
ஒரு அடைமழை நாளில்
சிட்டுக்குருவியொன்றை சந்தித்தேன்.
தொப்பர நனைந்திருந்த அது
ஒரு மரக்கிளையின் இலைமறைவில் அமர்ந்து நடுநடுங்கிக்கொண்டிருந்தது.
உடைந்த அதன் மூக்கிலிருந்து இரத்தம் வழிந்து கொண்டிருந்தது.
சிட்டுக்குருவிகள் வேகமாக அழிந்து வருகிற இந்த நாட்களில்
அது எங்கிருந்து வந்ததெனத் தெரியவில்லை.
மருண்ட விழிகளோடு
இறகுக்குள் ஒடுங்கி உயிர் பதற அம்ர்ந்திருந்த அது,
ஒருமுறை வலிய பூட்ஸ்காலின் கீழே
சுருண்டு கதறிய நான்தான்.
தானிய மணிகளைக் கொத்திக்கொண்டு
கவண்கற்களுக்கு தப்பிப்பறந்த சாகஸத்தின் பழங்கதையை
அது மறக்கவே விரும்புகிறது.
நிசப்தமான மனிதர்கள் வாழும்
நிசப்தமான உலகில்
கீச்சுமூச்சு கூடாதென்பதை உடைந்த மூக்கு அதற்கு தெரிவித்துவிட்டது
மழை குறைந்து நின்றதும் அது கிளப்பிப்போனது.
அதன் இறக்கைகள் எதிலும் காயங்களில்லை.
கால்கள் எதுவும் முடமாகவில்லை.
என்றாலும் அது மெல்ல மெல்ல நடந்து போனது.
அப்போது
சிட்டுகுருவி என்ற பெயர் அதை விட்டுவிட்டு
பறந்துபோனது.
Comments