Skip to main content

Posts

Showing posts from September, 2015

ஐயோ… இந்தக் கரிப்பு !

எனக்கு எம்ஜியாரை அறவே பிடிக்காது அதிகாலையிலேயே அவர் கவுண் உடையில் தோன்றி ஏதோ சூளூரைத்துக்கொண்டிருந்தார். எனவே சேனலை மாற்றினேன். மாற்றிய கையோடு   எதேச்சையாய் கண்ணாடி பார்க்க அது ரசமிழந்து உளுத்திருந்தது. அதை மாற்றினேன். அழுக்கு அரசாளும் சீப்பை மாற்றினேன். இந்த பாத்ரூம் பைப்பை மாற்ற வேண்டுமென்று பல்லூழிகளாக எண்ணிக்கொண்டிருந்தேன். இன்று அதை மாற்றினேன். அண்ணாந்து நோக்க COFFE- யும் , தினசரியுமாக பால்கணியில் வீற்றிரு ந்தான் எதிர்வீட்டு சீமான். அவனை மாற்றினேன். என் மொபட்டை பள்ளத் துள் ஒதுக்கிவிட்டு பறக்கிறது ஒரு “ SCORPIO” அதை சைக்கிளாக மாற்றினேன். பணிமனையில் பக்கத்துசீட்டில் எப்போதும் ஓர் “ அப்போது அலர்ந்த தாமரை “ அதை மாற்றினேன். உணவுவேளையில் சோற்றுப்பொதி திறந்து அமர்ந்தால் 10 வாழ்க்கைகான உப்பை அள்ளிக் கொட்டியிருந்தாள்  பத்தினி. அந்த ரிமோட்டை என் நெற்றிப்பொட்டில் வைத்து ஒரு அழுத்து அழுத்தினேன்.

அற்றைத்திங்கள் அவ்வெண்ணிலவு

அவள் அழைத்த அப்பொழுது ரயில்படிக்கட்டில் அமர்ந்திருந்தேன். வானத்தில் பூர்ணிமை பொங்கி வழிந்து கொண்டிருந்தது. அப்பொழுது அதனுடன் மட்டுமே பேசத்தோன்றியது ஆகவே ஃபோனை எடுக்கவில்லை. திரும்பவும் வந்த அழைப்பை வேறு உலகத்திலிருந்து வந்து விழும் கல் போல் உணர்ந்தேன். எனவே அதை துண்டித்துவிட்டேன். இன்னொரு நாள் அழைக்கையில் அலுவலகத்தில் பழைய ஃபைலொன்றை தேடிக்கொண்டிருந்தேன். அவளை விடவும் அப்படியொன்றும் முக்கியமான ஃபைலில்லை தான். ஆனாலும் எடுக்கவில்லை. மூன்றாவது முறையாக அழைத்த போது இரண்டு காரணங்களை சொல்ல வேண்டியிருந்ததால் எடுக்கவில்லை. நான்காவது முறைக்கு 3 காரணங்களையும் ஐந்தாவது முறைக்கு 4 காரணங்களையும் கண்டறிய வேண்டியிருந்தது. அடுத்தடுத்த அழைப்புகளில் பிரியம் பூதமென்றாகிவிட்டது. விட்டுவிடவே கூடாத அன்புதான் ஆனாலும் விட்டுவிட்டேன். எல்லாம் அந்த “ பூர்ணிமா ” வை சொல்ல வேண்டும்!                            நன்றி : ஆனந்த விகடன்