Skip to main content

Posts

Showing posts from November, 2010

நீலிக்கோணாம்பாளையத்தின் பீக்காடு

இன்று அதிகாலை பீக்காட்டுக்கு போனபோது
ஒரு டாங்கியைப் பார்த்தேன்.
ஆமாம் அதன் பெயர் டாங்கி தான்
பீரங்கி அல்ல.
பச்சை இலையும் காயந்த சருகும்
சேர்ந்திருக்கும் உடுப்பில்
அதில் இருவர் அமர்ந்திருந்தனர்.
இலங்கையில் போர் நடப்பது எனக்கு தெரியும்.
டி.வி யில் காட்டுகிறார்கள்.
இந்தக் காட்டை மறைத்து நிற்கும் கொட்டாயில்
நான் நிறைய சண்டைகளைப் பார்த்திருக்கிறேன்.
கடைசி சீனில் "டுமீல்" "டுமீல்" என்று
துப்பாக்கிகள் வெடித்திருக்கின்றன.
எதையோ வாயில் கடித்துத் துப்பிவிட்டு
குண்டுகளை வீசுவார்கள்.
நிலம் பிளந்து மண் எழும்பும்.
ஒரு மனிதன் அந்தரத்தில் வெடித்து சிதறுகையில்
நாங்கள் சீக்கி அடித்திருக்கிறோம்.
அந்த கொட்டாய்க்கு பின்னால் தான்
இன்று நீட்டிய குழலோடு ஒரு டாங்கி நிற்கிறது.
எனக்கு தெரியும்
சினிமாவில் எல்லாமே டூப்பு தான்.
ஆனால், நீலிக்கோணாம்பாளையத்தின் பீக்காட்டுக்குளிருந்து
ஒரு டாங்கி உருண்டு வருவதென்றால்
இது கனவு தானே நண்பர்களே....
கனவு தானே..
கனவு தான்.
ஒரு வேட்டு போட்டால் ஓடி விடாதா இந்த வன விலங்கு.
ஆனால் இது கனவு தானே?
கனவு தானே..
நண்பர்களே இது கனவு தானே..
கனவு தான்.
ஆறுமுகம் எதிரே வருகிறானே..?
பேடிப்பயலே.. அவன் க…

தூரன் குணா கவிதை

மிருகத்தின் ஆன்மாவை மேவுதல்

நான்
குறைந்தபட்சம் ஒரு மனிதன்
பழுப்பு வண்ணத்தை அடைந்துவிட்ட
என் கண்கள்
இந்த உலகின்
புராதன நீதிகளை தொழுகிறது
ஆனால் அதன் நீரடியில்
வெளியே கேட்காமலே அடங்குவது
ஒரு கலகக்குரல்…
நான் தொழும் தெய்வத்திற்கோ
இந்த உலகின் சம நிலையை
காக்க வேண்டிய கடமையிருக்கிறது
தெய்வத்திற்கும் எனக்குமான சமர்
ஒரு இருதயத்தின் தசை அளவைக்குள்
நிகழ்ந்து கொண்டிருக்கிறது
அப்போது எனது
கண்ணீர்த்துளிகள் விலையுயர்ந்தவை….
தெய்வம் பிதற்றும் நீதியை
முழுக்கவும் கண்ணீர்த் துளிகள் மறுக்கின்றன
தெய்வங்கள் சிலைக்குள்
வசிக்காத காலத்தில்
தெய்வத்திற்கு எதிரான சங்கீதம்
ஒலிக்கிறது
அப்போது ஒரு மிருகம்
தெய்வத்தின் ஆன்மாவை மேவுகிறது
நான்
மிருகத்தின் ஆன்மாவை மேவுகிறேன்
அக்கணம் வரலாற்றில் தட்டையாகவிருந்தது
எனபது கடந்தகாலம்.

சிட்டுக்குருவிகள் வேகமாக அழிந்துவருகின்றன

ஒரு அடைமழை நாளில்
சிட்டுக்குருவியொன்றை சந்தித்தேன்.
தொப்பர நனைந்திருந்த அது
ஒரு மரக்கிளையின் இலைமறைவில் அமர்ந்து நடுநடுங்கிக்கொண்டிருந்தது.
உடைந்த அதன் மூக்கிலிருந்து இரத்தம் வழிந்து கொண்டிருந்தது.
சிட்டுக்குருவிகள் வேகமாக அழிந்து வருகிற இந்த நாட்களில்
அது எங்கிருந்து வந்ததெனத் தெரியவில்லை.
மருண்ட விழிகளோடு
இறகுக்குள் ஒடுங்கி உயிர் பதற அம்ர்ந்திருந்த அது,
ஒருமுறை வலிய பூட்ஸ்காலின் கீழே
சுருண்டு கதறிய நான்தான்.
தானிய மணிகளைக் கொத்திக்கொண்டு
கவண்கற்களுக்கு தப்பிப்பறந்த சாகஸத்தின் பழங்கதையை
அது மறக்கவே விரும்புகிறது.
நிசப்தமான மனிதர்கள் வாழும்
நிசப்தமான உலகில்
கீச்சுமூச்சு கூடாதென்பதை உடைந்த மூக்கு அதற்கு தெரிவித்துவிட்டது
மழை குறைந்து நின்றதும் அது கிளப்பிப்போனது.
அதன் இறக்கைகள் எதிலும் காயங்களில்லை.
கால்கள் எதுவும் முடமாகவில்லை.
என்றாலும் அது மெல்ல மெல்ல நடந்து போனது.
அப்போது
சிட்டுகுருவி என்ற பெயர் அதை விட்டுவிட்டு
பறந்துபோனது.