Skip to main content

Posts

Showing posts from January, 2013

நல்லறம் வீற்றிருக்கும் டோக் நகர்

மதுரை மாநகரின் இச் சனிக்கிழமை நள்ளிரவில் ஒரு டாஸ்மாக்கிலிருந்து டோக் நகருக்கு போய்க்கொண்டிருக்கிறது இருசக்கரவாகனமொன்று. இப்போதந்த வாகனத்தில் ப்ரேக் இல்லை ஹாரன் இல்லை லைட் இல்லை ட்யூபும் டயரும் கூட இல்லை ஒரு எக்ஸலேட்டர் மட்டும் அது கூட ஒரு உற்சாக புலியின் கையிலிருக்கிறது உற்சாகபுலிக்கே கூட ஒரு கை மட்டுமே இருக்கிறது தலை தொங்கிவிட்டது எதிரே நிற்கும் கனத்த மின்கம்பத்திற்கு புலியை குட்டியிலிருந்தே தெரியும் அது கவியானதும் தெரியும் இன்று காலையில் தான் காப்பியமுயற்சி ஒன்றிற்கு காப்புப்பாடல் எழுதி வைத்திருப்பதும் தெரியும் " உ...................ம்ம்ம்ம்.... " எனும் கனைப்பொலி நெருங்கி முட்டும் கணத்தில் ஒரு 60 டிகிரி சாய்ந்து எழுகிறது மின்கம்பம். காலைவணக்கம் கவிஞரே ! ( ஸ்ரீதர் ரங்கராஜிற்கு )

சத்தியலோகத்து வீணைக்கு இரத்தப்பலி கொடுப்பவன்...

“ கடவுள் அவன் கையகத்தே கொஞ்சம் சொற்களைத் திணித்து, தீரவே தீராத ஒரு நுரையீரல் அடைப்போடு உன்னை படைக்கிறேன்..இவை அவ்வப்போது உன் மூச்சுத்தவிப்பை சொஸ்தப்படுத்தும் என்று சொன்னார்  ..”             சத்தியலோகத்து வீணைக்கு இரத்தப்பலி கொடுப்பவன்...   ( கணேசகுமாரனின் “ பெருந்திணைக்காரன் “ தொகுப்பை முன் வைத்து.. )                                                                                    - இசை-          சிறுகதை எனும் கலாவடிவத்தை கண்டங்களைத் தாண்டி நகர்த்திடும் முனைப்பேதும் இக்கதைக்களுக்கு இல்லை. அதற்கான நிதானமும், அவகாசமும் இக்கதைகளுக்கு வழங்கப்பட்டிருக்கவில்லை.நின்று நிதானிக்க முடியாத ஒரு கொடுந்துயரின் தவிப்பே இக்கதைகளை எழுதிச்செல்கிறது.எனவே சில சமயங்களில் இவை வாய்விட்டு கத்தி விட நேர்ந்திருக்கிறது. வாழ்வின் கடைக்கோடியில்  ஒண்டிக்கிடக்கும் மனிதர்களையே நாம் இக்கதைகளில் திரும்ப திரும்ப பார்க்கிறோம். அனேக கதைகளில் இரத்தம் சிந்திக் கிடக்கிறது. சிலதில் இரத்தத்தைப் போன்றதான சுக்கிலம்.சிலதில் இரத்தமும்   சுக்கிலமும்    சேர்ந்து.  வதைமுகாம் ஒன்றிலிருந்து அம்மணமாக, உயிருக்குத் தப்ப

மைக்ரோஸ்கோப்பில் கண்டறியப்படு்ம் நுண்ணுயுரி ( தூரன் குணாவின் ‘ கடல்நினைவு “ தொகுப்பை முன்வைத்து )

நான் கெட்ட வார்த்தைகள் அர்த்தமற்று புழங்கும் நிலத்திலிருந்து வருகிறேன். அங்கே சும்மாணாச்சிக்கு கோபப்படுவது , நிஜமாகவே சினம் கொள்வது , மண்ணள்ளி தூற்றுவது என் எல்லாவற்றிற்கும் கெட்ட வார்தைகள் தான். அங்கே போலியாக நடிப்பது, காதலாகி கசிவது, நெஞ்சைப் பிளந்து காட்டுவது என எல்லாவற்றிற்கும் கெட்டவார்தைகள் தான். “ தாயோழி ஒரு டீ சொல்லு “ என்பது என் நிலத்தின் ப்ரியம். பழனி திரைப்படம் ஓடிக்கொண்டிருந்த அரங்கின் மையத்திற்கு வந்த ஒரு முதியவர் கண்களில் தாரைவிட்ட படியே “ தாயோழி மகனே ... என்னமா நடிக்கிற “ என வெடித்து சிதறியது என் நிலத்தின் ஹைலைட். சமீபத்தில் பா. வெங்கடேசனின் ‘ ராஜன் மகள் “ கதையை வாசித்த போது மனம் ஓயாமல் கெட்ட வார்த்தை சொல்லிக் கொண்டே இருந்தது. அசாத்தியமான சொற்கட்டும், ஒரு தேர்ந்த இசைஞனின் லய ஒழுங்கும் கூடி எழுப்பப் பட்டிருக்கிற அந்தக் கதையை சொல் சொல்லாக வாசித்தேன். ஒவ்வொரு சொல்லிற்கும் ஒரு கெட்டவார்த்தை. தற்போது தூரன் குணாவின் ‘ கடல் நினைவு’ தொகுப்பின் பின்பாதி கவிதைகளின் சிலவரிகள் கெட்ட வார்த்தை சொல்ல வைத்தன.இது முதல் வாசிப்பில் தான். அடுத்தடுத்த வாசிப்ப்புகளில் முன்பாதி கவிதைகள