கொண்டவளாய், தன் காதலிலிருந்து கண்காணாத இடத்திற்கு போய்விடுமாறு அடித்தொண்டையில் கத்தினாள்.

கொஞ்சம் சிக்கலான கணிதம்

                    மதிப்பிற்குரிய விருந்தினரொருவரை நகரத்து விடுதியில் தங்கவைத்திருந்தேன். " இங்கிருந்து உங்கள் வீட்டிற்கு எத்தனை மைல்கள்.." என்று கேட்டார். " மூன்றே மைல்கள் ஐயா.... என்னிலிருந்து என் வீட்டிற்குத்தான்  எண்ணிறந்த மைல்கள்" என்றேன்.

காவிய டப்பா

                                                            ஒரு முத்தம் கொடுத்தவுடன் தீர்ந்து விட வேண்டும் கொஞ்சம் எச்சிலில் கரைந்து விட வேண்டும். அதுவன்றி காவிய டப்பாவிற்குள் ஒளித்து வைத்து காலமெல்லாம் எடுத்து எடுத்துப் பார்க்கும் அந்த முத்தம்.... அது நமக்கு வேண்டாம் அன்பே

நன்றியுணர்ச்சியில் தவித்தல்

                                                  அந்த மனிதனுக்கு ஒரு நெருக்கடி உடனடியாக நன்றியுணர்ச்சியிலிருந்து வெளியேறியாக வேண்டும் அது ஒன்றும் அவ்வளவு பெரிய உதவியில்லை...  அளவில் சிறியதுதான் என்று எவ்வளவோ முறை தனக்குத் தானே சொல்லிக் கொள்ளத் துணிகிறார் அடுத்த கணமே " காலத்தினாற் செய்த நன்றி " எனும் வரியால்  கடுமையாகத்  தாக்குறுகிறார் நன்றியுணர்ச்சி எவ்வளவு வலுவானதொரு மிருகம் ... இவரோ  ஒரு  காக்கையைத் துரத்துவதைப் போலே " உஸ்" உஸ்"  என்கிறார். அது ஒரு வட்டமடித்து விட்டு திரும்பவும் வந்து இதயத்தின் கூரையில் அமர்ந்து கொள்கிறது. நன்றியுணர்ச்சி  ஒரு நாகத்தைப் போலே  " புஸ்.." " புஸ்..." என்று சீறிக் கொண்டிருக்கிறது. இவரோ ஒரு மோசமான அப்பாவி அதன் வாலைப் பிடித்து இழுக்க முயல்கிறார்.

இளிப்பபுக் கவிதைகள்

                                  இளிப்பு - 1 காலத்திற்கு அணையவே அணையாதே இளிப்புப்பசி தீரவே தீராத இளிப்பு நோய் அதற்கு நாள்தோறும் கணந்தோறும்  இளித்துக் கொண்டே இருக்க வேண்டும் தயவுசெய்து காலத்தின் மேல் புனித அங்கியைப் போர்த்தாதீர்... அது கிழட்டு ஜீவன்களின் நடைவழிகளில்  குச்சியை குறுக்கே விடும் சிறுவன்          அல்லது முத்தமிட்டபடியே தொடையை அடைந்து சிகரெட்கங்கை யோனிக்குள் திணிக்கும் நஞ்சகன் காலத்தின் விக்ரகத்திற்கு திருமஞ்சனம் செய்யாதீர்... அதற்கு நாள்தொறும் கணந்தொறும் இளித்துக் கொண்டே இருக்க வேண்டும் அப்படி இளிக்க ஏதும் சிக்காமல்தான் நேற்று பாலத்தின் மீது பயணித்துக் கொண்டிருந்த குழந்தைகள் பேருந்தை லைட்டாக ஆட்டிப் பார்த்தது அது.                                இளிப்பு - 2 எது நடந்துவிடக் கூடாது என்று    வாழ்நாளெல்லாம்  அஞ்சி அஞ்சிச் செத்து வந்தானோ  கடைசியில்  அது நடந்து விட்டது. மண்டியிட்டு குமுறிக் கொண்டிந்தவனிடம் " அதை நடத்திப் பார்க்கத்தானே உனக்கு வாழ்நாளே..."  என்று சொல்லிவிட்டு அண்டங்கள் ந

துக்க காக்கை

                                                                                   மகிழ்ச்சி  எல்லாவற்றையும்  மங்கலாக்குகிறது; பறக்க விடுகிறது துக்கம் எல்லாவற்றையும் தெளிவாக்குகிறது; நிலைக்கு கொண்டுவருகிறது  இப்போது  இந்தக் காக்கையின் ஒவ்வொரு மயிரையும்  என்னால் காணமுடிகிறது.

உலகியல்

                                                       புதிதாக ஒரு டூ- வீலர் வாங்கிய சந்தோசத்தை சுக்குநூறாக உடைத்துப் போட்டது அதன் முகப்பில் வடிக்க ஒரு பெயர் இல்லை எனும் உலக வழக்கம் குதூகலத்தின் முகத்தோடு வீட்டிற்குள் நுழைந்துவிட்டு இன்று கெட்டியான   துக்கமாய் சாய்ந்து நிற்கும் அதையே வெறித்துக் கொண்டிருந்தது அத்தம்பதி எல்லாம் சில நிமிடங்கள்தான் பிறகு " விராட் கோலி “ அம் மனக்குறையை விரட்டி அருளினார்.