Skip to main content

Posts

டெஸ்கில் தாளமிடும் பையன்கள்

  உ ங்களுக்கு  டெஸ்கில் தாளமிடும்  அந்தப்  பையனை  நினைவிருக்கிறதா? அவன் ஒவ்வொரு வகுப்பிலும் உண்டு பெரும்பாலும்  கடைசி பெஞ்சில்  ஒளிந்து கொண்டு டெஸ்கில்  தாளமிடும் பையன் என்றொருவன்  இருந்தால் அவனுக்குக்  காதலி என்றொருத்தி கட்டாயம் இருப்பாள் மதிப்பெண் அட்டை வழங்கப்படும் நாட்களில் எல்லா மதிப்பெண்களையும் ஒன்றாக்க வேண்டி அவர்கள் கட்டாயம்  இசைப்பார்கள் டெஸ்கில் தாளமிடும் பையன்கள் டிரம்ஸ்சைத்  தொடாமல் பறையைத் தொடாமல் தாளத்தைத் தொட்டார்கள் பிறகு அவர்கள் தாளத்திலிருந்து எழுந்து கல்லூரிக்குப் போனார்கள் அலுவலகம் போனார்கள் வீட்டுக்குப் போனார்கள் ஷமத்துக்குப்  போனார்கள் தந்தைக்குப் போனார்கள் டெஸ்கில் தாளமிட்ட பையன்கள் டெஸ்கில் தாளமிடும் பையன்களைக் காண்கிறார்கள் ஒரு நினைவும்  இல்லாமல்
Recent posts

கடவுள் இருக்கிறாரா?

ஒ வ்வொரு புலரியிலும் சிரத்தையொடு மலர் கொய்து  கடவுள்களை அலங்கரிக்கிறாள் ஒரு வனிதை அவளுக்கு கனவுகள் இல்லை கண்ணீர் இல்லை பயமும் பக்தியும் கூட இல்லை. இந்த உலகில் மலர்கள் இருக்கின்றன என்பது தவிர அவளுக்கு  வேறொன்றுமில்லை

இட்ட அடி நோவ எடுத்த அடி கொப்பளிக்க

  இ ட்ட அடி நோவ  எடுத்த அடி கொப்பளிக்க அதையே பார்த்துக் கொண்டிருந்தேன் மண்ணூன்றி நின்றாலும் தூசிகளால் அண்ட முடியாத அதையே பார்த்துக் கொண்டிருந்தேன் மேன்மைகளின் ஓயாத நச்சரிப்புகளிலிருந்து மேன்மக்களை மீட்க வல்ல அதையே பார்த்துக் கொண்டிருந்தேன். சாம்ராட்களின்  அவர்தம் குதிரைகளின் மூச்சிளைப்புகளைக் குணமூட்ட வந்த அதுதான் விஞ்ஞானிகளை எலிக் கூண்டிலிருந்து இழுத்து வந்தது ஞானியரின் எல்லா யோகங்களையும் சுருங்கச் சுருக்கி ஒன்றே ஒன்றாய் ஆக்கி அருளிய அதையே பார்த்துக் கொண்டிருந்தேன் மாட்டிற்குப் பதிலாய் வண்டியிழுக்கும் ஒருவனை வானத்தை நோக்கி விசிலூத வைத்தது  எதுவோ அதையே பார்த்துக் கொண்டிருந்தேன் அது   "வருகிறாயா?"  என்றது எங்கே என்று நான் எப்படிக் கேட்பேன்?

தேநீர்க் கடைச்சந்தனம்

மு தல் முறை பார்த்த போது ஊரும், பேரும் விசாரித்தேன்  என்பது தவிர உறவேதுமில்லை இப்போது ஊர் மட்டும் நினைவிருக்கிறது இடையில் சில மாதங்கள் காணாமல் போய்விட்ட அந்த வளரிளம் சிறுவன் இன்று மீண்டும் தென்படுகிறான் கருத்த வதனத்தின் நெற்றிப் பொட்டில் சந்தனத்தின் பொன் ஊஞ்சல்  அன்று போலவே ஆடிக் கொண்டிருக்கிறது என்னை தூரத்தில் கண்டதும் முகம் முழுக்க அரும்பி  நெளிந்து  குழைந்து நெருங்கி வந்து "சாப்பிட்டீங்களாண்ணே...?" என்றான். நேரம் அப்போது  முற்பகல் 11: 30 ஆகவே அது காலை உணவைக் குறிக்காது மதிய உணவைக் குறிக்காது உணவையே குறிக்காது

மழை என்பது பஜ்ஜி விருந்து

  "உ யிரின் சுபாவம் ஆனந்தம்"  என்கிறான் தேவதேவன். பார்க்கப் பளபளக்கும் ஒரு வரி இது தென்படும் ஒவ்வொரு மனிதனிடமும் வினவுகிறேன்.. "ஆனந்தத்தைப் பார்த்தாயா?" அதன் அங்க அடையாளங்களை வினவுகிறான் அவன் நானும் பார்த்ததில்லை பார்த்தவர்களைப் பார்த்துவிட்டால் கூட போதும் கண்ணைக் கொஞ்சம்  மூடினால் கண்டுவிடலாம் காதைக் கொஞ்சம்  மூடினால் கேட்டு விடலாம் பாவம், நம்மால் அது முடியாது. ஆனந்தம் மனிதனின் ஆறடிக்கு மேல் அறுபதடி உயரத்தில் இருக்கிறது உயிரின் சுபாவம் கிளுகிளுப்பு ஆனால், அதைச் சொல்ல மாட்டான் தேவதேவன்.                நன்றி; காலம்- 60

அணைந்து எரியும் சுடர்

"அ ந்த நாட்கள்  எவ்வளவு அழகாக இருந்தன..!" என்றான் அவன். பிறரும் அதை ஆமோதித்தனர் அந்த நாட்களுக்கு  அப்படி என்ன அழகு? என்று தீவிரமாக  யோசித்தேன் அவை அந்த நாட்கள்  ஆகிவிட்டன  என்பதைத் தவிர வேறொன்றும் சிக்கவில்லை.

வினையாலணைதல்

  மு ன்பு புதர் திருத்த வந்த இளைஞர்களில் ஒருவன் என்ன நினைத்தானோ ஏது நினைத்தானோ திடீரென அரிவாளை எறிந்து விட்டு வேகமெடுத்து ஓடி எழும்பிக் குதித்து கைகளைச்  சுழற்றி இல்லாத பந்தை தூர வீசினான். நடுக்குச்சி தெறித்தே விட்டது ஆரவாரம்...! ஆரவாரம்...! கூச்சலற்ற ஆரவாரம்! மனம் சூம்பிக் கிடக்கும் இந்நாளில் வழிப் பிள்ளையாருக்கு வணக்கம் சொல்லும்  பக்தனென முத்தம் வைத்து நடக்கிறேன் இன்னும் அந்தரத்தில் அப்படியே நிற்கும் அந்தப் பந்திற்கு