Skip to main content

Posts

Showing posts from March, 2021

சிரிப்பு லாரி

   ஐ வர் கைமாற்றி கைமாற்றி சுமையேற்றிக் கொண்டிருந்தனர். பெருமூச்சுக்களும், முனகல்களும் வரிசைகட்டி லாரியில் ஏற்றப்படுகின்றன. முகங்கள் கல்லென இறுகி உடல்கள் வியர்த்து அழுதன. இடையில் ஒருவன் தடுமாறி விழப்போனான். நண்பர்கள் அவனைக் கேலி பேசிச் சிரித்தனர். விழப்போனவனும் சேர்ந்து சிரிக்க இப்போது  அங்கே தோன்றிவிட்டது ஒரு விளையாட்டு. பிறகு அவர்கள் கைமாற்றி கைமாற்றி விளையாடத் துவங்கிவிட்டார்கள். அந்த லாரியில் பாதிக்கு மேல் சிரிப்புப் பெட்டிகள்.

பட்டு

  தி டீர்ஆய்வுகளின் போது ஒரு அரசு அலுவலகத்தைப் பார்த்திருக்கிறாயா? எல்லாக் குப்பைகளின் மீதும் எல்லா அழுக்குகளின் மீதும் பளபளக்கும் விரிப்புகள் பல அவசரவசரமாகப்  போர்த்தப்படும் உலகைப் போர்த்தியிருக்கும் அந்தப் பளபளக்கும் பட்டை தூக்கிப் பாராதே தம்பி!

திருக்கோலம்

ப னிபூத்த இந்த மார்கழிப் பொழுதில் வீட்டின் முன்  கோலம் கொண்டிருக்கிறாள். அமர்ந்த கோலமோ குனிந்த கோலமோ அன்று இது  தனிக்கோலம். ஒன்றில் ஆழ்ந்து கரைகையில் கொள்ளும் திருக்கோலம். ஈரக் கூந்தலினின்று சொட்டுச் சொட்டாய் நழுவிவிழும் நீர்த் துளிகள் அழிப்பதற்குப் பதிலே ஆக்கி ஆக்கி அளிக்கின்றன. உலகை ஆசிர்வதித்தபடி கொஞ்சமாய்  உந்தி வளையும் குதிகால்பிறை சிருஷ்டியின் பூரிப்பு அவள் தன்னுள்ளே சிதறிக் கிடக்கும் புள்ளிகளை ஒன்றிணைத்து ஒரு கோடிழுக்கிறாள் வாசலில் உதிக்கிறது புத்தம்புது கோலமொன்று.

பயணம்

  இ ருசக்கர வாகனப் பயணத்தில் தந்தைக்கும் தாய்க்கும் இடையிலான இறுக்கத்துள் புதைந்துகிடக்க விரும்பாமல் சீட்டின் மீது நின்றபடியே பவனி வருகிறாள் ஒரு சிறுமி. அவள் தலை வெளியின் பூரணத்துள் திகழ்கிறது. சிகை காற்றின் இனிமையில் நடனிக்கிறது. என் செல்லமே! எதன் மீது ஏறி நிற்பேன் நான்?