Wednesday, June 3, 2015

ஆசையே இன்பத்துக்காரணம்
 இரண்டு இருக்கைக்கும் பொதுவாக
 ஒரு கைக்கட்டை போதுமென்று
 யோசித்துச்சொன்னவன் எவனோ
 அவனே நமது மூத்தகுடி.
 நம் மணிக்கட்டுகள் மகிழ்ந்து குலாவி
 அவன் புகழ் பாடுகின்றன
உன் இளஞ்சிவப்பு வரிக்குதிரை
என்னவோ சொல்கிறது
அதன் சத்தங்கள் என் நெஞ்சுக்குள் தாவி
குளம்பொலிக்க ஓடுகின்றன.
இவ்வளவு நேரமும்
எங்கேயோ நடந்து கொண்டிருந்த
எல்லா நிகழ்ச்சிகளும் முடிவடைந்து விட்டன.
நன்றியுரையும் தீர்ந்துவிடும் பட்சத்தில்
நாம் எழுந்து கொள்ளத்தான் வேண்டும்.
ஆனாலும்,
இந்த வாழ்க்கையை தூற்றி முணுமுணுக்காதே…
கடவுளின் கிருபையால் தானடி
நாம் ஒரே வீட்டில் வசிக்கவில்லை.
அவர் நமது ஏக்கத்தை ஆசிர்வதித்து
காதலை காத்து நின்றார்.

கார் சிறப்பு


                                 


வானம் கொஞ்சம் கறுப்பாய் இருக்கையில்
அன்பார்ந்த நடத்துனரே ,
10- லிருந்து  7- கழித்தால் எதுவுமே வாராது
என்கிற உங்கள் கணக்கை
மனப்பூர்வமாக ஒப்புக்கொள்கிறேன்.

வானம் கொஞ்சம் கறுப்பாய் இருக்கையில்
வீதியில் கிடக்கும் பூனைக்குட்டி
வீதியைத் தாண்டி
வாசலைத் தாண்டி
படி தாண்டி
என் படுக்கையில் ஏறி  என் மேலும் ஏறலாம்.

வானம் கொஞ்சம் கறுப்பாய் இருக்கையில்
போய்விடுவேன்போய்விடுவேன்
என்று மிரட்டிக்கொண்டிருக்கும் ஒரு  அன்பை
போய்விடு  என்று சொல்லிவிடலாம்.

 வானம் கொஞ்சம் கறுப்பாய் இருக்கையில்
அடியேன்  நல்லதொரு  நாட்டுக்கழுதை
எத்தனை  மூட்டையை  ஏற்ற முடியுமோ
அத்தனை  மூட்டையை  ஏற்றலாம்.


வானம் கொஞ்சம் கறுப்பாய் இருக்கையில்
சுமாராக பாடும்  ஒரு மனுசனுக்கு
பிரமாதம் என்கிற சொல்லை  வழங்கலாம்.


வானம் கொஞ்சம் கறுப்பாய் இருக்கையில்
யாரையும் முந்தாமல் எங்கேயும் போகாமல்
எங்காவது போகலாம்.

 வானம் கொஞ்சம் கறுப்பாய் இருக்கும் பட்சத்தில்
மொட்டை மாடியில் நிற்கலாம்
பொரி வறுத்துத் தின்னலாம்
டீ, காபி குடிக்கலாம்
மனைவியை  கூட  முத்தமிடலாம்.

                                     நன்றி : அம்ருதா - ஜூன் - 2015

சாய்ஸ்

                                   
               
 பிள்ளைவரம்  வேண்டி
  அரசமரம்  ஆலமரம்
  அந்தமரம்  இந்தமரம்
  கண்டமரம்  சுற்றிக்களைத்த  கடைசியில்
  இரங்கி வந்தது இறை
 “ தற்போதைய கையிருப்பு இரண்டு ஆண்மகவுகள்…            
  ஒரு  குழந்தை சச்சின் டெண்டுல்கர் என்று
  நாமகரணம் சூட்டப்படும்.
  16 வயதில்  மட்டையைத் தூக்கிக்கொண்டு உலகத்தின் முன் வருவான்
  தன் கதாவீச்சால்  சாதனைகளின்  நெஞ்சைப்பிளப்பான்
  ரூபாய், டாலர் , யென் என எல்லாவற்றிலும் சம்பாதிப்பான்.
  இவன்  துய்த்தெறிந்த   பொருட்கள்  லட்சங்களில்  ஏலம் பெறும்.
  இவனுக்கு  ஏக்கமே இராது
 அதன்  விளைவாக  கனவும் வாராது.
  புகழ்  வீங்கி  முற்றியதோர்  கட்டத்தில்
 “ கடவுள் என்றே அழைக்கப்படுவான்
   நீ கடவுளின்  தாயாக  இருப்பாய்
  இன்னொருவன் பெயர்  சத்தியமூர்த்தி
  லேசாக  நா  நடுங்கும்
 அவ்வப்போது  உடல் கிடந்து  உதறும்
 அவசரவசரமாக   மீசை அரும்பி
அக்காக்கள்  குளிக்கையில்  படலைப் பிரிப்பான்
பகல் முழக்க  தூக்கம்
இரா முழக்க ஆட்டம்
என்றலைந்து  திரிவான்.
அப்பாவை விழுங்கிவிட்டு
உன்னை வைத்து வைத்து  தின்பான்.
குலப்புகழின்  தொடைச்சொறி..
மலக்குழம்பில்  நெளிபுழு….
நின் கண்ணீரில் கரைந்தே கதை முழுக்க சொன்னோம்
இருவரில் ஒருவர்
யார் வேண்டும்  சொல் மகளே ! “
என் தாயவள்
மாசற்ற மாணிக்கம்
மாற்றுகுறையா தங்கம்
சத்திதான் வேண்டுமென்று
ஆடாது அசையாது
உறுதி காத்து நின்றதில்  பிறந்து வந்த குழந்தை  நான்
அன்னை ! அன்னைஅருட்பெருஞ்சோதி !
அன்னை ! அன்னைதனிப்பெருங்கருணை !