Sunday, July 19, 2009


எழுபது கடல் எழுபது மலை

எழுபது கடல் எழுபது மலை தாண்டி
எங்கோ இருக்கிறது
நான் தழுவ வேண்டிய உடல்
கடலெங்கும் சுறாக்கள் அலைகின்றன
மலையெங்கும் கொடுங்காவல் நிலவுகிறது
முதல் கடலின் பாதியில் நிற்கிறது
எரிபொருள் தீர்ந்த படகு
நான் ரொம்பவே சோர்ந்துவிட்டேன்
தாகமாய் தவிக்கிறது எனக்கு
இவ்வளவு பெரிய கடலுக்கு நடுவே
எனக்கு ஒருவாய் நீரில்லை
இன்னும் 69 1/2 கடல்களும்
எழுபது மலைகளும் மீதமிருக்க
துளியும் எள்ளலின்றி
குரல் தழுதழுக்கச் சொல்கிறேன்
“யாம் ஷகிலாவின்
பாத கமலங்களை வணங்குகிறோம்”

- நன்றி: உயிர் எழுத்து

Sunday, July 12, 2009


கர்த்தரின் வருகை
சமீபமாயிருக்கிறது

கர்த்தர் வருகிறார்
அவர் நமக்காய் கொண்டு வரும்
புளித்த அப்பங்கள்
ரொம்பவே புளித்து விட்டன
ஆனால், கர்த்தர் வருகிறார்

உங்கள் அன்பில்
நண்பர்களுக்கு சலிப்பேறி விடலாம்
உங்கள் காதலியை
புத்திசாலிகள் களவாடிக் கொள்ளலாம்
கர்த்தர் வருகிறார்

பாதி வழியில் அவர் வாகனம்
பழுதாகி நின்று விட,
அவர் நடந்து வருகிறார்
ஆனாலும் கர்த்தர் வருகிறார்

இன்னுமொரு தேர்தல் முடியட்டும்
இன்னொரு மக்களாட்சி மலரட்டும்
கர்த்தர் வருகிறார்

எப்போதும் மிரட்டிக் கொண்டிருப்போர்
இன்னும் கொஞ்சம் மிரட்டட்டும்
எப்போதும் இறைஞ்சிக் கொண்டிருப்போர்
இன்னும் கொஞ்சம் இறைஞ்சட்டும்
இரட்சிப்பின் நாயகர் வருகிறார்

கர்த்தர் ஒருவரே
அவருக்கு உதவியாளர்கள் யாருமில்லை
அவரே எல்லா இடங்களுக்கும்
வர வேண்டி இருக்கிறது
ஆனாலும் அவர் வருகிறார்

நீதியின் மீது பசிதாகமுடையோருக்கு
இன்னும் கொஞ்சம் பசிக்கட்டும்
வெகு காலம் பற்கடிப்பில் உள்ளோர்
இன்னும் கொஞ்சம் கடிக்கட்டும்
கர்த்தாதி கர்த்தர் வருகிறார்
இன்னும் கொஞ்சம் எரிகணைகள் வீழட்டும்
இன்னும் கொஞ்சம் ஓலங்கள் கூடட்டும்
கர்த்தர் வருகிறார்

பயப்படாதே சிறு மந்தையே!
கர்த்தர் on the way.

Friday, July 10, 2009


துயரத்தின் கை மலர்இசைகவிதையைப் பற்றிய எந்தவொரு பேச்சும் முழுமையடையாததே. விடுபடல்களைக் கொண்டதே. கவிதை நம் எல்லாப் பேச்சுகளுக்கும் அப்பால் எங்கோ நிகழ்கிறது. அதனாலேயே நாம் கவிதையைத் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிறோம். ஒரு கணத்தில் கவிதையைப் பற்றி எல்லாம் தெரிந்துவிடுகிறது. இன்னொரு கணத்தில் தெரிந்ததெல்லாம் மறந்து போகிறது. இந்த பேச்சும் முழுமையடையாததே. விடுபடல்களைக் கொண்டதே. இது நிச்சயமற்ற பாதைகளின் வழியே பயணித்து கவிதையை தொட்டுவிட முயல்கிறது. இந்தக் கட்டுரையில் பாதியை நான் மாணவர்களை நோக்கியும் மீதியை எனக்கு நானே என்னை நோக்கியும் எழுதியிருக்கிறேன்.

------ ------ -----

நீங்கள் கவலை கொள்ளாதிருங்கள். நாம் எல்லோரும் கவிஞர்களாகவே இருக்கிறோம். கவிதை நம் வாழ்விலிருந்து மெல்ல அசைந்து முகம் காட்டுகிறது. இவ்வாழ்க்கை மனம் கசந்து அழவைக்கிறது, மகிழ்ச்சியில் திளைக்கடிக்கிறது. காரணமில்லாமல் தனிமைக்குள் தள்ளுகிறது. பயமுறுத்துகிறது. உற்சாகமூட்டுகிறது. தாங்க இயலாத அளவிற்கு அன்பையும் சகிக்க இயலாத அளவிற்கு துரோகத்தையும் பரிசளிக்கிறது. கொலை செய்ய ஆத்திரமூட்டுகிறது. தற்கொலைக்குத் தூண்டுகிறது. அவமானப்படுத்துகிறது. மன்றாட வைக்கிறது. தீராத விசித்திரங்களையும் எண்ணற்ற புதிர்களையும் நமக்கு விரித்துக் காட்டுகிறது. இவை எல்லா மனிதனுக்குள்ளும் பரவலாக நிகழ்பவை. ஒரு குறிப்பிட்ட அர்த்தத்தில், இது போன்ற கணங்களை மொழியின் மூலமாக கடத்தத் தெரிந்தவனை நாம் கவிஞன் என்கிறோம். இப்படியாக கவிதையில் மொழி என்பது ஆகப் பிரதான இடம் வகிக்கிறது. இந்தக் கவிதை மொழி நமக்கு தொடர்ந்த வாசிப்பினாலும் பயிற்சியினாலும் கைவரக் கூடிய ஒன்றே.

எனக்கு எழுத்து என்பது எப்போதும் மகிழ்ச்சியான விஷயமாக இருந்ததில்லை. அது ஒரு சிதறடிக்கப்பட்ட மனதின் தவிப்பும் வேதனையுமாகும். ஒரு பெரும் களிப்பை எழுதிக் கொண்டிருக்கும்போதும் எழுதுதல் என்பது ஒரு வேதனையே. இதை தலைகீழாகத் திருப்பி இப்படியும் சொல்லலாம். எவ்வளவு பெரிய துயரத்தை எழுதும்போதும் எழுதுதல் என்பது சந்தோஷமளிக்கக் கூடியதே. எழுத்து ஏன் வேதனையாக இருக்கிறது என்றால் கவிதை யாருக்கும் கைகட்டி சேவகம் செய்வதில்லை. ‘திறந்திடு சீசே’ என்று சொன்ன மாத்திரத்தில் அது திறந்துவிடுவதில்லை. அது நம்மை அலைக்கழிக்கிறது. வேதனை கொள்ளவைக்கிறது. சோர்வை உண்டு பண்ணுகிறது. நம்மைப் பற்றிய தாழ்வு மனப்பான்மையை உருவாக்குகிறது. கவிஞர் தேவதச்சனுடனான தொலைபேசி உரையாடலின்போது அவர் சொன்னார்,
“நாம் 100 கவிதைகள் எழுதியிருக்கலாம். ஆனால் 101வது கவிதைக்கு 100 கவிதைகள் எழுதிய அனுபவம் உதவுவதில்லை.”
இது என்னளவிலும் உண்மையாகவே இருக்கிறது. எழுத்து ஏன் சந்தோஷமளிக்கக் கூடியதாக இருக்கிறதென்றால், அது அன்பு செலுத்துவதாக இருக்கிறது. அது எழுதுபவனை நேசிப்பதாகவும் கொண்டாடுவதாகவும் இருக்கிறது, முதலில். பிறகு அது எழுத்தாளனின் காதல்களை கொண்டாடவும் முத்தமிடவும் நன்றி செலுத்தவும் உதவுகிறது. எழுத்து ஏன் சந்தோஷமளிக்கக் கூடியதாக இருக்கிறதென்றால், அது நம் உள்ளுயிரின் வேட்கைக்கு உணவிடுவதாக இருக்கிறது. எதையெதையோ தேடியலையும் மனத்தை அவ்வப்போது ஆற்றுப்படுத்துவதாக இருக்கிறது. எழுத்து என்பது எனக்கு ஒரு வெளியேற்றம். எனது சில கவிதைகள் என்னை பைத்தியமாவதிலிருந்து தப்பிவித்திருக்கின்றன என்று என்னால் உறுதியாகச் சொல்லமுடியும். நான் என் எழுத்தின் வழியாக என்னை வதைத்தெடுக்கும் துயரங்களிலிருந்து, தவிப்புகளிலிருந்து, காதலிலிருந்து, காமத்திலிருந்து, வெறுமையிலிருந்து வெளியேறுபவனாக இருக்கிறேன்.

------ ------ ----

கவிதை சட்டென்று உடைத்துக் கொண்டு என்னுடையதா என்று தெரியாத சொற்களையெல்லாம் திரட்டி தன்னை எழுதிக்கொள்ள முயற்சிக்கிறது. பிறகு நானும் கவிதையும் அமர்ந்து பேசி, சில சொற்களை சேர்த்து, சில சொற்களை நீக்குகிறோம். எப்படியாயினும் எல்லா அமர்விலும் கவிதையே என்னை ஆளுமை செலுத்துகிறது. சில சமயங்களில் எழுதுவதற்கான உந்தம் இருந்தும் எழுத முடியவில்லை. எழுதுவதற்கான பெரிய அவசம் ஏதும் இல்லாத போதும் ஒரு கவிதை நிகழ்ந்துவிடுவதும் உண்டு. இதுபோன்ற கவிதையின் புதிர்களை ஒருக்காலும் புரிந்து கொள்ள முடிவதில்லை. அதனாலேயே கவிதை இன்னும் இளமையின் வசீகரத்தோடு இருக்கிறது.

என் கவிதைகள் துயரத்தையே அதிகம் பேசுகின்றன. ஆனால் துயரத்தை மட்டும் பேசு என்று நான் அதற்கு கட்டளையிடுவதில்லை. அப்படி கட்டளையிடவும் முடியாது. ஆனாலும் அவை துயரத்தையே தன் பேச்சாக தெரிவு செய்கின்றன. “நான் எவ்வளவு பெரிய சுக போகி . . . , களியாட்டுக்காரன் . . . , அறை அதிரச் சிரிப்பவன் . . . , எத்தனை காதல்களை கொள்பவன் . . . , எத்தனை காதல்களை கொடுப்பவன் . . . இப்படி அழுது வடியாதே” என்று எத்தனையோ முறை நான் கெஞ்சியாகிவிட்டது. ஆனாலும் “துயரத்தின் கைமலராக” இருப்பதையே அவை விரும்புகின்றன. இதை யோசிக்கையில் ஒவ்வொரு படைப்பாளிக்கும் தன் எழுத்தில் எதைச் சொல்ல வேண்டும் என்பதில் அவன் அறிந்தோ அறியாமலோ ஒரு தேர்வு இருக்கவே செய்கிறது என்று தோன்றுகிறது. அல்லது ஒவ்வொரு படைப்பாளிக்கும் அவன் படைப்பு மனத்தை தூண்டிவிடுவது சில குறிப்பிட்ட விஷயங்களாக அமைந்துவிடுகின்றன என்றும் கருதலாம். என் கவிதையில் தொழில்படும் அங்கத உணர்வே இந்த அழுகையின் அலுப்பிலிருந்து வாசகனை விடுவித்து ஒருவித புத்துணர்வையும் வாசிப்பின்பத்தையும் அளிக்கிறது என்று நான் கருதிக் கொண்டிருக்கிறேன். இப்படி என் கவிதைகள் துயரத்தையே சொல்லி அழுவதைக் குறித்து என் நண்பர்களிடம் நான் பலமுறை முறையிட்டிருக்கிறேன். எனது அண்மைக் கவிதையான ‘கலைத்தன்மை மிளிரும் வீடு’ என்ற கவிதையைப் படித்துப் பார்த்த ஒரு நண்பன், “இந்தக் கவிதையில் சந்தோஷம் பொங்கி வழியுது நண்பா,” என்று சொன்னான். அதைக்கேட்டு நான் மிகவும் உற்சாகமாகிவிட்டேன். ஆனால் பொங்கி வழியும் சந்தோஷத்தினூடே என் இயலாமையும் வருத்தமும் சேர்ந்தே பதிவாகி உள்ளது என்பதை சீக்கிரமே உணர்ந்து கொண்டேன்.
அந்தக் கவிதை,

கலைத்தன்மை மிளிரும் வீடு

“இதுபோல் ஒரு வீடு வேண்டும்”
என்று நீ கேட்ட போது
என்னிடம் பாக்கெட்டில், பீரோவில்
வங்கிக் கணக்கிலென
ஒரு பதினான்காயிரம் ரூபாய் இருந்தது.
இதை நான் உணர்ந்த போது
அம்மாளிகை என்னைப் பார்த்து
சத்தமிட்டுச் சிரித்தது.
ஆனால் அக்கணத்தில் பீறிட்டெழுந்த
என் அன்பின் பெருக்கில்
எண்ணற்ற சொற்கள்
மிதந்து வந்தன.
அதில் ஒரு கூரான சொல்லைக் கொண்டு
நிலத்தை அகழ்ந்தேன்.
இருப்பதிலேயே வலுகொண்ட சொற்களைப் பொறுக்கி
வரிசை கட்டினேன்.
கண்களை உறுத்தாத
இள வண்ண சொற்களால் பூசினேன்.
அலங்காரமான சொற்களை
தகுந்த இடங்களில் வேய்ந்தேன்.
இன்று இந்த நகரத்தில்
கலைத் தன்மை மிளிரும் வீடு என்று
எல்லோராலும் போற்றப்படுவது
உனது வீடு தான்.

(சந்தோஷிக்கு)

என் கவிதைகளில் சொற் சிக்கனம் இருக்க வேண்டும் என்பதைக் காட்டிலும் இசைத்தன்மை கூடி வர வேண்டும் என்பதையே நான் விரும்புவதாக சந்தேகிக்கிறேன். இசையின் பெரும் துடிப்பு எதுவும் என் கவிதைகளில் இல்லாத போதும், என்னளவில் ஒரு இசை அதில் இயங்கிக்கொண்டிருக்க வேண்டும் என்று விருப்புகிறேன். இதற்காக கவிதைக்கு தேவையற்றது என்று சொல்லப்படுகின்ற சில வாக்கியங்களையும் நான் கவிதையில் அனுமதிப்பதாக நினைக்கிறேன். இந்த வாக்கியங்கள் எனக்கான பிரத்தியேக கவிதை மொழி ஒன்றை உருவாக்குவதிலும் துணை செய்கின்றன என்று கருதுகிறேன். நான் ஆசு கவியல்ல. சிற்சில கவிதைகள் தவிர்த்து என் கவிதைகள் ஒரே வீச்சில் எழுதப்பட்டவையல்ல. சில கவிதைகள் வாரங்களையும் மாதங்களையும் கோருபவை. என்னுடைய கவிதைத் தொகுப்பில் இடம் பெற்றிருக்கிற ‘குரல் முத்தம்’ என்கிற மிக எளிய கவிதையை நான் ஒரு வருடமாக எழுதி எழுதி பார்த்து கடைசியில் அரை மனதோடே தொகுப்பில் சேர்த்தேன். இத்தகைய எடிட்டிங் என்று சொல்லப்படுகின்ற வெட்டி ஒட்டும் தொழில் நுட்பம் கவிதைக்கு அவசியமானதென்றே கருதுகிறேன். ஏனெனில் கவிதை யாரிடமும் மண்டியிடுவதில்லை. கவிதையின் முன் நாம் எல்லோரும் மண்டியிடுகிறோம். மார்ச் – 09 தீராநதி இதழில் ஒரு கவிதையை வாசித்தேன். செல்மா ப்ரியதர்ஸனுடையது . . .

இன்னும் நமது மழைக்காலம் துவங்கவில்லை’

என்று தலைப்பிட்ட அக்கவிதை . . .

நம் ஆறு தலைகீழாய் தொங்குகிறது.
மழை இன்னும் வந்து சேரவில்லை.
கால்நடைகள் தொட்டிகளை
நோக்கி காத்திருக்கின்றன.
மூதாட்டிகள் முளை நெல்லை நோட்டமிடுகிறார்கள்
நாம் நமது கிண்ணங்களை ஏந்தி நிற்கிறோம்.
சிறுவர்கள் தமது கரங்களை விரிக்கிறார்கள்.
- - - - - - - - - - - - - - - - - - - - -
- - - - - - - - - - - - - - - - - - - --


ஏதோ ஒரு மழைக்காய் காத்திருப்பதாக தோற்றம் தருகிற இந்த எளிய வரிகளில் முதல் வரி என்னை மிகவும் கவர்ந்தது. இயல்பு வாழ்வின் புழங்கு தளத்தில், சாதாரண மக்கள் மன்றாடலைக் குறிக்கப் பயன்படுத்தும் தலைகீழாய் நிற்பதான இந்த சொற்றொடர் கவிதைக்குள் வருகையில் அற்புதமான புனைவாக உருவாகியிருக்கிறது. ஏனென்று தெரியாமல் அவ்வப்போது வந்து சேரும் கவிதை பற்றிய அலுப்பிலிருந்து இது போன்ற ஒரு வரி அல்லது ஒரு சொல் கூட என்னை மீட்டெடுத்துவிடுகிறது. இது போன்ற எண்ணற்ற வினோதங்களால் கவிதை தானும் உற்சாகமாகி என்னையும் உற்சாகி ஆக்குகிறது. நான் அலுப்பை உதறி விட்டு வாசிப்பதை எழுதுவதை தொடர்கிறேன்.

நன்றி.


09-03-2009 அன்று நாமக்கல் சுப்ரமணியம் கலைக் கல்லூரியில் காலச்சுவடு அறக்கட்டளை ஒருங்கிணைத்த 'நவீன கவிதை புரிதலை நோக்கி ' என்ற நிகழ்வில் வாசிக்கப்பட்ட கட்டுரை.